தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனைகளில் முதன் முறையாக சென்னை அரசு பொது மருத்துவமனையில் ரூ.55 லட்சம் மதிப்பில் இருதயம் மற்றும் நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சைக்கு என பிரத்தியேக அறுவை அரங்கம் மற்றும் தீவிர சிகிச்சை பிரிவினை மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர் 08.10.2018 திங்கள்கிழமை துவக்கி வைத்தார்.
பின்னர் பேசிய அவர், சென்னை மருத்துவ கல்லூரியில் முதல் இருதய மாற்று அறுவை சிகிச்சை 2009-ல் வெற்றிகரமாக செய்யப்பட்டு இதுவரை 8 இருதயம் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
இந்த அறுவை சிகிச்சை முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் செய்யப்படுகிறது. கடந்த 5 ஆண்டுகளில் முதல்- அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் மூலம் சுமார் 15,000 பயனாளிகளுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு ரூ.28 கோடி இத்துறை ஈட்டியுள்ளது என்றார்.
ராஜீவ்காந்தி மருத்துவமனையின் டீன் ஜெயந்தி, இந்த சிகிச்சைப் பிரிவு ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் உள்ளது. இதனை இனிமேல் சிறப்பாக கொண்டு செல்ல நாங்கள் பாடுபடுவோம் என்றார்.