தமிழக காவிரி விவசாயிகள் சங்க மாநிலக் குழு கூட்டம் திருவாருர் வி.பி.கே லாட்ஜ் ல் மாநில தலைவர் த.புண்ணியமூர்த்தி தலைமையில் நடைபெற்றது.பொது செயலாளர் பி.ஆர்.பாண்டியன் பங்கு கொண்டு விவசாயிகளின் பிரச்சினைகள் குறித்து பேசினார் அப்போது அவர் பேசியதாவது: ’தமிழ் நாட்டில் காவிரி உரிமை மீட்பு போராட்டத்தில் பல்வேறு அமைப்புகளை ஒன்றுப் படுத்தி தமிழக வாழ்வுரிமை கூட்டமைப்பு உருவாக்கி போராட்டக் களத்தில் சமரசத்திற்கு இடமின்றி மத்திய அரசின் துரோக நடவடிக்கைகளை எதிர்த்து தொடர் போராட்டங்களில் வேல்முருகன் ஈடுபட்டு வந்தார்.
ஒரு கட்டத்தில் உச்ச நீதிமன்றம் தான் கடைசி தீர்வு என எண்ணி நீதியரசர்களின் கவனத்தை ஈர்க்கும் பொருட்டு கூட்டமைப்பின் தலைவர் என்கிற முறையில் தீவிரமாக இறுதி கட்ட போராட்டங்களில் ஈடுபட வேண்டிய நெருக்கடியை மத்திய அரசு தான் உருவாக்கியது.
இந்நிலையில் உள்நோக்கத்தோடு மத்திய அரசின் நெருக்கடிக்கு அடிபணிந்து திட்டமிட்டு தி.வேல்முருகனை கைது செய்து புழல் சிறையில் அடைத்திருக்கும் தமிழக காவல் துறையின் நடவடிக்கை வன்மையாக கண்டிக்கத்தக்கது.
இது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை மட்டுமல்ல தமிழக வாழ்வாதாரப் பிரச்சினைகளில் முன்னனின்று போராடும் தலைவர்களை அச்சுறுத்தும் நடவடிக்கையாகும். எனவே தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலையிட்டு அவரை உடன் நிபந்தனையின்றி விடுதலை செய்திட வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
காவிரி உரிமை மீட்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போடப்பட்ட அனைத்து வழக்குகளையும் திரும்ப பெற முதலமைச்சர் முன்வர வேண்டும்.
தி.வேல்முருகன் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடியவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தி படுகொலை செய்ததை கண்டித்தும், ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தியும் சிறையில் உண்ணாவிரதம் மேற்கொண்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதலை அளித்துள்ளது. போராட்டத்திற்கு மதிப்பளிக்க வேண்டிய தமிழக அரசு மதிப்பளிக்குமா என்பது கேள்விக்குறியே.
எனவே தமிழக வாழ்வுரிமைக்கான போராட்டங்களில் தங்களின் பங்களிப்பின் அவசியத்தையும் தேவையின் முக்கியத்துவத்தையும் உணர்ந்து தங்களின் உடல் நலம் கருதியும் உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிட வேண்டுமென விவசாயிகளின் சார்பில் வேண்டுகிறேன்’’ என்றார்.