Skip to main content

ரயில்வே பாலத்தில் தீடீர் பழுது: போக்குவரத்து மாற்றம்!

Published on 13/01/2024 | Edited on 13/01/2024
Repairs on railway bridge near Ponmalai G corner

திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பொன்மலை ஜி கார்னர் பகுதியில் போக்குவரத்துக்கென இரு ரயில்வே பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், திருச்சியிலிருந்து சென்னை மார்க்கத்தில் இடதுபுறமுள்ள பாலம் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு, சென்னை-மதுரை நான்கு வழிச்சாலை மேம்பாட்டுப் பணியின்போது, தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் அமைக்கப்பட்டதாகும். மற்றொருபாலம் பழைய பாலமாகும். இதில் புதிதாக அமைக்கப்பட்ட பாலத்தில்தான் தற்போது பழுது ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. வியாழக்கிழமை பிற்பகல் அந்த பாலத்தில் பழுது ஏற்பட்டதை கண்ட நெடுஞ்சாலைத்துறை ஆணைய அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

அப்போது, டிவிஎஸ் டோல்கேட்டிலிருந்து செல்லும் வழியில் பாலத்தின் அடிப்பகுதியில் மண் அரிப்பு ஏற்பட்டு பாலத்தின் தூண் சற்று கீழே சாய்ந்தும் இறங்கியும் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து நெடுஞ்சாலைத்துறையினர் முதல் கட்டமாக அப்பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்ய முடிவு செய்து, வியாழக்கிழமை நள்ளிரவு முதல் பொன்மலை ஜி கார்னரிலிருந்து செந்தண்ணீர்புரம் வரை, பழையபாலம் மற்றும் சாலையை இருவழிப்பாதையாக்கி போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது. இதற்காக அச்சாலையில் நடுப்பகுதியில் இரும்பு தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளன. மேலும், மதுரை, திருச்சியில் இருந்து சென்னை செல்லும் வாகனங்கள் ஜி கார்னர் முன்பாக வலதுபுறம் பாலத்திற்கு ஏறிச்செல்லும் வகையில் அங்கிருந்த மையத் தடுப்புகளும் அகற்றப்பட்டு வழி ஏற்படுத்தப்பட்டுள்ளன. 

அதேபோல செந்தண்ணீர்புரத்தில் சென்றதும், மீண்டும் இடப்புற சாலைக்கு செல்லும் வழியிலும் அங்கிருந்த மையத் தடுப்புகளும் இடித்து அகற்றப்பட்டுள்ளன. மேலும் அரியமங்கலம் பகுதி வழியாக சென்னை, தஞ்சை பகுதிகளிலிருந்து திருச்சி வரும் வாகனங்கள், மதுரை உள்ளிட்ட தென்மாவட்டங்களுக்கு செல்லும் வாகனங்கள், ஜி கார்னர் சர்வீஸ் சாலையில் வந்து ரஞ்சிதபுரம் பேருந்து நிறுத்தம் அருகே டிவிஎஸ் டோல்கேட் பாலத்தில் ஏறிச்செல்லும் வகையில் அங்கிருந்த தடுப்புகளும் அகற்றப்பட்டுள்ளன. இப்போக்குவரத்து மாற்றம் மற்றும் மையத்தடுப்புகள் இடித்தல், இரும்பு தடுப்புகள் வைத்தல் உள்ளிட்டவைகளால் ஜிகார்னர் பாலப் பகுதியில் வியாழக்கிழமை நள்ளிரவு போக்குவரத்து நெருக்கடியும் ஏற்பட்டது.

தொடர்ந்து தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மற்றும் தொழில் நுட்பக்குழுவினர் பாலப்பகுதியில் மேற்கொள்ள வேண்டிய தொழில்நுட்ப பணிகள் குறித்து தீவிர மேற்கொண்டுள்ளனர். தொடர் விபத்து ஏற்படுவதை தவிர்க்க சுரங்கப்பாதை கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சர்க்கார்பாளையம் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.  

இது குறித்த தகவலறிந்த மாவட்ட ஆட்சியர் மா. பிரதீப்குமார், மாநகர காவல் ஆணையர் என். காமினி உள்ளிட்டோர் ரயில்வே மேம்பாலப் பாலத்தின் பழுதடைந்த பகுதிகளை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் பொங்கல் கூட்ட நெரிசல் உள்ளிட்ட எக்காரணத்தைக் கொண்டும் பணிகள் முடியும் வரையில், பழுதடைந்த பாலத்தில் வாகனப் போக்குவரத்துகளை அனுமதிக்கக் கூடாது என காவல் ஆணையரிடம் ஆட்சியர் தெரிவித்தார். இதனையடுத்து பாலத்திலேயே இருவழிப் போக்குவரத்து மேற்கொள்ள மாநகர காவல் ஆணையர் போக்குவரத்துப் போலீஸாருக்கு அறிவுறுத்தியுள்ளார்.

பாலத்தில் பழுது ஏற்பட்டதும். முதல் கட்டமாக அசம்பாவிதத்தை தடுக்கும் வகையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அடுத்தகட்ட சீரமைப்பு பணிகள் குறித்து தேசிய நெடுஞ்சாலைத்துறையினர், சென்னையில் உள்ள தொழில் நுட்ப வல்லுநர்கள் மற்றும் தேசிய தொழில் நுட்பக்கழக வல்லுநர்களுடன் இணைந்து ஆலோசனை மேற்கொள்ளவுள்ளனர். பொங்கல் விடுமுறைக்குப் பின்னர் தொழில் நுட்பக்குழுவினர் ஆய்வுக்குப் பின்னர் சீரமைப்பு பணிகள் தொடங்கும் என தேசிய நெடுஞ்சாலைத் துறையினர் தெரிவித்துள்ளனர்.

சார்ந்த செய்திகள்