சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே அரசு மாணவியர் விடுதியில் தொடர்ந்து நான்கு மாணவிகள் எலிபேஸ்ட் சாப்பிட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் வாழப்பாடியில் உள்ள பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்துவந்த மாணவிகள் பலர் அரசு ஆதிதிராவிடர் நல விடுதியில் தங்கி பயின்று வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஊருக்கு செல்வதாக விடுதியில் கூறிவிட்டு நண்பர்கள் வீட்டிற்கும், கோவிலுக்கும் மாணவிகள் சென்றதாக கூறப்படுகிறது. பின்பு பள்ளிக்கு மாணவிகள் திரும்பிய நிலையில் மாணவிகளை காணவில்லை எனப் பள்ளி தரப்பில் மாணவிகளின் பெற்றோர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. இதுதொடர்பாக பள்ளிக்கு சம்பந்தப்பட்ட மாணவிகளின் பெற்றோர்கள் வந்த நிலையில் மாணவிகளை பெற்றோரும், ஆசிரியர்களும் கண்டித்துள்ளனர். இதனால் மன உளைச்சலுக்கு உள்ளான மாணவிகள் 4 பேரும் எலி பேஸ்டை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளனர். தற்பொழுது மாணவிகள் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம், காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ அபிநவ் ஆகியோர் நேரில் மாணவிகளிடம் விசாரணை நடத்தினர்.