Skip to main content

கள்ளச்சாராய உயிரிழப்பு; தேமுதிக போராட்டம் அறிவிப்பு!

Published on 21/06/2024 | Edited on 21/06/2024
struggle Announcement DMDK party for kallakurichi incident

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கிக் கொண்டிருக்கிறது. சிகிச்சையில் இருப்பவர்களில் பலர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து வருகின்றனர். இதனால் இறப்புகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் கள்ளச் சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 49 ஆக உயர்ந்துள்ளது. இதுவரையில் கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் 27 பேரும், சேலம் மருத்துவமனையில் 15 பேரும், விழுப்புரம் மருத்துவமனையில் 4 பேரும், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் 3 பேர் என மொத்தம் 49 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 4 பெண்களும் அடங்குவர். மேலும் 89 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இத்தகையச் சூழலில் கள்ளச்சாராய மரண சம்பவத்தைக் கண்டித்து அதிமுக, விசிக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என எற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் போதையில்லா தமிழகத்தை உருவாக்கத்தவறிய திமுக அரசைக் கண்டித்து தேமுதிக சார்பில் ஜூன் 25 இல் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “திமுக அரசின் நிர்வாகச் சீர்கேட்டைக் கண்டித்து தேசிய முற்போக்கு திராவிடக் கழகத்தின் சார்பாக (25-02024) செவ்வாய்க்கிழமை அன்று காலை 10.00 மணி அளவில் மாவட்ட தலைநகரங்களில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடக்க இருக்கிறது.

இதில் மாவட்ட கழக செயலாளர்கள், உயர் மட்ட குழு உறுப்பினர்கள், அனைத்து ஒன்றிய நகர பேரூர் கழக கிளைக் கழக நிர்வாகிகள், தொண்டர்கள், சார்பு அணி நிர்வாகிகள், மகளிர் அணி, பொதுமக்கள் என அனைவரும் பெருமளவில் கலந்து கொண்டு இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தை மாபெரும் வெற்றி ஆர்ப்பாட்டமாக நடத்தித் தர வேண்டும் என்று தேமுதிக சார்பாகக் கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சார்ந்த செய்திகள்