சிலர் கூறுவது போல் நான் இங்கு பணத்தை எடுத்துவரவில்லை, மாறாக தமிழ்நாட்டு மக்களின் மனதை எடுத்துவந்தேன் என்று அமீரகத்தில் தமிழர்களிடையே பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
உலக முதலீட்டார்களை சந்திக்கும் வகையில் நான்கு நாள் பயணமாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அமீரகத்திற்கு கடந்த 24ம் தேதி சென்றார். அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட அவர், முன்னணி நிறுவனங்களோடு புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டார். சுமார் 3 ஆயிரம் கோடிக்கு அதிகமான அளவுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாக தமிழக அரசின் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், முதல்வரின் பயணம் குறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் பாஜக தலைவர் அண்ணாமலை கடும் விமர்சனத்தை முன்வைத்துள்ளனர். முதல்வர் குடும்பச் சுற்றுலா சென்றுள்ளதாக இருவரும் விமர்சனம் செய்திருந்தனர்.
இந்நிலையில் இன்று அபுதாபியில் வெளிநாடு வாழ் தமிழர்களிடம் உரையாற்றிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், " சிலர் என்னுடைய இந்த பயணத்தை காழ்ப்புணர்ச்சியின் காரணமாக விமர்சனம் செய்து வருகிறார்கள். நான் இங்கு பணத்தை எடுத்துவரவில்லை, ஆனால் தமிழ்நாட்டு மக்களின் மனதை என்னுடன் கொண்டு வந்துள்ளேன். வெளிநாட்டு பயணத்தில் நான் அடைந்த வெற்றியை சிலரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அதனால் உண்மைக்கு மாறான தகவல்களை பேசுகிறார்கள். காலம் அவர்களுக்கு பதிலடி கொடுக்கும்" என்றார்.