Skip to main content

விபத்துக்குள்ளான ஆட்சியர் சென்ற கார்..!

Published on 24/04/2021 | Edited on 24/04/2021

 

Sivagangai Collector car accident

 

சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு முடிவடைந்து வாக்கு எண்ணிக்கைக்காக தமிழகம் காத்திருக்கிறது. 'ஸ்ட்ராங் ரூம்' எனப்படும் கட்டுப்பாட்டு அறையில் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன. வரும் மே 2ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட இருக்கின்றன. அதன்படி சிவகங்கை மாவட்டத்தில் காரைக்குடி அழகப்பா பொறியியல் கல்லூரியில் ஒரு வாக்கு எண்ணும் மையம் அமைக்கப்பட்டுள்ளது. 

 

இந்நிலையில், இன்று (24.04.2021) சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மதுசூதனன், காரைக்குடி அழகப்பா பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டிருக்கும் வாக்கு எண்ணும் மையத்தை ஆய்வு செய்ய சென்றுகொண்டிருந்தார். அப்போது காளகண்மாய் எனும் பகுதியில், ஆட்சியர் சென்றுகொண்டிருந்த காரின் முன்பக்க டயர் எதிர்பாராதவிதமாக வெடித்துள்ளது. இதில் கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. கார் விபத்துக்குள்ளானதும், காரிலிருந்த உயிர் காக்கும் காற்று பை (பலூன்) செயல்பட்டதால் ஆட்சியருக்கு சிறு காயங்களே ஏற்பட்டன. 


 

சார்ந்த செய்திகள்

Next Story

ஸ்ட்ராங் ரூம் சிசிடிவி கேமராக்கள் செயலிழப்பு குறித்து நீலகிரி ஆட்சியர் விளக்கம்!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Nilgiris Collector Explains Strong Room CCTV Cameras Malfunction

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனையடுத்து வாக்கு பெட்டிகள் அனைத்தும் ஸ்ட்ராங் ரூம் எனப்படும் ஐந்து அடுக்கு பாதுகாப்பு அறைக்குள் வைக்கப்பட்டுள்ளது.

இத்தகைய சூழலில் தான் நீலகிரியில் ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் திடீரென செயலிழந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. நீலகிரி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளது. 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அருகிலுள்ள அறையிலிருந்து கண்காணிப்பதற்காக அனைத்து அரசியல் கட்சியினருக்கும் பொதுவாக ஒரு அறை ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று (27.04.2024) மாலை திடீரென 173 சிசிடிவி கேமராக்கள் செயலிழந்தது. பின்னர் சுமார்  20 நிமிடங்களுக்கு பிறகு மீண்டும் சிசிடிவி கேமராக்கள் வழக்கம் போல் செயல்பட தொடங்கின. 

Nilgiris Collector Explains Strong Room CCTV Cameras Malfunction

இந்நிலையில் வாக்கு இயந்திரம் வைக்கப்பட்ட அறையில் சிசிடிவி செயலிழந்தது குறித்து நீலகிரி மாவட்ட ஆட்சியரும், நீலகிரி மக்களவைத் தொகுதியின் தேர்தல் நடத்தும் அலுவலருமான அருணா செய்தியாளர்களை சந்தித்து விளக்கமளித்தார். அப்போது, “ வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள இடத்தில் அதிக வெப்பம் மற்றும் காற்றோட்டம் இல்லாத காரணத்தினால் நேற்று (27.04.2024) மாலை 6.17 முதல் 6.43 வரை 20 நிமிடங்களுக்கு 173 கண்காணிப்பு கேமராக்களும் செயல் இழந்துவிட்டன. அந்தக் குறிப்பிட்ட 20 நிமிடங்களுக்கு எந்தவித கண்காணிப்பு கேமரா பதிவுகளும் இல்லை.

அதாவது அதிக வெப்பத்தால் ஷார்ட் சர்கியூட் ஏற்பட்டு சிசிடிவி கேமராவில் செயலிழப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் எந்தவித முறைகேடும் நடக்க வாய்ப்பில்லை. வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக உள்ளன. அதில் எந்த சந்தேகமும் தேவையில்லை. மேலும் இது குறித்து சந்தேகம் இருந்தால் கட்சியினரை அழைத்துச் சென்று காட்ட தயாராக இருக்கிறோம். மத்திய பாதுகாப்பு படையினர் உள்ளிட்ட 3 கட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதனால் பாதுகாப்பு குறைபாடுக்கு 200 சதவீதம் வாய்ப்பு இல்லை. எதிர்காலத்தில் இதுபோல் எந்தப் பிரச்சனைகளும் ஏற்படாமல் இருக்க தேவையான அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார். நீலகிரி மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் ஆ.ராசாவும், அதிமுக சார்பில் லோகேஷ் தமிழ்ச்செல்வனும், பாஜக சார்பில் மத்திய இணையமைச்சர் எல்.முருகனும், நாம் தமிழர் கட்சி சார்பாக ஜெயக்குமாரும் போட்டியில் உள்ளது குறிப்பிடத்தகது. 

Next Story

அடுத்தடுத்து நடந்த சம்பவம்; சாலையின் நடுவே கொழுந்துவிட்டு எரிந்த கார்கள்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
ad

அரியலூர் அருகே உள்ள செட்டி திருக்கோணம்  கிராமத்தைச் சேர்ந்தவர் ராமசாமி. இவர் மனைவி செல்வம்பாள். இருவரும் பிரிங்கியம் கிராமத்தில் நடைபெற்ற உறவினர் வீட்டு வளைகாப்பு நிகழ்ச்சிக்காகத் தங்களது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். கருங்காலி கொட்டாய் பகுதியில் உள்ள பஸ் நிறுத்தம் அருகே சாலையில் சென்று கொண்டிருந்த ராமசாமி  திடீரென சாலையில் இருந்து திரும்பியுள்ளார். அப்போது இரு சக்கர வாகனத்தில் வந்துகொண்டிருந்த ராமசாமி மீது பின்னால் வந்த கார் ஒன்று வேகமாக மோதியுள்ளது. இதில் சம்பவ இடத்திலேயே ராமசாமி உயிரிழந்தார், அவரது மனைவி படுகாயம் அடைந்தார்.

இருசக்கர வாகனத்தின் மீது மோதிய காரை நெய்வேலியைச் சேர்ந்த இசக்கி முத்து என்பவர் ஓட்டிவந்துள்ளார். இந்த நிலையில் இசக்கி முத்து காரின் பின்னால் சிதம்பரத்தைச் சேர்ந்த ஜெயக்குமார் என்பவர் காரில் வந்துள்ளார். அவர் விபத்து நடந்த காரின் மீது மோதாமல் இருக்க, தனது காரை இடதுபுறமாக திருப்பியுள்ளார். அந்த நேரத்தில் ஜெயங்கொண்டத்தைச் சேர்ந்த அறிவொளி என்பவர் எதிரே காரில் வந்து கொண்டிருக்க, அவர் கார் மீது ஜெயக்குமார் கார் மோதியுள்ளது. எதிர்பாராத விதமாக இரு கார்களும் நேருக்கு நேர் மோதியதில் தீ பற்றியது. இதனால் காரில் இருந்தவர்கள் அவசர அவசரமாக இறங்கி உயிர்தப்பியுள்ளனர்.

இரு கார்களும் சாலையில் கொழுந்துவிட்டு எரிந்துகொண்டிருக்க, தகவலின் பேரில் உடனடியாக விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் எரிந்து கொண்டிருந்த கார்களின் மீது தண்ணீரைப் பாய்ச்சி தீயை அணைத்தனர். இதனால்  அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.  இருசக்கர வாகனத்தின் மீது கார் மோதாமல் தப்பிக்க முயன்ற போது, இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனையடுத்து விபத்தில் உயிரிழந்த ராமசாமி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீசார், விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.