Skip to main content

"உரம் தொடர்பான தகவல்களைப் பெற, புகார்களைத் தெரிவிக்க மாநில அளவில் உர உதவி மையம்"- வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அறிவிப்பு!

Published on 14/12/2021 | Edited on 14/12/2021

 

"State Level Fertilizer Assistance Center for obtaining information on fertilizers and lodging complaints" - Department of Agriculture and Agrarian Welfare Announcement!

 

உரம் தொடர்பான தகவல்களைப் பெறவும், புகார்களைத் தெரிவிக்கவும் மாநில அளவில் உர உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளதாகத் தமிழ்நாடு அரசின் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அறிவித்துள்ளது. 

 

இது தொடர்பாக தமிழ்நாடு அரசின் வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் அரசுச் செயலாளர் சி.சமயமூர்த்தி இன்று (14/12/2021) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "தமிழ்நாட்டில் நெற்பயிர் 18.5 லட்சம் ஹெக்டேர் பரப்பிலும், சிறுதானியம், பயிறுவகை பயிர்கள், எண்ணெய் வித்துக்கள், கரும்பு மற்றும் பருத்தி பயிர்கள் சேர்த்து 46.2லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் பயிர் செய்யப்பட்டு வருகிறது. 

 

இதற்குத் தேவையான உரங்கள் மாநிலத்தில் உள்ள 8,100 தனியார் விற்பனை நிலையங்கள் மற்றும் 4,354 கூட்டுறவு விற்பனை மையங்கள் வாயிலாக விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்படுகிறது. மாதந்தோறும் மாநில அரசுக்கு தேவையான மானிய உரங்களான யூரியா, டிஏபி, பொட்டாஷ் மற்றும் காம்பளக்ஸ் உரங்கள் ஒன்றிய அரசால் தமிழ்நாட்டிற்கு ஒதுக்கீடு செய்யப்படுகிறது. ஒதுக்கீடு செய்யப்பட்ட உரங்கள் சுமார் 15 உர நிறுவனங்கள் வாயிலாக மாநிலத்திற்கு வழங்கப்படுகிறது. 

 

மாவட்ட அளவில் உரம் வழங்குதல், உர நகர்வு, உர கண்காணிப்பு மற்றும் தரப் பரிசோதனை முதலான பணிகள் மாவட்ட அளவிலான வேளாண்மை உதவி இயக்குநரால் (தகவல் மற்றும் தரக்கட்டுப்பாடு) கண்காணிக்கப்படுகிறது. இது தவிர விவசாயிகளுக்கு உரம் தொடர்பான கோரிக்கைகள் மற்றும் புகார்களைத் தெரிவிக்கவும், அதனை நிவர்த்திச் செய்யவும், மாவட்ட அளவில் வேளாண்மை இணை இயக்குநர் அலுவலகத்தில் உர கண்காணிப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது. 

 

தமிழ்நாடு முதலமைச்சரின் உத்தரவுப்படி, மாநில அளவில் உரம் தொடர்பான தகவல்களைப் பெறவும், புகார்களைத் தெரிவித்து நிவர்த்திச் செய்து கொள்வதற்காகவும் உர உதவி மையம், சென்னை, வேளாண்மை இயக்குநர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் தங்கள் புகார்களை வாட்ஸ் அப் செயலி மூலமாகவும் பதிவு செய்திடலாம். 

 

விவசாயிகள் தெரிவிக்கும் புகார்களைப் பதிவு செய்து உடனுக்குடன் தீர்வு வழங்குவதற்காக அலுவலர் ஒருவரும் தனியாக நியமிக்கப்பட்டுள்ளார். 

 

எனவே, வேளாண் பெருங்குடி மக்கள் உரம் தொடர்பான தகவல்கள் மற்றும் புகார்களை என்ற அலைபேசி எண்ணைத் தொடர்பு கொண்டு வாய்மொழியாகவும், வாட்ஸ் அப் செயலி மூலமாகவும் தெரிவித்து பயன்பெற கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்." இவ்வாறு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


 

சார்ந்த செய்திகள்