Skip to main content

கவரிங் நகைகளை வைத்து ரூ.50 லட்சம் மோசடி... வங்கி மேலாளர் உள்பட 5 பேர் கைது

Published on 05/06/2020 | Edited on 05/06/2020


திருவெறும்பூர் ஜனா என்கிற வங்கியில் 250 பவுன் கவரிங் நகையை வைத்து ரூ.50 லட்சம் மோசடி செய்த 5 ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர்.

திருச்சி மாவட்டம் திருவெறும்பூரில் ஜனா என்கிற வங்கி இயங்கி வருகிறது. இங்கு மகளிர் சுய உதவிக்குழு பெண்ளுக்கு கடன், அடமான கடன், வீட்டுப்பத்திரம் அடமான கடன், நகைகள் அடமான கடன் உள்ளிட்ட கடன்கள் வழங்கப்பட்டு வருகிறது.
 


இந்த வங்கியில் கடந்த மாதம் வாடிக்கையாளர் ஒருவர் தான் அடமானம் வைத்த நகைக்கு வட்டி கட்ட வந்துள்ளார்.

அப்போது நகை மதிப்பீட்டாளராக இருந்த சிவந்தி லிங்கம், இன்னொரு நகைக்கு வட்டி கட்டாமல் உள்ளது அதை எப்போது மீட்கப் போகிறீர்கள் எனக் கேட்டார்.

அதற்கு வாடிக்கையாளர் அது என்னுடையதல்ல ஏற்கனவே இங்கு நகை மதிப்பீட்டாளராக இருந்த பாலசுப்ரமணியன் எனது பெயரில் வைத்துள்ளார் எனத் தெரிவித்தார்.

இதையடுத்து கிடப்பில் இருந்த அந்த அடமான நகைகளைப் பரிசோதனைக்கு உட்படுத்தபட்ட போது அவையனைத்தும் கவரிங் நகைகள் என்பது தெரிய வந்தது.

இதனைத் தொடர்ந்து சிவந்தி லிங்கம், புதியதாக வந்த கிளை மேலாளர் கெல்வின் ஜோஸ்வா ராஜிடம் நடந்த விபரத்தைத் தெரிவித்தார்.

பின்னர் வங்கியில் இன்னும் இதுபோன்று போலி நகைகள் அடமானம் வைக்கப்பட்டதா எனத் தணிக்கை செய்யப்பட்டது. இதில் 250 பவுன் மதிப்பில் போலி நகைகளை 80 வாடிக்கையாளர் பெயரில் கள்ளத்தனமாக அவர்களுக்குத் தெரியாமல் போலி நகை அடமானம் ரூ 50 லட்சம் வரை  மோசடி நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
 

 


இதையடுத்து கிளை மேலாளர் கெல்வின் ஜோஷ்வா ராஜ் திருவெறும்பூர் போலீசில் புகார் அளித்த போது, இந்த வழக்கு மாவட்டப் பொருளாதார குற்றப் பிரிவு போலீசாருக்குச் சென்றது.

இது குறித்து  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜியாவுல் ஹக் உத்தரவின் பேரில் டி.எஸ்.பி. சிவசுப்ரமணியன் தலைமையில் மாவட்ட குற்றப் பிரிவு ஆய்வாளர் உஷாநந்தினி விசாரணை நடத்தினார்.

விசாரணையில் போலி அடமான நகைகளின் விபரம் வெளிச்சத்திற்கு வந்தது.

திருவெறும்பூர் கிளையில் ஏற்கனவே மேலாளராக இருந்தவர் பிரவீண்குமார் மற்றும் நகை மதிப்பீட்டாளராக இருந்த பாலசுப்ரமணியன் சேர்ந்து வாடிக்கையாளர் பெயரில் போலி ஆவணங்களைத் தயார் செய்து சுமார் இரண்டு வருட காலமாக போலி நகைகளை வைத்து மோசடி பணம் பெற்றுள்ளனர்.

இவர்களுக்கு உதவியாக வங்கியில் கலெக்சன் பிரிவு, கடன் வழங்குதல் பிரிவுகளில் வேலை பார்க்கும் யோகராஜ், வடிவேல், ராஜேந்திரன், சிலம்பரசன் ஆகிய 4 பேரும் உதவியாக இருந்துள்ளனர்.

வாடிக்கையாளர்களுக்கு கடன் ஏற்பாடு செய்யும்போது வாடிக்கையாளர்களிடம் கூடுதலாக ஆவணங்களைப் பெற்றுக்கொண்டு அதன் மூலம் மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் நகை அடமானம் வைக்க வரும் வாடிக்கையாளர்களிடம் லாவகமாகப் பேசி கவரிங் நகைகளை வாடிக்கையாளர் பெயரிலே அடமானம் வைத்துள்ளனர் இந்த மோசடி கும்பல்.

கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் இதுவரை 80 வாடிக்கையாளர்களின் பெயரில் 250 பவுன் வரை அடமானம் வைத்து ரூ 50 லட்சம் மோசடி செய்துள்ளனர். கடந்த இரு மாதங்களுக்கு நகை மதிப்பீட்டாளார் பாலசுப்ரமணியனும், கிளை மேலாளர் பிரவீன் குமாரும் வேறொரு கிளை மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
 

http://onelink.to/nknapp


இதனால் புதியதாக வந்த கிளை மேலாளர், மற்றும்  நகை மதிப்பீட்டாளரால் இந்த உண்மை வெளியே வந்தது.

இந்த மோசடியில் ஈடுபட்ட வங்கி ஊழியர்கள் பிரவீன் குமார், யோகராஜ், வடிவேல், பாலசுப்பிரமணியன், ராஜேந்திரன், சிலம்பரசன் என 6 பேர் மீது வழக்குப் பதியபட்டது.

இதில் நகை மதிப்பீட்டாளராக பணிபுரிந்து வந்த கடந்த மாதம் பாலசுப்பிரமணியன் இறந்துவிட்ட இந்நிலையில் மீதமுள்ள 5 பேர் மீது வழக்குப் பதிந்து கைது செய்யப்பட்டனர்.

இத்தகைய மோசடி வாடிக்கையாளர் மத்தியில் பெரும் அச்சத்தையும் பரபரப்பை எற்படுத்தியுள்ளது.


 

 

சார்ந்த செய்திகள்