Skip to main content

‘ஊரகச் சாலைகள் மேம்படுத்தப்படும்’ - முதல்வர் மு.க.ஸ்டாலின்!

Published on 24/06/2024 | Edited on 24/06/2024
Rural roads will be improved  CM MK Stalin 

சென்னை தலைமைச் செயலகத்திலுள்ள சட்டமன்றப் பேரவை மண்டபத்தில் தமிழக சட்டசபை பேரவைக் கூட்டம் கடந்த 20 ஆம் தேதி (20.06.2024) தொடங்கியது. அப்போது மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவித்து மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. மேலும் கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து சட்டப்பேரவை கூட்டத் தொடரின் இரண்டாம் நாளில் (21.06.2024)  இருந்து பல்வேறு துறைகளின் மீதான மானியக் கோரிக்கைகளின் மீது விவாதமும், வாக்கெடுப்பும் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் தமிழ்நாடு சட்டப்பேரவையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கிராமப்புறச் சாலைகள் திட்டம் குறித்து சட்டப்பேரவை விதி 110 இன் கீழ் பேசினார். அதில், “தமிழ்நாட்டின் உட்கட்டமைப்பு வசதிகளைத் தொடர்ந்து மேம்படுத்தி வருகிறோம். நகரம், கிராமம் என்ற வேறுபாடுகள் இல்லாமல் அனைத்து வளர்ச்சிகளையும் வழங்கி வருகிறோம். அனைத்துத் துறை வளர்ச்சி, அனைத்து மாவட்ட வளர்ச்சி, அனைத்துச் சமூக வளர்ச்சி என்பதையே திராவிட மாடல் அரசின் இலக்காகக் கொண்டு செயல்பட்டு வருகிறோம். இதில் சாலை வளர்ச்சி என்பது மிக, மிக முக்கியமானது. நகரம், கிராமம் என்ற வேறுபாடு இல்லாமல் சாலை மேம்பாட்டை தமிழ்நாடு அரசு செய்து வருகிறது என்பதை இந்த மாமன்ற உறுப்பினர்கள் அனைவரும் அறிவார்கள். கிராம ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய சாலைகள், கிராமப்புற மக்களின் பொருளாதார வளர்ச்சிக்கு வித்திட்டு வறுமையை ஒழிப்பதில் முக்கியக் காரணியாக உள்ளன. 

Rural roads will be improved  CM MK Stalin 

தமிழ்நாட்டில் சுமார் 1 இலட்சத்து 38 ஆயிரம் கிலோ மீட்டர் நீளமுள்ள கிராம ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய சாலைகள் உள்ளன. ஊரகப் பகுதிகளில் உள்ள சாலைகளை மேலும் மேம்படுத்தும் விதமாக ஒரு புதிய அறிவிப்பை இப்போது நான் வெளியிட விரும்புகின்றேன். ஊரகச் சாலைகளில் செய்யப்படும் முதலீட்டிற்கும் ஊரக மக்களின் நலனிற்கும் நேரடித் தொடர்பு உள்ளது. சாலைகளின் உட்கட்டமைப்பு மற்றும் போக்குவரத்துச் சேவைகளின் மேம்பாடு என்பது ஊரகப் பகுதிகளில் வணிகச் செயல்திறனை அதிகப்படுத்துகிறது. அதன்மூலம், இடுபொருள் செலவினைக் குறைத்து வேளாண் உற்பத்தியினை அதிகரித்து, ஊரக வளர்ச்சிக்கும் வழிவகுக்கிறது. தரமான சாலைகள், கிராமப்புற மக்களின் வருமான அளவினை உயர்த்துகிறது. கல்வி, சுகாதாரம் போன்ற சேவைகளை வழங்கி, அறிவாற்றலைப் பரவலாக்கி, சமூகப், பொருளாதார ஏற்றத்தாழ்வுகளைக் களைந்து வளர்ச்சியைத் துரிதப்படுத்த உதவுகிறது.

எனவேதான், பேருந்து செல்லக்கூடிய சாலைகள், குக்கிராமங்களை இணைக்கும் முக்கிய சாலைகள், பல்வேறு முக்கிய சேவைகளைக் கிராமங்களுடன் இணைக்கும் சாலைகள் போன்றவற்றை மேம்படுத்துவதற்கு  அரசு தொடர்ந்து முன்னுரிமை அளித்து வருகிறது. அதன்படி, கடந்த 13-01-2023 அன்று என்னால் சட்டப்பேரவையில் ‘முதல்வரின் கிராமச்சாலைகள் மேம்பாட்டுத் திட்டம்’ என்ற புதிய திட்டம் அறிவிக்கப்பட்டது என்பதை அனைவரும் அறிவீர்கள். இந்தத் திட்டத்தின்கீழ் கடந்த இரண்டு ஆண்டுகளில் 10 ஆயிரம் கி.மீ. நீளமுள்ள ஊராட்சி ஒன்றிய சாலைகள் மற்றும் கிராம ஊராட்சி சாலைகளை மேம்படுத்த 4 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதன்படி தற்போது வரை 8 ஆயிரத்து 120 கிலோ மீட்டர் நீளமுள்ள ஊரகச் சாலைப் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். 

Rural roads will be improved  CM MK Stalin 

முதல்வரின் கிராமச் சாலைகள் மேம்பாட்டுத் திட்டம், நபார்டு ஊரக உட்கட்டமைப்பு வளர்ச்சி நிதி, பிரதம மந்திரி கிராமச் சாலைத் திட்டம், நகர்ப்புறத்தை ஒட்டியுள்ள கிராமங்களில் சாலைகள் மேம்பாட்டுத் திட்டம் ஆகியவற்றின் கீழும் கடந்த 3 ஆண்டுகளில் மொத்தம் 16 ஆயிரத்து 596 கி.மீ. நீளமுள்ள சாலைகள் மற்றும் 425 உயர்மட்ட பாலங்கள் அமைக்கத் திட்ட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன் மொத்த மதிப்பு 9 ஆயிரத்து 324 கோடியே 49 லட்சம் ரூபாய். இதனைத் தொடர்ந்து செயல்படுத்தத் திட்டமிட்டுள்ளோம். வருகிற இரண்டு ஆண்டுகளில் ‘முதல்வரின் கிராமச் சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின்’ மூலம் கூடுதலாக மேலும் 10 ஆயிரம் கி.மீ நீளமுள்ள ஊரகச் சாலைகள் 4 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் அறிவிக்க விரும்புகிறேன்” எனத் தெரிவித்தார். 

சார்ந்த செய்திகள்