Skip to main content

அதிமுக ஆட்சிக்கு களங்கம்! - ஓ.பி.எஸ். ஆத்திரம்!

Published on 08/09/2018 | Edited on 08/09/2018


“செயற்கையாக, சவால்விடும் தொனியில் பொய்பொய்யாகப் பேசிவரும் அரசியல் தலைவர்களை டிவி ஸ்க்ரீனில் பார்க்கும்போது, என்னையும் அறியாமல் டென்ஷன் ஆகி, ரத்த அழுத்தம் கூடிவிடுகிறது.” என்றார் அந்த ஓய்வுபெற்ற தமிழ் ஆசிரியர். ‘இதையெல்லாம் சகித்துக்கொள்ளவில்லை என்றால், தங்களின் உடல்நலம்தானே கெடும்? பிடிக்காத விஷயத்தை மனதுக்குள் கொண்டு செல்லாதீர்கள். கடந்துவிடுங்கள்.’ என்றபோது, “அடப் போங்க தம்பி, அரசியல் தலைவர்களுக்கு இல்லையென்றாலும், நாட்டு நலன் குறித்த அக்கறை எனக்கு இருக்கிறதே?” என்றார் பொறுப்புணர்வுடன்.

ஆசிரியரை டென்ஷன் ஆக்கியவர் யார் தெரியுமா? நமது துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்தான். ‘அதிமுக ஆட்சிக்கு களங்கம் ஏற்படுத்த யார் நினைத்தாலும் எதிர்க்கும் முதல் நபராக நான் இருப்பேன்.’ என்று அவர் ஸ்டேட்மெண்ட் விட்டதுதான் அவருக்கு எரிச்சலை உண்டுபண்ணியிருக்கிறது. இதுகுறித்து நம்மிடம் பேசிய அந்த ஆசிரியர் –

“அன்றைய அதிமுக தலைமை கட்டவிழ்த்துவிட்ட வன்முறை தொடங்கி, ஊழல் செய்து சொத்துக்களைக் குவித்து தண்டனை பெற்றதுவரை, அத்தனையுமே கட்சிக்கும் ஆட்சிக்கும் களங்கம்தான். எதிர்த்தாரா இந்தப் பன்னீர்செல்வம்? சரி, இவராவது நேர்மையே உயிர்மூச்சு என்று வாழ்பவரா? என்று பார்த்தால், அதுவும் இல்லை. அதிமுக ஆட்சியில், ஓ.பி.எஸ். உட்பட அமைச்சரவையில் உள்ள பலர் மீதும் எந்தப்பக்கம் பார்த்தாலும், குற்றச்சாட்டுக்களும் வழக்குகளுமாக உள்ளன. குட்கா ஊழல் நாறிக்கொண்டிருக்கிறதே? சம்பந்தப்பட்டவர்களை ஓ.பி.எஸ். ஒன்றும் எதிர்க்கவில்லையே? ஒருவேளை, இப்படி நினைக்கிறாரோ? நாங்கள் ஊழல் செய்வோம்; சொத்துக்களைக் குவிப்போம்; வழக்குகளையும் சந்திப்போம். ஆனால், இதுகுறித்து வேறு எந்த அரசியல் தலைவரும் யாரும் வாய்திறக்கவே கூடாது. அப்படி பேசுவது, அதிமுக ஆட்சிக்கு களங்கம் ஏற்படுத்துகின்ற செயல். இதைத்தான் எதிர்க்கிறாரோ?

ஜெயலலிதா சமாதியில் அமர்ந்து, தர்மயுத்தம் என்று ‘பில்ட்-அப்’ தந்து ‘அமைச்சரவையில் உங்களோடு நானும் ஒட்டிக்கொள்கிறேன்; துணை முதல்வர் பதவியாவது தந்துவிடுங்கள்’ என்று ‘டிமாண்ட்’ வைத்து, துணை முதல்வர் ஆனவர் அல்லவா ஓ.பன்னீர்செல்வம்? தங்களைக் காட்டிலும் அதிமுக ஆட்சிக்கு களங்கம் ஏற்படுத்தியவர்கள் யார்? என்பதை அவர்தான் விளக்க வேண்டும்.” என்றார் சீரியஸாக.

தியாக உள்ளம் கொண்ட நல்ல தலைவர்களை வரலாறு போற்றுகிறது. ஊழல் செய்து, சொத்துக்களைக் குவிப்பதற்காகவே அரசியலில் வேரூன்றி உள்ள இன்றைய தலைவர்களை ……………………………………. கோடிட்ட இடத்தை நிரப்பிக்கொள்ளவும்.


 

சார்ந்த செய்திகள்