Skip to main content

சிங்காரச் சென்னை 2.0, கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டம் - தமிழக பட்ஜெட்டில் வெளியான அறிவிப்புகள்!

Published on 13/08/2021 | Edited on 13/08/2021

 

Singara Chennai 2.0, Kalaingar Urban Development Project - Announcements in the Tamil Nadu Budget!

 

தமிழக சட்டப்பேரவையில் முதன்முறையாக காகிதமில்லா இ-பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. தாக்கலாகும் இ-பட்ஜெட்டை, கணினித் திரை மூலம் எம்எல்ஏக்கள் அறிந்து கொள்ளும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

 

அதிமுக உறுப்பினர்கள் பேசவாய்ப்பளிக்கக் கோரி அமளியில் ஈடுபட்ட நிலையில், அமளிகளுக்கு இடையே பட்ஜெட்டை நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் வாசிக்கத் துவங்கினார். ஆனால் சில நொடிகளிலேயே அதிமுக உறுப்பினர்கள் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

 

தொடர்ந்து நிதியமைச்சர் உரையில், ''6 மாதங்களுக்கு வலுவான அடித்தளம் அமைக்கும் வகையில் திருத்திய பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது. நிதியாண்டின் எஞ்சிய 6 மாதங்களுக்கு மட்டுமே இந்த பட்ஜெட் பொருந்தும். அரசின் நிதிநிலையைச் சீர்படுத்துவோம் என மக்களுக்கு நாங்கள் வாக்குறுதி அளித்துள்ளோம். தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதிகளுக்கு முன்னுரிமை அளித்து படிப்படியாக நிறைவேற்றுவோம். ஒரே ஆண்டில் முடிக்க இயலாத அளவுக்குப் பணி மிகக்கடுமையாக உள்ளது. நிதிச் சிக்கலை சீர் செய்ய 2, 3 ஆண்டுகள் தொடர்ந்து முயற்சி மேற்கொள்ளப்படும். மாநில அரசின் நிதியைத் திசைதிருப்பும்  வகையில் ஒன்றிய அரசின் வரிமுறை இருக்கிறது.

 

2.05 லட்சம் ஹெக்டேர் நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டது, தணிக்கையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பொதுநிலங்களை முறையாகப் பயன்படுத்த 'அரசு நில மேலாண்மை அமைப்பு' உருவாக்கப்படும். எந்த விதமான பேரிடரையும் சந்திக்கும் நிலையில் மாநிலம் உள்ளதை உறுதி செய்வோம். தமிழ் வளர்ச்சித்துறைக்கு 88.26 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தொல்லியல் துறைக்கு 29.43 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தொல்லியல் ஆய்வுகளை அறிவியல் முறையில் மேற்கொள்ள 5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கீழடி, சிவகளை, கொடுமணல் ஆகியவை பாதுகாக்கப்பட்ட தொல்லியல் தளங்களாக அறிவிக்கப்படும்.

 

தமிழகக் காவல்துறைக்கு 8,930.29 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழக காவல்துறையில் 14,137 பணியிடங்கள் உருவாக்கப்படும். தீயணைப்புத் துறைக்கு 405.13 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தற்பொழுதுள்ள 1985ஆம் ஆண்டு, 'தீயணைப்புச் சேவைகள்' சட்டம் முழுமையாக மாற்றியமைக்கப்படும். சாலை பாதுகாப்பிற்கு 500 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. புதியதாக 6 இடங்களில் மீன்பிடி துறைமுகங்கள் அமைக்க 6.25 கோடி ரூபாய் செலவில் ஆய்வுகள் மேற்கொள்ளப்படும். 150 கோடியில் காசிமேடு துறைமுகம் மேம்படுத்தப்படும். நீதித்துறை நிர்வாகத்திற்காக 1,713.30 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

 

அனைத்து நீதிமன்றங்களுக்கும் புதிய கட்டிடங்கள் இருப்பது உறுதி செய்யப்படும். உணவு மானியத்திற்கு 8,437.57 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. காலநிலை மாற்றத்தை எதிர்த்து போராடுவது தமிழகம் போன்ற மாநிலங்களுக்குப் பெரும் சவால். எனவே 500 கோடியில் பருவநிலை மாற்ற இயக்கம் அமைக்கப்படும். 200 குளங்களின் தரத்தை உயர்த்த 111.24 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.கிராமப்புற ஏழைகளுக்கு 2021-2022 ஆம் ஆண்டில் 8,017,41 கோடி ரூபாய் செலவில் 2,89,877  கான்க்ரீட் வீடுகள் கட்டப்படும். 1.27கோடி குடும்பங்களுக்கு குடிநீர் இணைப்பு வழங்க வழிவகை செய்யப்படும். 'நமக்கு நமே' திட்டத்திற்கு 100 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

 

திருச்சியில் புதிய ஒருங்கிணைந்த பேருந்து நிலையம், வணிக வளாகம் கட்டி முடிக்கப்படும். 'கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு' திட்டத்திற்கு 1,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மூன்று இடங்களில் புதிய மேம்பாலங்கள் அமைக்கப்படும். கணேசபுரம், கொன்னூர் நெடுஞ்சாலை-ஸ்ட்ரான்ஸ் சாலை, தெற்கு உஸ்மான் சாலையில் 335 கோடி ரூபாயில் மேம்பாலங்கள் கட்டப்படும். புதிய அண்ணா மறுமலர்ச்சி திட்டத்திற்கு 1,200 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சுயஉதவி குழுக்களுக்கு 20 ஆயிரம் கோடி கடன் உதவி உறுதிசெய்யப்படும். ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு 2,350 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கொசஸ்தலை ஆற்றில் வெள்ள நீர் வடிகாலுக்கு 87 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நகராட்சி, பேரூராட்சிகளில் உள்ள மண் சாலைகள் தரமுயர்த்தப்படும். நகரங்களில் 30 மீட்டர் இடைவெளியில் ஆற்றல் மிக்க தெரு மின்விளக்கு அமைக்கப்படும். தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்திற்கு 3,954,44 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மெட்ரோ ரயில் திட்டத்தில் கோடம்பாக்கம்-பூந்தமல்லி இடையேயான சேவை 4 ஆண்டுகளுக்கு துவங்கும். தமிழ்நாட்டை மின்மிகை மாநிலம் எனக் கூறுவது தவறானது. தமிழகம் மின்மிகை மாநிலம் இல்லை. 2,500 மெகாவாட் மின்சாரத்தைச் சந்தையில் கொள்முதல் செய்தே தமிழ்நாடு அரசு சமாளிக்கிறது. மின்வாரியத்தின் கழக நிறுவனங்கள் நொடிந்து போவதில் இருந்து காப்பாற்ற நடவடிக்கை எடுக்கப்படும். வேளாண் இலவச மின்சாரம், வீட்டு மின்சார மானியத்திற்காக 19,872.77 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

 

மகளிர் இலவச பஸ் பயணத்திற்கு மானியமாக 703 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆயிரம் புதிய பேருந்துகள் வாங்க ஜெர்மன் வளர்ச்சி வங்கி உதவியுடன் 623.59 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. எம்.எல்.ஏ தொகுதி மேம்பாட்டு திட்டத்திற்கு 3 கோடி நிதி வழங்கப்படும். சீர்மிகு நகரங்கள் திட்டத்திற்கு 2,350 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஒரு லட்சத்திற்கு அதிகமான மக்கள்தொகை கொண்ட 27 நகரங்களில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்படும். பள்ளிக்கல்வித்துறைக்கு 32,599.54 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 10 கோடி ரூபாய் செலவில் 25 கலை, அறிவியல் கல்லூரிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்கப்படும். குடிநீர் இணைப்பு, சுத்தம் பசுமைக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் சிங்காரச் சென்னை 2.0 திட்டம் துவங்கப்படும்'' எனக் கூறினார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அரசு மரியாதையுடன் ஆர்.எம்.வீரப்பன் உடல் தகனம்

Published on 10/04/2024 | Edited on 10/04/2024
Cremation of RM Veerappan with state honors

எம்.ஜி.ஆர். கழகத்தின் நிறுவனரும், தமிழகத்தின் முன்னாள் அமைச்சருமான ஆர்.எம். வீரப்பன் (வயது 98) வயது மூப்பு காரணமாக சென்னையில் காலமானார். உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்தனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் பிறந்த இவர், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோருடன் நெருங்கிப் பழகியவர் ஆவார். தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரிடம் உதவியாளராக சேர்ந்து, அதன் பின்னர் கணக்காளராக பணியாற்றிவர். எம்.ஜி.ஆர். மறைவுக்கு பிறகு ஜானகி ராமச்சந்திரன் தலைமையில் அதிமுக தனி அணி உருவாகக் காராணமாக இருந்தவர். தமிழகத்தின் முன்னாள் முதல்வர்களான எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோர் தலைமையிலான அமைச்சரவையில் அமைச்சராக இருந்தவர் ஆர்.எம்.வீரப்பன் ஆவார்.

திரைப்படத் தயாரிப்பாளர் ஆகவும் இருந்துள்ளார். அதன்படி எம்.ஜி.ஆர்., நடித்த காவல்காரன், இதயக்கனி, தெய்வத்தாய், நான் ஆணையிட்டால், ரிக்சாக்காரன் உள்ளிட்ட படங்களையும் தயாரித்துள்ளார். ரஜினிகாந்த் நடித்த பாட்ஷா, மூன்று முகம், தங்கமகன், ராணுவ வீரன், பணக்காரன் போன்ற படங்களையும் தயாரித்துள்ளார். மேலும் சிவாஜி நடித்த புதிய வானம், கமல் நடித்த காக்கிச்சட்டை மற்றும் சத்யராஜ் உள்ளிட்டோர் நடித்த படங்களையும் இவரின் சத்யா மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

நேற்று மாலை சென்னை தி நகரில் உள்ள அவருடைய வீட்டில் உடலானது பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தது. அரசியல் பிரமுகர்கள், நடிகர்கள் எனப் பல தரப்பினரும் அவரது உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய நிலையில், நுங்கம்பாக்கம் மின் மயானத்திற்கு அவரது உடல் தற்பொழுது கொண்டுவரப்பட்டுள்ளது. 78 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் அவருடைய உடல் தகனம் செய்யப்பட இருக்கிறது.

Next Story

“பா.ஜ.க. வாஷிங் மிஷின் போல் செயல்படுகிறது” - அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

Published on 03/04/2024 | Edited on 03/04/2024
BJp Works like a washing machine  Minister Palanivel Thiagarajan
கோப்புப்படம்

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களை தொடங்கியுள்ளன.

இந்நிலையில், தனியார் ஆங்கில இதழில் வெளியான கட்டுரை ஒன்றில், “கடந்த 2014 ஆம் ஆண்டு மோடி பிரதமர் ஆனது முதல் ஊழல் வழக்குகளுக்கு ஆளான எதிர்க்கட்சி தலைவர்கள் 25 பேர் பா.ஜ.க.வில் சேர்ந்துள்ளனர். அவ்வாறு பா.ஜ.க.வில் சேர்ந்த 25 பேரில் 3 பேருக்கு எதிரான ஊழல் வழக்குகள் முடித்துவைக்கப்பட்டுள்ளன. 20 பேருக்கு எதிரான வழக்குகள் விசாரணை ஏதுமின்றி நிறுத்திவைக்கப்பட்டுள்ளன” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்தகைய சூழலில் மதுரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் சு. வெங்கடேசனை ஆதரித்து அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பரப்புரை மேற்கொண்டார். அப்போது அவர் தனியார் ஆங்கில இதழில் வெளியான கட்டுரையை மேற்கோள் காட்டி பேசுகையில், “அஜித் பவார், முன்னாள் மத்திய அமைச்சர் பிரபுல் பட்டேல், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அசாம் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் ஹேமந்த பிஸ்வா சர்மா, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மாநிலத்தின் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் அசோக் சவுகான் என 25 எதிர்க்கட்சி தலைவர்கள் மீது வருமான வரித்துறையினர், அமலாக்கத்துறையினர், சி.பி.ஐ போன்ற விசாரணை அமைப்புகள் வழக்குகள் தொடர்ந்தன.

அதன் பின்னர் இவர்கள் தங்களது கட்சிகளை விட்டு பா.ஜ.க.வின் இணைந்து விட்டனர்.  இவர்களின் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அனைத்து குற்ற்ச்சாட்டுகளும் ஆவியாகிப் போய்விட்டன. ஏனென்றால் பாஜகவின் வாஷிங் மெஷினில் சேர்ந்து வெள்ளையோடு வெள்ளையாகி விட்டன” எனத் தெரிவித்தார். முன்னதாக நேற்று (02.04.2024) பரப்புரை மேற்கொண்ட போது அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசுகையில், “தமிழகத்தை சேர்ந்த அமைச்சர் ஒருவர் ஜாமீன் இல்லாமல் ஓராண்டாக சிறையில் உள்ளார். அதேபோல் டெல்லி அரசின் முதல்வர் மற்றும் அமைச்சர்கள் சிறையில் உள்ளனர். இந்த அரசு தொடர்ந்தால் ஜனநாயகம் முற்றிலும் அழிந்துவிடும்” எனத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.