Skip to main content

தனது ட்விட்டர் பதிவு போலவே போலியாக உருவாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க ஆணையரிடம் ஸ்டாலின் மனு

Published on 22/03/2018 | Edited on 23/03/2018

 

ss

 

தமிழக எதிர்க்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின்  புகாரினை கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, எம்.பி.,  மற்றும் தலைமைக் கழக சட்ட ஆலோசகர் மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ ஆகியோர் காவல்துறை ஆணையரிடம் நேரில் அளித்தனர்.

 


தனது ‘ட்விட்டர்’ பதிவு போலவே போலியாக உருவாக்கி, போலிப் பதிவுகளை பதிவிட்டு, நான் சொல்லாத செய்திகளை ஊடகங்கள் வெளியிட்டதாக சமூக வலைதளங்களில் போலி பதிவிட்டு வருபவர்கள் மீது சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் உடனடியாக உரிய சட்ட நடவடிக்கை எடுத்திட  தமிழக எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் புகாரினை கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, எம்.பி.,  மற்றும்தலைமைக் கழக சட்ட ஆலோசகர் மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ ஆகியோர் காவல்துறை ஆணையரை  நேரில் அளித்தனர்.

 

அக்கடிதத்தின் விவரம் பின்வருமாறு:-

சமீப காலங்களில், ஒருசில சமூக விரோதிகள் என்னுடைய ‘ட்விட்டர்’ பக்கம் போலவே ஒரு போலி கணக்கை உருவாக்கி, என்னுடைய ட்விட்டரில் நான் சொல்லாத கருத்துக்களை நான் சொன்னது போலவும், தமிழ்ச் சமூகத்தில் பிரிவினையை உண்டாக்கக்கூடிய வகையிலும் ஒரு போலிப் பதிவை உருவாக்கி, அதனை வாட்ஸ்அப்,  முகநூல் மற்றும் பிற சமூக வலை தளங்களிலும் பதிவிட்டு வருகின்றனர்.

 

திராவிட முன்னேற்ற கழகத்தின் மீதும், என் மீதும் அரசியல் காழ்ப்புணர்வு கொண்டவர்கள், எனக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையிலும்,  திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாண்பினை குலைத்திடும் வகையிலும், சமூக அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும்  தீய எண்ணத்துடனும் இந்த விஷமச் செயலை செய்து வருகின்றனர்.

 

இந்த சமூக விரோதிகள் இது போன்ற, நான் சொல்லாத கருத்துக்களை சொல்லியதாகவும், அந்தக் கருத்துக்களை சில தொலைக்காட்சி மற்றும் ஊடகங்களில் செய்திகள் வெளிவந்தது போலவும் சித்தரித்து சமூக வலைதளங்களில் பரப்பி வருகிறார்கள். அத்தகைய விஷமச் செய்திகளின் நகல்களை, தாங்கள் விரைந்து நடவடிக்கை எடுக்க இத்துடன் இணைத்துள்ளேன். இத்தகைய செயல் தகவல் தொழில் நுட்பச் சட்டம் பிரிவு 66(A)-ன்படியும், இந்திய தண்டனை சட்ட பிரிவுகளின் படியும் தண்டனைகுரிய குற்றமாகும்.

 

எனவே என்னுடைய ட்விட்டர் பதிவு போலவே போலியாக உருவாக்கி போலிப்பதிவுகளை பதிவிட்டு, நான் சொல்லாத செய்திகளை ஊடகங்கள் வெளியிட்டதாக சமூக வலைதளங்களில் போலி பதிவிட்டு வருபவர்கள், மீது உடனடியாக உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.

சார்ந்த செய்திகள்