Skip to main content

“எளியோரின் பேருள்ளத்துக்கு இணையேதுமில்லை” - முதல்வர் மு.க. ஸ்டாலின் நெகிழ்ச்சி

Published on 27/02/2024 | Edited on 28/02/2024
reputation is unmatched CM MK Stalin resilience

தென்காசி மாவட்டம் செங்கோட்டை வட்டம் புளியரை கிராமம், 'எஸ்' - வளைவு என்ற தமிழக - கேரள எல்லைப் பகுதியில் கடந்த 25 ஆம் தேதி (25.02.2024) நள்ளிரவு 1.00 மணி அளவில் திருமங்கலம் - கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் லாரி ஒன்று சென்று கொண்டிருந்துள்ளது. அப்போது இந்த லாரி நிலை தடுமாறி 40 அடி உயரத்திலிருந்து கவிழ்ந்து கீழே செல்லும் செங்கோட்டை - கொல்லம் ரயில் மார்க்கத்திலுள்ள தண்டவாளத்தில் விழுந்து விபத்து ஏற்பட்டது. அப்போது அப்பகுதியில் வசித்து வந்த சண்முகையா - வடக்குத்தியாள் என்ற தம்பதியினர் செங்கோட்டையிலிருந்து புனலூர் நோக்கி வந்துகொண்டிருந்த பகவதியம்மன் கோவில் திருவிழா சிறப்புப் பயணிகள் ரயில் வரும் சத்தத்தைக் கேட்டு நிலைமையின் தீவிரத்தை உணர்ந்துள்ளனர். அதன் பின்னர் தண்டவாளத்தில் சிறிது தூரம் ஓடிச்சென்று கையில் வைத்திருந்த டார்ச் லைட் ஒளியின் மூலம் ரயில் ஓட்டுநரிடம் சைகை காண்பித்து ரயிலை நிறுத்தி ஏற்படவிருந்த பெரும் விபத்தை தடுத்துள்ளனர்.

மேலும் இது குறித்து உடனடியாகத் தகவலறிந்த காவல்துறையினர், தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து பொதுமக்களுடன் இணைந்து தண்டவாளத்தில் விழுந்து கிடந்த லாரியினை அப்புறப்படுத்தியுள்ளனர். அதே சமயம் சென்னையிலிருந்து கொல்லம் நோக்கிச் சென்ற விரைவு ரயிலும் செங்கோட்டை ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது. தங்களது முதிர்ந்த வயதையும், இருள் சூழ்ந்திருந்த நள்ளிரவு நேரத்தையும் பொருட்படுத்தாமல், பெரும் விபத்து நிகழ்வதைத் தடுத்து நிறுத்தும் ஒரே நோக்கத்துடன் தண்டவாளத்தில் ஓடிச்சென்று ரயிலை நிறுத்திய சண்முகையா - வடக்குத்தியாள் தம்பதியினரின் வீரதீரச் செயலைப் பாராட்டிய தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ. 5 லட்சம் வெகுமதி வழங்க உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (27.2.2024) தலைமைச் செயலகத்தில் சண்முகையா - வடக்குத்தியாள் அத்தம்பதியரின் வீரதீரச் செயலை பாராட்டி, அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து 5 இலட்சம் ரூபாய்க்கான காசோலையை வெகுமதியாக வழங்கி பாராட்டினார். அப்போது  தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா உடன் இருந்தார். இது குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் சமூக வலைத்தளப் பதிவில், “தென்காசி மாவட்டம் புளியரை அருகே தண்டவாளத்தில் லாரி விழுந்து விபத்து ஏற்பட்டதை அறிந்து, பொறுப்புடன் செயல்பட்டு அந்த வழியாக வந்த இரயிலை ‘டார்ச்’ லைட் சைகையால் நிறுத்தி, நிகழவிருந்த விபத்தைத் தடுத்த சண்முகையா – வடக்குத்தியாள் இணையரின் செயலுக்கு எனது பாராட்டுகள்!. எளியோரின் பேருள்ளத்துக்கு இணையேதுமில்லை!” எனக் குறிப்பிட்டுள்ளார்.

reputation is unmatched CM MK Stalin resilience

மேலும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில், “விபத்துக்குள்ளான லாரி கவிழ்ந்து கிடந்த தண்டவாளத்தில் வந்து கொண்டிருந்த எக்ஸ்பிரஸ் ரயிலை, டார்ச்லைட் அடித்து எச்சரிக்கை சிக்னல் கொடுத்து நிறுத்தியிருக்கிறார்கள் தென்காசி பகுதியைச் சேர்ந்த ரப்பர் தோட்டத் தொழிலாளர்களான வயதில் முதிய தம்பதியினர் சண்முகையாவும் வடக்கத்தி அம்மாளும். இவர்கள் இருவரும் நொடிப்பொழுதில் சிந்தித்து துரிதமாகச் செயல்பட்ட காரணத்தால் பெரும் ரயில் விபத்து தவிர்க்கப்பட்டு நூற்றுக்கணக்கான உயிர்களைக் காப்பாற்றி உள்ளனர். இந்த தம்பதியின் துணிச்சலைப் பாராட்டி நமது முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.5 லட்சம் வெகுமதி வழங்கியுள்ளார். இந்நிலையில் திமுக இளைஞரணி அறக்கட்டளை சார்பில், ரூ.1 லட்சத்துக்கான காசோலையை இன்று வழங்கி பாராட்டினோம். சண்முகையா - வடக்கத்தி அம்மாள் தம்பதியினரின் மனித நேயமும் - வீரமும் போற்றுதலுக்குரியவை. அவர்களுக்கு என் அன்பும் வாழ்த்தும்” எனத் தெரிவித்துள்ளார்.

சார்ந்த செய்திகள்