Skip to main content

பாதிக்குப் பாதி கொள்ளை!- ரோடு பர்னிச்சர் ஊழல்!

Published on 29/07/2020 | Edited on 29/07/2020

 

“நெடுஞ்சாலைத்துறையில் மலிந்துள்ள ஊழலும், முறைகேடுகளும் கணக்கிலடங்காதவை. அதனைச் சொல்லி மாளாது.” என்று குமுறலோடு விவரித்தார், அத்துறையில் பணியாற்றும் நேர்மையான பொறியாளர் ஒருவர்.

‘ரோடு பர்னிச்சர்’ என்ற பெயரில் ஆண்டுக்கு ரூ.200 கோடி வரை ஊழல் நடக்கிறது. இது, பெரிய அளவில் வெளியில் தெரிவதில்லை. தமிழகம் முழுவதும், நெடுஞ்சாலைத்துறையில் உள்ள அலுவலகங்கள் மூலம், ஆண்டுதோறும் ஒப்பந்தம் கோரப்படுகிறது. அந்த ஒப்பந்தங்களில், எந்தெந்த பொருட்களுக்கு, என்ன விலை நிர்ணயம் செய்யப்படுகிறது தெரியுமா? சாம்பிளுக்கு சில…

*அலுமினியத்தாலான, சாலையோரத் தடுப்பு (Metal crash) சுவர் – மீட்டர்  ஒன்றுக்கு ரூ.5,864/-

*சாலையோரத்தில் சிறிய போஸ்ட் போல ஊன்றப்படும் Delineator-ன் விலை ரூ.2,215/-

*பாலங்கள் மற்றும் சில பகுதிகளில், ஊன்றப்படும் கறுப்பு – மஞ்சள் போர்டு (Hazard Marker) ஒன்றின் விலை ரூ.3,342/-

*சாலையில் பதிக்கப்படும், இரவு நேரங்களில் ஒளிரும் குமிழ் (Stud) ஒன்றின் விலை ரூ.414/-

மேற்கண்ட பொருட்களின் சந்தை மதிப்பு என்னவென்று கேட்டால்,  தலை சுற்றும். ஏனென்றால், ஒப்பந்தத்தில் 50 சதவீதம் அதிக விலை வைத்தே நிர்ணயிக்கின்றனர்.
 

இந்த பர்னிச்சர் ஒப்பந்தங்களை, புதுக்கோட்டையைச் சேர்ந்த ஒரே ஒப்பந்தகாரர், நான்கு நிறுவனங்களின் பெயரில் மாற்றி மாற்றி எடுக்கிறார். இவர், தமிழகத்தின் மிக உயர்ந்த பதவியில் இருப்பவருக்கு வேண்டியவர் என்பதால், ஆண்டுதோறும் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அலுவலகங்களும், இவருக்கு குறைந்தபட்சம் ரூ.200 கோடி வரை மதிப்பீடுகளைத் தந்தே ஆகவேண்டும் என்பது மேலிடத்து உத்தரவு. இதனால், வாங்கிய பொருட்களையே,  திரும்பத் திரும்ப வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்தப் பொருட்களைப் பராமரிக்கும் வரவு-செலவு பதிவேடுகள் எந்த அலுவலகத்திலும் இல்லை. அதுவே, இந்த ஊழலை மறைப்பதற்கு வசதியாக இருக்கிறது. ஆனாலும், எட்டு தலைமைப் பொறியாளர்கள் ஒன்றுகூடி, பர்னிச்சர் பொருட்களுக்கு விலை நிர்ணயித்து, துறையின் வெப்சைட்டில் வெளியிடவே செய்கின்றனர்.
 

http://onelink.to/nknapp

 

எந்தக் கவலையும் இல்லாமல், இத்துறையில் ஊழல் தொடரவே செய்கிறது. ரூ.50 கோடிக்கும் மேல் உள்ள பணிகளுக்கு மட்டுமே அறிவிப்பு போர்டு வைக்கப்படுகிறது. மற்ற பணிகளுக்கு அறிவிப்பு போர்டு வைப்பது இல்லை. தமிழக முதல்வர் இத்துறைக்கு அமைச்சர் என்பதால், முறைகேடுகள் குறித்து யாரும் வாய் திறப்பதில்லை.

நெடுஞ்சாலைத்துறை அலுவலகங்களில், பர்னிச்சர் பொருட்கள் கேட்பாரற்று கிடப்பதை, போகிற போக்கிலேயே காணமுடியும். மக்களின் வரிப்பணத்தை, அநியாயத்துக்கு விரயம் செய்கின்றனர்!  

 

 

சார்ந்த செய்திகள்