மேட்டூர் அணையின் உபரி நீரை, சேலம் மாவட்டம் சரபங்கா வடிநிலத்தில் உள்ள 100 ஏரிகளுக்கு நீரேற்று மூலம் தண்ணீர் கொண்டு செல்லும் திட்டத்திற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி புதன்கிழமை (மார்ச் 4) அடிக்கல் நாட்டினார். எடப்பாடி அருகே உள்ள இருப்பாளியில் புதன்கிழமை (மார்ச் 4) அடிக்கல் நாட்டி வைத்து, அவர் பேசியதாவது:
ஒரு எம்.எல்.ஏ வாகவும்,, அமைச்சராகவும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டிருந்தாலும், அவற்றில் எல்லாம் கிடைக்கப்பெறாத மகிழ்ச்சி இந்த நிகழ்ச்சியில் கிடைத்திருக்கிறது. இந்தப் பகுதி, வானம் பார்த்த பூமியாக இருக்கின்ற பகுதி. எனக்குத் தெரிந்தவரை இங்குள்ள 100 ஏரிகளும் இதுவரை வறண்டுதான் இருந்திருக்கின்றன. இதுபோன்ற ஏரிகளில் பருவ காலங்களில் பெய்கின்ற மழை நீரை நிரப்ப வேண்டும் என்பதற்காக 565 கோடி ரூபாயில் இத்திட்டம் தொடங்கப்பட்டு உள்ளது.
அடுத்த 11 மாதங்களில் இத்திட்டம் நிறைவேற்றப்பட்டு, மேட்டுப்பட்டி ஏரி நிரம்பி, இப்பகுதியில் வேளாண் பணிகள் சிறக்கும். சொன்னதைச் செய்கின்ற ஒரே அரசு இந்த அரசுதான். திட்டத்தை அறிவித்துவிட்டு ஏமாற்றுகிற அரசு எங்கள் அரசு அல்ல.
ஒன்றே முக்கால் ஆண்டுக்கு முன்பு, கடலில் வீணாகக் கலக்கின்ற மழைநீரை சேமிப்பதற்காக திட்டம் வகுக்க, அர்ப்பணிப்பு உணர்வோடு பணியாற்றக்கூடிய திறமைமிக்க 2 தலைமைப் பொறியாளர்கள், 3 கண்காணிப்புப் பொறியாளர்கள் என 5 ஓய்வு பெற்ற பொறியாளர்களைக் கொண்ட ஒரு குழுவை நியமிக்க ஆணையிட்டேன். அக்குழுவினருடன் பலமுறை ஆலோசனை நடத்தப்பட்டு, அதன் அடிப்படையில் 565 கோடி ரூபாயில் 100 ஏரிகளுக்கு தண்ணீர் கொண்டு செல்லும் திட்டம் வகுக்கப்பட்டது.
நான் முதல்வராக பொறுப்பேற்ற உடன், குடிமராமத்து திட்டத்தின் மூலமாக 100 கோடி ரூபாய் ஒதுக்கி, சோதனை அடிப்படையில் 1529 ஏரிகள் தேர்வு செய்யப்பட்டு, அதில் 1513 ஏரிகளில் பணிகள் நிறைவு பெற்றன. இத்திட்டத்திற்கு விவசாயிகளிடையே கிடைத்த வரவேற்பால், மேலும் இத்திட்டத்தை விரிவாக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். அதையடுத்து, தமிழகத்தில் உள்ள 40 ஆயிரம் ஏரிகளும் படிப்படியாக தூர்வாரப்பட்டு, கரைகள் பலப்படுத்தப்பட்டு, மதகுகள் சீரமைக்கப்பட்டு உள்ளன.
குடிமராமத்து பணிகள் முழுக்க முழுக்க விவசாயிகள் பங்களிப்புடன் நிறைவேற்றப்படுகிறது. ஆனால் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுமென்றே, திட்டமிட்டு, குடிமராமத்துத் திட்டத்தில் முறைகேடு நடந்ததாக ஒரு தவறான செய்தியை மக்களிடம் பரப்பி வருகிறார். அதை வன்மையாக கண்டிக்கிறோம்.
விவசாயிகள்தான் இந்தத் திட்டத்தை நிறைவேற்றுகின்றனர். குடிமராமத்துத் திட்டத்தில் ஏரிகள் ஆழப்படுத்தப்படுவதோடு, வண்டல் மண் விவசாயிகளின் நிலத்திற்கு இயற்கை உரமாக பயன்படுகிறது. மு.க.ஸ்டாலின், தயவு கூர்ந்து இத்திட்டம் பற்றி தெரிந்து கொண்டு பேச வேண்டும். விவசாயிகளை குறை சொல்லாதீர்கள். இத்திட்டத்தின் மூலம் ஏரிகள் தூர்வாரப்பட்டதன் விளைவாக, ஏரிகள் நிறைந்து, கோடை காலங்களில் நிலத்தடி நீர் உயர்ந்து விவசாயிகளுக்கு தேவையான நீரும், குடிப்பதற்கு தேவையான நீரும் கிடைக்கிறது.
காவேரி உபரி நீர் கடலில் கலப்பதை தடுப்பதற்காக ஆங்காங்கே கதவணைகள் கட்டுதல், பெய்கின்ற மழைநீர் ஒரு சொட்டுகூட வீணாகாமல் பாதுகாப்பதற்காக தடுப்பணைகள் அமைத்தல் போன்ற திட்டங்களைக் கொண்டுவந்து உள்ளோம்.
விவசாயிகள் செழிப்போடு வாழ வேண்டும்; விவசாயத் தொழிலாளிகளுக்கு நிரந்தர வேலை வாய்ப்புப் பெற்றுத்தர வேண்டும் என்பதுதான் லட்சியம். அந்த லட்சியத்தை நிறைவேற்றுவதுதான் எங்கள் முதல் பணி.
எதிர்க்கட்சியினர் எல்லாம் வாய்ச்சொல் வீரர்கள். நாங்கள், செயல்வீரர்கள். இன்றைக்கு, இந்தியாவிலேயே அதிகமாக தேசிய விருது பெற்ற மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. தமிழகத்தில் என்ன நடைபெற்றது என்று சில எதிர்க்கட்சித் தலைவர்கள் கேட்கிறார்கள். இவ்வளவும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற காரணத்தினால்தான் துறைகள் வாரியாக சிறப்பான திட்டங்களை நடைமுறைப்படுத்தி, முதன்மை மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது. அதற்காகத்தான் விருதுகளையும் பெற்றிருக்கிறோம்.எங்கள் மடியிலே கனமில்லை; வழியிலே பயமில்லை. எங்களுடைய மனம் திடமாக உள்ளது. எடுக்கும் முடிவுகளும் திடமானது. மக்கள்தான் எங்கள் எஜமானர்கள். அவர்கள் என்ன எண்ணுகிறார்களோ அந்த எண்ணத்தை நிறைவேற்றுவதுதான் லட்சியம்.
மேட்டூர் அணையின் முழு கொள்ளளவான 120 அடியை எட்டும்போது அணையின் இடது கரையின் நீர் பரப்பு பகுதியிலிருந்து வெள்ள நீரை, கால்வாய் மூலம் திப்பம்பட்டி பிரதான நீரேற்று நிலையத்திற்குக் கொண்டு செல்லப்படும். அங்கிருந்து மின் மோட்டார்கள் மூலம் நீரேற்றம் செய்து 12 கி.மீ. தூரத்தில் உள்ள எம்.காளிப்பட்டி ஏரிக்கு தண்ணீர் கொண்டு செல்லப்படும். அங்கிருந்து 23 ஏரிகளில் தண்ணீர் நிரப்பப்படும். இவ்வாறு 100 ஏரிகளிலும் தண்ணீர் நிரப்பப்படுவதன் மூலம் 4238 ஏக்கர் விவசாய நிலம் பயன் பெறும். மேலும், ஏரிகளின் அருகில் உள்ள கிணறுகள், ஆழ்துளைக் கிணறுகளில் நிலத்தடி நீர் மட்டம் உயரும்.
எங்களது கனவுத்திட்டமான காவேரி & கோதாவரி திட்டம் நிறைவேற்றப்படும்போது தமிழகத்திற்கு சுமார் 200 டிஎம்சி தண்ணீர் கிடைக்கும். அதற்கான முயற்சிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறோம். அதேபோல, இரண்டாம் கட்டமாக வசிஷ்ட நதியில் இருந்து தண்ணீர் கொண்டு வருவதற்கான திட்டமும் பரிசீலனையில் உள்ளது.
காவேரி - கோதாவரி இணைப்புத் திட்டத்தை தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா ஆகிய மூன்று மாநிலங்களும் சேர்ந்து செயல்படுத்தும். இதற்கான பேச்சுவார்த்தைக்கு நேரம் ஒதுக்கும்படி ஆந்திரா, தெலங்கானா முதல்வர்களை கேட்டிருக்கிறோம். அத்திட்டத்திற்காக 14 ஆயிரம் கோடியில் வெட்டப்படும் பிரதான கால்வாய்கள் மூலம் திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த வறண்ட பகுதிகளில் உள்ள நிலங்களுக்கு நீர் வழங்கப்படும். இதனால் தென்மாவட்டங்கள் முழுவதும் செழிக்கும். இதுதான் எங்கள் லட்சியம். காவேரி & கோதாவரி இணைப்புத்திட்டம் சுமார் 64 ஆயிரம் கோடியில் நிறைவேற்றப்படும் என்று மத்திய அமைச்சர் தெரிவித்து இருக்கிறார். மத்தியில் இணக்கமான உறவு இருக்கின்ற காரணத்தினால்தான் இன்று பல்வேறு பணிகள் சாத்தியமாகி இருக்கின்றன.
மேலும், சேலம் மாவட்டத்தில் உள்ள 100 வறண்ட ஏரிகளையும் பொதுப்பணித்துறையின் கீழ் கொண்டு வருவது குறித்தும் ஆய்வு செய்து வருகிறோம். அதேபோல், மேட்டூர் அணை உபரி நீரை நாமக்கல் மாவட்டத்தில் உள்ள வறண்ட ஏரிகளுக்குக் கொண்டு செல்வது குறித்தும் பரிசீலித்து வருகிறோம். இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.