
ஆப்பிளுக்கு இணையாக விற்கப்பட்டுவந்த ஒரு கிலோ தக்காளியின் விலை தமிழ்நாட்டில் குறையத் தொடங்கியது. தக்காளி வரத்து அதிகரிப்பு, பண்ணை பசுமைக் கடைகளில் விற்பனை காரணமாக தக்காளி விலை குறைந்தது.
கோயம்பேடு மார்க்கெட்டில் மொத்த விற்பனையில் ஒரு கிலோ நாட்டு தக்காளி விலை ரூபாய் 30 குறைந்தது. இதனால், கோயம்பேடு மார்க்கெட்டில் முதல் ரக தக்காளி ரூபாய் 110இலிருந்து ரூபாய் 80 ஆகவும், இரண்டாம் ரக தக்காளி ரூபாய் 100இலிருந்து ரூபாய் 70 ஆகவும் குறைந்துள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில் மொத்த தக்காளி வியாபாரிகள் சங்கம் தொடர்ந்த வழக்கு இன்று (25/11/2021) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது வியாபாரிகள் சங்கம் தரப்பில், கரோனா தடுப்பு நடவடிக்கையாக கோயம்பேட்டில் தக்காளி மார்க்கெட்டுக்கான மைதானம் மூடப்பட்டுள்ளது. இந்த மைதானத்தைத் திறந்தால் தக்காளி விலை குறைப்பு சாத்தியம். மூடப்பட்ட மைதானத்தைத் திறந்தால் ராஜஸ்தான், ஆந்திரா, கர்நாடகாவில் இருந்து லாரிகளில் தக்காளிகளைக் கொண்டு வரலாம். மைதானத்தைத் திறக்கும் பட்சத்தில் ஒரு கிலோ தக்காளி ரூபாய் 40 முதல் ரூபாய் 50 வரை பொதுமக்களுக்கு விற்பனை செய்ய தயார் நிலையில் இருப்பதாக தெரிவித்தனர். தக்காளியின் விலையைக் குறைத்து தமிழ்நாடு அரசுக்கு உதவ தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
வியாபாரிகள் சங்கத்தின் அறிவிப்பால், பொதுமக்கள் மற்றும் உணவகங்களின் உரிமையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.