Skip to main content

'வடமாநிலத் தொழிலாளர்களுக்காக பிரத்தியேக உதவி மையம்' - திருப்பூர் மாவட்ட எஸ்பி அறிவிப்பு

Published on 04/03/2023 | Edited on 04/03/2023

 

'Special Help Center for North State Workers'- Tirupur District SP

 

திருப்பூரில் வடமாநிலத் தொழிலாளர்கள் தாக்கப்பட்டதாக வெளியான தகவல்கள் தொடர்பான விவகாரத்தில், வதந்தி பரப்பியவர் மீது பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்பது, சமூக வலைதளங்களில் வதந்தி பரப்புவது உள்ளிட்ட நான்கு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் வடமாநிலத் தொழிலாளர்களுக்காக பிரத்தியேக உதவி மையம் திறக்கப்பட்டுள்ளது.

 

முன்னதாக பீகார் முதல்வர் நிதிஷ்குமார், “தமிழகத்தில் பணிபுரியும் பீகார் தொழிலாளர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் குறித்து நான் செய்தித்தாள்களில் அறிந்தேன். தமிழக அரசுடன் பேசி தமிழகத்தில் வசிக்கும் பீகார் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு பீகார் தலைமைச் செயலாளர் மற்றும் காவல்துறை இயக்குநருக்கு நான் உத்தரவிட்டுள்ளேன்” என ட்வீட் செய்திருந்தார். இதையடுத்து, வெளியான வீடியோக்கள் போலி என தமிழக டிஜிபி வீடியோ வெளியிட்டு விளக்கமளித்திருந்தார்.

 

இதனைத் தொடர்ந்து பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ஊரக வளர்ச்சித்துறை செயலாளர் பாலமுருகன், தொழிலாளர் நலத்துறை செயலாளர் உள்ளிட்ட 4 பேர் கொண்ட ஐஏஎஸ், ஐபிஎஸ் குழு சென்னை வந்துள்ளது. அவர்கள் தமிழக தொழிலாளர் நலத்துறை செயலாளர் உள்ளிட்ட உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த இருக்கின்றனர். மேலும், பீகாரைச் சேர்ந்த மக்கள், பணி செய்யும் இடத்திற்கே சென்று அவர்களது பணி சூழ்நிலை மற்றும் வசதிகள் குறித்து விசாரிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

இந்நிலையில், திருப்பூரில் இருந்து வெளி மாநிலத்தவர்கள் வெளியேறி வருவதாகத் தகவல் வெளியானது.  அதைத் தொடர்ந்து திருப்பூர் மாவட்ட எஸ்பி சஷாங்க் சாய் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 'வடமாநிலத் தொழிலாளர்கள் தாக்கப்பட்டதாக பரவும் வீடியோ போலியானது. இதற்காக தமிழ்நாடு காவல்துறை ஏற்கனவே தமிழ்நாடு சோசியல் மீடியா சேனல் வழியாக செய்தியை வெளியிட்டு இருக்கிறார்கள். வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம். வடமாநிலத் தொழிலாளர்களுக்காக பிரத்தியேக உதவி மையம் திறக்கப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில்  இந்த ஸ்பெஷல் செல் 24 மணி நேரமும் இருக்கிறது. ஏதேனும் பிரச்சனை என்றால் தொடர்புகொள்ள வேண்டிய எண்கள்: 94981-01300, 0421-2970017' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்