Skip to main content

காதல் ஜோடி சயனைட் சாக்லெட் தின்று தற்கொலை! விரிவான தகவல்கள்!!

Published on 10/10/2019 | Edited on 10/10/2019

சேலத்தில் இளம் காதல் ஜோடி சயனைட் கலந்த சாக்லெட் தின்று தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

சேலம் செவ்வாய்ப்பேட்டை சாய்பாபா தெருவைச் சேர்ந்தவர் கோபி. வெள்ளிப்பட்டறை அதிபர். இவருடைய மகன் சுரேஷ் (22). பிளஸ்2 வரை படித்துள்ள சுரேஷ், தந்தையுடன் சேர்ந்து வெள்ளி கொலுசுகளுக்குத் தேவையான ஜால்ரா தயாரிக்கும் வேலைகளை கவனித்து வந்தார். 

salem lovers incident police investigation



செவ்வாய்க்கிழமை (அக். 8) மதியம் ஒரு மணியளவில், வீட்டில் இருந்து கிளம்பிச்சென்ற சுரேஷ், நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. எங்கே சென்றாலும் அடுத்த ஒரு மணி நேரத்தில் வீடு திரும்பி விடுவதை வழக்கமாக வைத்திருந்த சுரேஷ், வெகுநேரமாக வீட்டுக்கு வராததால் பெற்றோர் அவருடைய செல்போனுக்கு தொடர்பு கொண்டுள்ளனர். அப்போது அவருடைய செல்போன் அணைத்து வைக்கப்பட்டு இருந்தது. இதனால் பெற்றோர் பதற்றம் அடைந்தனர்.


பல இடங்களிலும் மகனைத் தேடி அலைந்தனர். நண்பர்கள் வீடுகளிலும் விசாரித்தனர். இந்நிலையில், இரவு 11 மணியளவில், சேலம் ஜவுளிக்கடை பேருந்து நிறுத்தம் அருகே, கோபிக்குச் சொந்தமான கார் ஷெட் முன்பு, சுரேஷ் ஓட்டிச்செல்லும் மோட்டார் சைக்கிள் நின்று கொண்டிருப்பது தெரிய வந்தது. சந்தேகத்தின்பேரில் கார் ஷெட்டை திறந்து பார்த்தபோது, அங்கு நிறுத்தப்பட்டிருந்த ஒரு காரின் பின் இருக்கையில் சுரேஷூம், அவர் அருகில் ஓர் இளம்பெண்ணும் வாயில் ரத்தமும், நுரையும் வெளியேறியபடி, அமர்ந்த நிலையில் சடலமாகக் கிடந்தனர். அவர்கள் இருவருமே அரைகுறை ஆடையில் கிடந்தனர். இதைக் கண்டு சுரேஷின் பெற்றோர் கடும் அதிர்ச்சி அடைந்தனர். 


இதுகுறித்து சுரேஷின் பெற்றோர் செவ்வாய்பேட்டை காவல்நிலையத்திற்கு தகவல் அளித்தனர். காவல் ஆய்வாளர்கள் சுந்தராம்பாள் (செவ்வாய்பேட்டை), சரவணன் (சேலம் நகரம்) மற்றும் காவலர்கள் விரைந்து வந்து சடலங்களைக் கைப்பற்றி விசாரித்தனர். உடற்கூறாய்வுக்காக சடலங்களை சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

salem lovers incident police investigation



சுரேஷ் அருகே சடலமாகக் கிடந்த இளம்பெண், சேலம் குகை மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த ரவி மகள் ஜோதிகா (20) என்பதும், தனியார் பொறியியல் கல்லூரியில் படித்து வந்ததும் காவல்துறை விசாரணையில் தெரிய வந்தது.  சுரேஷூம், ஜோதிகாவும் கடந்த இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இருவரும் சவுராஷ்டிரா சமூகத்தைச் சேர்ந்தவர்கள். ஆனால், சுரேஷ் கோடீஸ்வர குடும்பத்தைச் சேர்ந்தவர். அவரளவுக்கு ஜோதிகாவின் குடும்பம் வசதி இல்லாததால், சுரேஷின் பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர்.


இந்த நிலையில்தான் காதலர்கள் தற்கொலை முடிவை எடுத்து, உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாக காவல்துறையினர் கருதுகின்றனர். சடலம் கிடந்த காரின் பின்னிருக்கையில் சில சாக்லெட்டுகள் சிதறிக்கிடந்தன. சடலங்கள் கைப்பற்றப்படும் வரை காரின் ஏசி ஓடிக்கொண்டிருந்தது. இருக்கையில் ரத்தமும் தோய்ந்து இருந்தது. அவர்கள் இருவரும் சாக்லெட்டில் சயனைடை கலந்து சாப்பிட்டு, தற்கொலை செய்திருக்கலாம் என சந்தேகிக்கின்றனர்.  

salem lovers incident police investigation



அரை நிர்வாணமாகக் கிடந்ததை வைத்து பார்க்கையில் தற்கொலை முடிவெடுப்பதற்கு முன்பாக அவர்கள் உடலுறவு கொண்டிருக்கலாம் என்றும் சந்தேகிக்கின்றனர். எனினும், உடற்கூறு ஆய்வுக்குப் பிறகே தற்கொலைக்கு பயன்படுத்தப்பட்டது சயனைடா அல்லது வேறு ஏதேனும் விஷமா? அவர்கள் உடலுறவு கொண்டிருந்தார்களா உள்ளிட்ட விவரங்கள் தெரிய வரும். இப்போதைக்கு உடற்கூறு ஆய்வு செய்த மருத்துவர் அளித்துள்ள கிளியரன்ஸ் சான்றிதழில், காதலர்களின் மரணத்திற்கான காரணம் என்ன என்பதை குறிப்பிடவில்லை. சந்தேகம் என்றே குறிப்பிடப்பட்டு உள்ளது. 


அதேநேரம், செவ்வாய்பேட்டை காவல்நிலையத்தில், இந்த சம்பவத்தை தற்கொலை என்றே எப்ஐஆர் பதிவு செய்துள்ளனர். காதலர்கள் இருவரும் பெற்றோர் எதிர்ப்பை மீறி ஓடிச்சென்று திருமணம் செய்து கொண்டிருக்கலாம் அல்லது கண்காணா இடத்திற்குச் சென்று உயிரை மாய்த்துக் கொண்டிருக்கலாம். ஆனால் கூப்பிடு தொலைவுக்குள் எதற்காக காதலர்கள் தற்கொலை முடிவை எடுக்க வேண்டும் என்ற சந்தேகத்தையும் பலர் தரப்பிலும் ஏற்படுத்தி இருக்கிறது. காவல்துறையினர் பல்வேறு கோணங்களிலும் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர். 




 

சார்ந்த செய்திகள்

Next Story

படையெடுக்கும் புலிகள்; பாதுகாப்பு வளையத்தில் மூணாறு !

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 Invading Tigers; Munnar in the observation ring

கோடை வெயிலின் தாக்கத்தால் வனப்பகுதியை விட்டு வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேவைக்காக கிராமங்களுக்கு நுழைவது தொடர்கதையாகி வருகிறது. வனத்துறை சார்பில் வனவிலங்குகளுக்கு தண்ணீர் தொட்டிகள் திறக்கப்பட்டு வரும் நிலையில் அதையும் மீறி பல்வேறு இடங்களில் யானை, சிறுத்தை உள்ளிட்ட விலங்குகள் வனத்தை விட்டு வெளியேறி உணவிற்காக கிராமங்களுக்குள் நுழைவது வாடிக்கையாகி வருகிறது.

அண்மையில் மயிலாடுதுறையில் புகுந்த சிறுத்தை தற்பொழுது வரை மர்மமாகவே நீடித்து வருகிறது. இந்நிலையில் தமிழக-கேரள எல்லையான மூணாறு பகுதியில் சர்வ சாதாரணமாக புலி நடமாட்டம் இருப்பது அந்த பகுதி மக்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. கன்னிமலா பகுதியில் உள்ள தேயிலை எஸ்டேட் பகுதியில் புலிகள் நடமாட்டம் இருப்பதாக தோட்டத் தொழிலாளர்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தற்போது இது தொடர்பாக வெளியாகி உள்ள வீடியோ ஒன்றில் மூன்று புலிகள் தேயிலை எஸ்டேட் பகுதியில் இருந்து வனப்பகுதிக்குள் நுழைவது போன்ற வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது அந்த புலிகளை பிடிக்கும் முயற்சியில் வனத்துறையினர் இறங்கியுள்ளனர். புலிகள் நடமாட்டம் இருப்பதால் அந்தப் பகுதி மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என வனத்துறை சார்பில் அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டுள்ளது.

Next Story

“பாஜகவுக்கு தமிழகத்தின் மீது இருப்பது கோபமல்ல; தீராத வன்மம்” - சு.வெங்கடேசன்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
BJP unending anger towards Tamil Nadu says Su. Venkatesan

திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிகக் கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து தென்மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களும் அதிக கனமழையினால் பெரிதும் பாதிக்கப்பட்டது. இந்த பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கிடவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது.

அதே சமயம் மிக்ஜாம் புயல் மற்றும் தென் மாவட்ட வெள்ள பாதிப்புகளுக்கு நிவாரணம் கோரி தமிழக முதலமைச்சரும், தலைமைச் செயலாளரும் மத்திய அரசுக்கு பலமுறை கடிதம் அனுப்பியும் மத்திய அரசு  நிதி வழங்காமல் இருந்தது. இந்த நிலையில்,  தமிழ்நாட்டில் ஏற்பட்ட மிக்ஜாம் புயல் நிவாரண நிதியாக ரூ.285 கோடியை வழங்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. மேலும், தமிழகத்தில் 2023 டிசம்பர் மாதத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளுக்காக ரூ.397 கோடி வழங்கவும் மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

அதில் முதற்கட்டமாக ரூ.285 கோடி மிக்ஜாம் புயல் பாதிப்புக்கான நிதியில் இருந்து ரூ.115 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது. அதே போல், வெள்ள பாதிப்புக்காக மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ள ரூ.397 கோடி நிதியில் இருந்து ரூ.160 கோடியை தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு விடுவித்துள்ளது. அதே சமயம் கர்நாடகாவிற்கு வறட்சி நிவாரணமாக ரூ.3,454 கோடியை மத்திய அரசு அறிவித்துள்ளது.

மிக்ஜாம் புயல், வெள்ள பாதிப்புகளுக்காக தமிழ்நாடு அரசு ரூ.38,000 கோடி நிவாரணம் வழங்க கோரியிருந்த நிலையில், மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு குறைந்தபட்ச அளவில் நிவாரண நிதி வழங்கியுள்ளதாக பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் மதுரை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் சு.வெங்கடேசன் பாஜக தமிழகத்திற்கு வஞ்சனைக்கு மேல் வஞ்சனை செய்வதாக குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “கர்நாடகாவில் முதல் கட்டம் சாதகமாக இல்லை போல, வறட்சி நிவாரணம் என ரூ.3454 கோடி அறிவிப்பு. தமிழ்நாட்டிற்கு வஞ்சனைக்கு மேல் வஞ்சனை. மிக் ஜாம் புயல் மற்றும் வெள்ளத்திற்கு ரூ.275 கோடி மட்டுமே. தமிழ்நாடு  கேட்டதோ 38,000 கோடி. பாஜகவுக்கு தமிழகத்தின் மீது இருப்பது கோபமல்ல… வன்மம். தீராத வன்மம்” எனக் கடுமையாக சாடியுள்ளார்.