
ஈரோடு மாவட்டம் பவானியில் சேலத்தைச் சேர்ந்த பிரபல ரவுடி பட்டப்பகலில் மனைவி கண்முன்னேயே வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நேற்று பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த சம்பவத்தில் மேலும் பலரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சேலம் மாவட்டம் கிச்சிப்பாளையம் பகுதியில் பிரபல ரவுடியாக இருந்த ஜான் மீது இரண்டு கொலை வழக்குகள் உள்ளிட்ட 14 வழக்குகள் சேலம் மாவட்ட காவல் எல்லைக்குட்பட்ட பல்வேறு காவல் நிலையங்களில் நிலுவையில் இருக்கிறது. இந்நிலையில் நேற்று காலை அவருடைய மனைவி சரண்யாவுடன் மாமனார் வீடு அமைந்துள்ள ஈரோடு மாவட்டம் பவானி பகுதிக்கு சென்றுள்ளார்.
அவருடைய மனைவி சரண்யா காரை இயக்கிய நிலையில் இவர் இடதுபுறமாக அமர்ந்து கொண்டிருந்தார். அப்பொழுது திடீரென காரை ஐந்து பேர் கொண்ட கும்பல் காரில் பின் தொடர்ந்து வந்தனர். பவானி, சித்தோடு காவல்நிலைய எல்லைப் பகுதியில் உள்ள நசியனூர் பகுதியில் காரை வழிமறித்து ரவுடி ஜானை சரமாரியாக வெட்டி படுகொலை செய்துள்ளனர்.மனைவி தடுக்க முயன்றும் விடாமல் ரவுடி ஜான் படுகொலை செய்யப்பட்ட காட்சிகள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.
இந்த சம்பவம் தொடர்பாக கொலை நடந்த நாளான நேற்றே போலீசார் விசாரணை மேற்கொண்டு கொலையில் ஈடுபட்ட மூன்று பேரை சுட்டுப் பிடித்தனர். மேலும் ஒருவர் கைது செய்யப்பட்ட நிலையில் மொத்தம் 4 பேர் இந்த கொலை சம்பவத்தில் கைது செய்யப்பட்டிருந்தனர். இந்நிலையில் இந்த கொலை சம்பவம் தொடர்பாக சேலத்தை சேர்ந்த பார்த்திபன், சேதுவாசன், அழகரசன், சிவக்குமார், பெரியசாமி ஆகியோரை கைது செய்து அவர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.