Skip to main content

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை போராட்டம் ஓயாது: மு.க.ஸ்டாலின்

Published on 13/04/2018 | Edited on 13/04/2018
Stalin


காவிரி உரிமை மீட்பு பயணம் நிறைவு பொதுக்கூட்டம் கடலூர் மஞ்சை நகர் மைதானத்தில் கடலூர் கிழக்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தலைமையில் நேற்று மாலை நடைபெற்றது. தி.மு.க தலைமையில் அனைத்து கட்சி தலைவர்களுடன் மத்திய அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்பாட்டமும் நடைபெற்றது.

கூட்டத்திற்கு பல்வேறு கிராமங்களில் உள்ள விவசாயிகள், பொதுமக்கள் காவிரி தண்ணீர் பெண்ணையாற்றின் வழியாக காய்ந்த கரும்பு சோகை, மணிலா செடிகள், நெல் நாற்று உள்ளிட்டவைகளுடன் பேரணியாக வந்தனர்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை போராட்டம் ஓயாது என்று கூட்டத்தில் பேசிய மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவஹருல்லா, விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் இரா.முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கே.பாலகிருஷ்ணன், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி உள்ளிட்ட தலைவர்கள் பேசினர்.
 

Stalin


மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேசும்போது, "என்று தேர்தல் வந்தாலும் ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமையும். திராவிட இயக்கத்தை எந்த சக்தியாலும் அழிக்க முடியாது. நான்கு ஆண்டுகளில் இல்லாத எதிர்ப்பை இன்று பிரதமர் தமிழகத்தில் சந்தித்தார். மேகதாது அணை கட்டப்பட்டால் 19 மாவட்டம் பஞ்ச பிரதேசமாக மாறும். மேலாண் வாரியம் அமைந்தால் யாரும் புதிய அணை கட்ட முடியாது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தமிழகத்திற்கு துரோகம் செய்துவிட்டார். ஒருகாலும் மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காது" என்றார்.

" உச்சநீதிமன்ற தீர்ப்பை மத்திய அரசு மதித்தால் நாங்களும் கர்நாடக காங்கிரஸ் அரசை வலியுறுத்துவோம், ராகுல் காந்தியிடம் வலியுறுத்துவோம். மாநில அரசு அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி போடப்பட்ட பிரதமரை பார்த்து முறையிடும் தீர்மானம் என்ன ஆனது? ஜெயலலிதா முதல்வராக இருந்து பிரதமரை சந்திக்க நேரம் கேட்டு கொடுக்காமல் இருந்து தமிழகம் வந்து இருக்க முடியுமா? எல்லோருக்கும் 15 லட்சம் கொடுப்பதாக கூறி மோடி ஆட்சியை பிடித்தார். எம்.எல்.ஏக்களால் எம்எல்ஏக்களுக்காக நடத்தப்படும் ஆட்சி தமிழக ஆட்சி, பணக்காரர்களுக்காக பணக்காரர்கள் நடத்தும் ஆட்சி மத்திய ஆட்சி. தமிழகத்திலும் மத்தியிலும் ஆட்சி மாறினால் தமிழக நலன் காக்கப்படும் என காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கூறினார்.

தி.மு.க செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் பணியில் மத்திய அரசு உடனடியாக ஈடுபட வேண்டும். அதற்கு மாநில அரசு உரிய அழுத்தம் தர வேண்டும் என்பதைச் சுட்டிக்காட்டி குரல் கொடுத்து வருகிறோம். அதற்காகவே அனைத்துக் கட்சிகள் கூட்டம் நடத்தி, அதில் எடுத்த தீர்மானங்களை நிறைவேற்றி வருகிறோம். சாலை மறியல், உண்ணாவிரதம், ரயில் மறியல் உள்பட பல போராட்டங்களை நடத்தியுள்ளோம். பொது வேலைநிறுத்தம் 100 சதவீதம் வெற்றி பெற்றுள்ளது.
 

Stalin


காவிரி உரிமை மீட்புப் பயணத்தை 2 குழுக்களாகப் பிரித்து நடத்தினோம். ஏனெனில், காவிரி டெல்டா பகுதி மக்களுக்கு காவிரி மேலாண்மை வாரியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த இந்தப் பயணம் நடைபெற்றது. ஆனால், பொதுமக்கள் அதிகமான விழிப்புணர்வை பெற்றுள்ளதை இந்தப் பயணத்தின் மூலமாக அறிய முடிகிறது.

தமிழகத்துக்கு வரும் பிரதமருக்கு கருப்புக் கொடி காட்ட முடிவு செய்தோம். அதனால், அவர் சாலை வழிப் பயணத்தை தவிர்த்து வான்வழியாக வந்துள்ளார். பிரதமர்களாக நேரு, இந்திரா காந்தி இருந்தபோது அவர்களை எதிர்த்து கருப்புக்கொடி காட்டியுள்ளோம். அதை அவர்கள் மதித்து அதற்கான பதிலைத் தந்தார்கள். ஹிந்தியை திணிக்கமாட்டோம் என்ற உத்தரவாதத்தை ஜவாஹர்லால் நேரு அளித்தார். நெருக்கடி நிலை பிரகடனப்படுத்தியது தவறு என்று இந்திரா காந்தி பின்னர் ஒப்புக் கொண்டார்.
 

Stalin


காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பாக தமிழக ஆளுநரை இன்று (ஏப். 13) சந்திக்கிறோம். அவருக்கு எதிராக கருப்புக் கொடி போராட்டம் நடத்துகிற போதிலும், அவர் மத்திய அரசின் பிரதிநிதி என்பதால் அவரைச் சந்திக்கிறோம். இதனால், இன்று நடைபெறுவதாக இருந்த வாகனப் பேரணியை ரத்து செய்துள்ளோம்.

காவிரி மேலாண்மை வாரியம் அமையும் வரையில் இந்தப் போராட்டம் தொடரும். இந்தப் பயணத்தை தொடங்கும் முன்பு கலைஞரை சந்தித்தேன். உடல் நலிவுற்று, அடுத்தவர் உதவியை எதிர்பார்த்திருக்கும் நிலையிலும் என்னை ஆசிர்வதித்து அனுப்பி வைத்தார். எனவே, வெற்றி பெறும் வரையில் போராடுவோம்" என்றார் அவர்.

சார்ந்த செய்திகள்