Skip to main content

 திருப்பணி நத்தத்தில் குடிநீரில் சாக்கடை கலப்பு- ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்

Published on 02/08/2018 | Edited on 27/08/2018

 

 

pu

 

கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே கீரப்பாளையம் ஒன்றியத்தில் திருப்பணி நத்தம் கிராமம் உள்ளது. இங்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.

 

இப்பகுதியில் உள்ள மக்களுக்கு கடந்த சில நாட்களாக குடிநீர் சரியாக வழங்குவதில்லை. மேலும் அவ்வப்போது கொஞ்சமாக கொடுக்கும் தண்ணீரில் சாக்கடை கலந்து வருகிறது,  இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. இதனால் கோபமடைந்த கிராம மக்கள்   கீரப்பாளையம் ஒன்றிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  செயலாளர் வாஞ்சிநாதன் தலைமையில்  காலி குடங்களுடன்  கீரப்பாளையம் ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு அலுவலக முன்  தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் சுத்தமான குடிநீர் வழங்காத ஒன்றிய அதிகாரிகளையும், தமிழக அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பினார்கள். இதனையறிந்த புவனகிரி காவல்துறையினர் போராட்டக்காரர்களை சமாதானப்படுத்தி அலுவலகத்திற்கு வெளியே அழைத்து வந்தனர் பின்னர் ஒன்றிய அதிகாரிகளுடன் நடந்த பேச்சுவார்த்தையில் இன்னும் ஒரு வார காலத்திற்குள் நல்ல குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி கூறியுள்ளனர். இதனை ஏற்று போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது.

 

இதுகுறித்து ஒன்றிய செயலாளர் வாஞ்சிநாதன் கூறுகையில் கடந்த ஒரு வருடமாக இந்த பிரச்சனை உள்ளது.  ஒரு வார காலத்திற்குள் அதிகாரிகள் சரி செய்வதாக கூறுகிறார்கள். அப்படி அவர்கள் சரி செய்யவில்லை என்றால் அடுத்த கட்டமாக பெரிய அளவில் கிராம மக்களை ஒருங்கிணைத்து ஒன்றிய அலுவலகத்திற்கு பூட்டு போட்டு தொடர் போராட்டத்தை நடத்துவோம் என்றார். போராட்டத்தில் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் செல்லையா,நெடுஞ்சேரலாதன், சிவராமன், முருகன் உள்ளிட்ட மார்க்சிஸ்ட் கட்சியினர், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

சார்ந்த செய்திகள்