Skip to main content

தடுப்பணை கட்டக்கோரி ஸ்ரீதர் வாண்டையார் போராட்டம்!

Published on 06/08/2022 | Edited on 06/08/2022

 

jlk;

 

சிதம்பரம் அருகே பெரியக்காரமேடு பகுதியில் நிரந்தர தடுப்பணை கட்ட வலியுறுத்தி ஸ்ரீதர் வாண்டையார் பொதுமக்களுடன் பொதுப்பணித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டார்.

 

மேட்டூர் அணையிலிருந்து திறந்து விடப்படும் உபரி நீர் கல்லணை மற்றும் கீழணை வழியாக கொள்ளிடம் ஆற்றில் வினாடிக்கு 2 லட்சம் கன அடிக்கு மேல் உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்நிலையில் சிதம்பரம் அருகே உள்ள பெரியகாரமேடு பகுதியில் கொள்ளிடம் ஆற்றுக் கரையில் அரிப்பு ஏற்பட்டுள்ளதால் எப்போது வேண்டுமானாலும் கரை உடைப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. கரை உடைந்தால்  கரையோர பகுதியில் உள்ள பெரியக்காரமேடு, சின்னக்காரமேடு, கீழப்பெரும்பை, சிந்தாம்பாளையம், இளந்திரமேடு, தெற்கு பிச்சாவரம், வீரன்கோவில் திட்டு உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட  கிராம மக்கள் பெரும் ஆபத்தில் சிக்கிக்கொள்ளும் நிலை ஏற்படும். எனவே ஒவ்வொரு ஆண்டும் இதேபோல் மழை இல்லாத காலங்களில் உபரி நீரால் விளைநிலங்கள் மற்றும் பொதுமக்களின் வீடுகள் பாதிக்கப்படுகிறது. 

 

இதற்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்தும் வகையில் தடுப்புச்சுவர் கட்ட வேண்டும் என்று மூவேந்தர் முன்னேற்றக் கழகத் தலைவர் ஸ்ரீதர் வாண்டையார் அப்பகுதியில் உள்ள 5-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் 200-க்கும் மேற்பட்டவர்களை ஒன்று திரட்டி சிதம்பரம் பொதுப்பணித்துறை அலுவலகத்தில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து சிதம்பரம் கோட்டாட்சியர் ரவி மற்றும் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் காந்தரூபன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது தடுப்புச்சுவர் கட்டுவது உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கான திட்டமதிப்பீடு அனுப்பப்பட்டுள்ளதாக கூறி அதற்கான ஆதாரத்தைக் காண்பித்தனர். பின்னர் இதனை ஏற்றுப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.
 


 

சார்ந்த செய்திகள்