Skip to main content

ஜெ.வுக்கு நினைவிடம் ஊழலுக்கு மணிமகுடம் சூட்டுவதற்கு சமம்! ஊழலின் சின்னமாகவே பார்க்கப்படும்!! ராமதாஸ்

Published on 07/05/2018 | Edited on 07/05/2018
age eps-ops-jayalalitha


ஜெயலலிதாவுக்கு நினைவிடம் அமைப்பது ஊழலுக்கு மணிமகுடம் சூட்டுவதற்கு சமம் என்றும், ஊழலின் சின்னமாகவே பார்க்கப்படும் என்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 
 

 வருவாய்க்கு மீறி சொத்துக்குவித்த வழக்கில் தண்டிக்கப்பட்ட மறைந்த முதலமைச்சர்  ஜெயலலிதாவுக்கு  பீனிக்ஸ் பறவை வடிவத்தில் நினைவிடம் அமைப்பதற்கு இன்று அடிக்கல் நாட்டப்பட்டிருக்கிறது. ஊழலில்  திளைக்கும் மாநிலம் என்ற தீராப்பழியை தமிழகத்திற்கு ஏற்படுத்திக் கொடுத்த ஒருவருக்கு நினைவு மண்டபம் அமைத்து கவுரவப்படுத்துவது ஊழலுக்கு மணிமகுடம் சூட்டுவதற்கு ஒப்பானது ஆகும்.
 

சென்னை மெரினா கடற்கரையில் அமைக்கப்படவிருக்கும் நினைவு மண்டபத்திற்கு அடிக்கல் நாட்டும்  விழாவில் நிகழ்த்தப்பட்ட செயல்கள் சகிக்க முடியாதவை. அடிக்கல் நாட்டு விழாவின் போது பூசைகள் நடத்தப்படுவது வழக்கம். ஆனால், ஜெயலலிதா நினைவிட அடிக்கல் நாட்டு விழாவிற்காக மிகவும் பிரமாண்டமான முறையில் யாகசாலைகள் அமைக்கப்பட்டு, வேள்விகள் நடத்தப்பட்டுள்ளன. எத்தனை வேள்விகள் நடத்தினாலும், எத்தனை பட்டுத்துணிகளைப் போட்டு மூடி வைத்தாலும் நினைவு மண்டபம்  கட்டப்படும் ஜெயலலிதாவின் ஊழல்களையும், ஜெயலலிதாவுக்கு மணிமண்டபம் கட்டும் எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான பினாமி அரசின் ஊழல்களையும் மறைக்க முடியாது; அதனால் ஏற்பட்ட பாவங்களை கழுவ முடியாது; மக்கள் மனதில் ஏற்பட்டுள்ள வெறுப்பை அழிக்க முடியாது.
 

ரூ.50 கோடி ரூபாய் செலவில் 36,806 சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட உள்ள நினைவிடத்தில் அருங்காட்சியகமும் அமைக்கப்படவுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. அருங்காட்சியகத்தில் ஜெயலலிதாவின் என்னென்ன சாதனைகள் பார்வைக்கு வைக்கப்படும் என்பது தான் தெரியவில்லை. இந்திய அரசியல் வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் ஊழலுக்காக இரு முறை தண்டிக்கப்பட்டவர்; ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டதால் இரு முறை முதலமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்டவர்; ஊழலுக்காக தண்டிக்கப்பட்டதால் சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை இழந்தவர்; தேர்தலில் போட்டியிடும் தகுதியை பறிகொடுத்தவர், ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டதற்காக அதிமுக தொண்டர்களை தூண்டி விட்டு கலவரம் செய்ய வைத்ததுடன், தருமபுரி மாவட்டம் இலக்கியம்பட்டி அருகில் 3 அப்பாவி மாணவிகளை உயிருடன் எரித்து கொலை செய்ய வைத்தவர் ஆகியவை தான் ஜெயலலிதாவின் அளப்பரிய சாதனைகளில் முதன்மையாக அமையும். இவ்வரலாறு இனிவரும் தலைமுறை அறிய வேண்டியது தான்.
 

ஜெயலலிதா மட்டும் இப்போது உயிருடன் இருந்திருந்தால் பெங்களுர் பரப்பண அக்கிரகார சிறையில் சசிகலாவுடன் அடைக்கப்பட்டிருந்திருப்பார். இந்திய வரலாற்றில் எவரும் செலுத்தாத வகையில் ரூ.100 கோடி அபராதம் செலுத்தியிருந்திருப்பார். அப்படிப்பட்டவருக்கு ரூ.50 கோடியில் நினைவிடம் அமைப்பதை  ஏற்றுக்கொள்ள முடியாது. ஜெயலலிதாவின் ஊழல் சின்னமாகவே பொதுமக்கள் இதை பார்ப்பார்கள்.
 

ஜெயலலிதாவின் நினைவிடம் நேராக பார்க்க பீனிக்ஸ் பறவை போன்றும், கழுகுப் பார்வையில் பார்க்க இரட்டை இலை சின்னம் போன்றும் காட்சியளிக்கிறது. ஏற்கனவே எம்.ஜி.ஆர் நினைவிடத்தின் வளாகத்தில் இரட்டை இலை சின்னம் வடிவில் நுழைவாயில் அமைக்கப்பட்டது. அதுகுறித்த சர்ச்சை எழுந்த போது அது ‘குதிரை றெக்கை’யின் நிழல் என்று விஞ்ஞானப்பூர்வமான விளக்கம் அளித்து  தமிழக அரசு தப்பித்தது.  அதனால் ஏற்பட்ட துணிச்சல் காரணமாக இப்போது ஜெயலலிதா நினைவு மண்டபத்திலும் இரட்டை இலை திட்டமிட்டு திணிக்கப்படுகிறது. மக்களின் வரிப்பணத்தில் ஊழல்வாதி ஜெயலலிதாவுக்கு நினைவிடம் அமைப்பதையும், அதில் இரட்டை இலையை அமைத்து ஆளுங்கட்சிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்வதையும் அனுமதிக்க முடியாது. உத்தரப்பிரதேசத்தில் மாயாவதி ஆட்சியின் போது அரசு செலவில் யானை சிலைகள் அமைக்கப்பட்டதை உச்சநீதிமன்றம் கண்டித்தது குறிப்பிடத்தக்கது.

 

Ramadoss


 

தமிழ்நாட்டில் காவிரிப் பிரச்சினை, நீட் தேர்வு சிக்கல், வறட்சி, குடிநீர் தட்டுப்பாடு, அரசு ஊழியர்கள் பிரச்சினை என உடனடியாக தீர்க்கப்பட வேண்டிய விஷயங்கள் ஏராளமாக உள்ளன. ஆனால், ‘கிடப்பது கிடக்கட்டும் கிழவனைத் தூக்கி மனையில் வை’ என்ற பழமொழிக்கு இணங்க அந்த பிரச்சினைகளை தீர்ப்பதில் அக்கறை காட்டாத பினாமி அரசு, ஜெயலலிதாவுக்கு அவசரம், அவசரமாக நினைவிடம் அமைத்து  பிரச்சினைகளை திசை திருப்பும் செயலில் ஈடுபட்டிருக்கிறது. இதை அனுமதிக்க முடியாது.
 

முதலமைச்சராகவே பதவி வகித்திருந்தாலும் கூட ஊழல்வாதிக்கு, ஊழல் செய்ததற்காக தண்டிக்கப் பட்டவருக்கு நினைவிடம் அமைப்பதை எந்த சட்டமும், நீதிமன்றமும் அனுமதிப்பதில்லை. சட்டப்பேரவை மாடத்தில் ஜெயலலிதா படம் திறக்கப்பட்டதைக் கூட சென்னை உயர்நீதிமன்றம் ஆதரிக்கவில்லை; மாறாக சட்டப்பேரவைத் தலைவரின் முடிவில் தலையிட விரும்பவில்லை என்று தான் கூறியிருந்தது. எனவே, வரிப்பணத்தில் ஜெயலலிதாவுக்கு நினைவு மண்பம் கட்டும் திட்டத்தை  அரசு கைவிட வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார். 
 

சார்ந்த செய்திகள்

Next Story

“கேட்கும் நிதியை மத்திய அரசு எப்போதும் கொடுப்பதில்லை” - இ.பி.எஸ் குற்றச்சாட்டு

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 EPS alleges Centre government never gives the requested funds

தமிழ்நாட்டில் ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக கடந்த டிசம்பர் மாதம் வரலாறு காணாத மழைப்பொழிவு ஏற்பட்டது. இதன் காரணமாகச் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிகக் கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து தென்மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களும் அதிக கனமழையினால் பெரிதும் பாதிக்கப்பட்டது. இந்த பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கிடவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது.

அதே சமயம் மிக்ஜாம் புயல் மற்றும் தென் மாவட்ட வெள்ள பாதிப்புகளுக்கு நிவாரணம் கோரி தமிழக முதலமைச்சரும், தலைமைச் செயலாளரும் மத்திய அரசுக்கு பலமுறை கடிதம் அனுப்பியும் மத்திய அரசு இதுவரை நிதி வழங்காமல் இருந்தது.

இந்த நிலையில், தமிழகத்தில் ஏற்பட்ட மிக்ஜாம் புயல், வெள்ள பாதிப்புகளுக்கு தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து நிவாரண நிதியை வழங்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இது குறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘தமிழ்நாட்டில் ஏற்பட்ட மிக்ஜாம் புயல் நிவாரண நிதியாக ரூ.285 கோடியை வழங்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. மேலும், தமிழகத்தில் 2023 டிசம்பர் மாதத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளுக்காக ரூ.397 கோடி வழங்கவும் மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. அதில் முதற்கட்டமாக ரூ.285 கோடி மிக்ஜாம் புயல் பாதிப்புக்கான நிதியில் இருந்து ரூ.115 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது. அதே போல், வெள்ள பாதிப்புக்காக மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ள ரூ.397 கோடி நிதியில் இருந்து ரூ.160 கோடியை தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு விடுவித்துள்ளது’ எனத் தெரிவித்துள்ளது.

மிக்ஜாம் புயல், வெள்ள பாதிப்புகளுக்காக தமிழ்நாடு அரசு ரூ.38,000 கோடி நிவாரணம் வழங்க கோரியிருந்த நிலையில், மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு குறைந்தபட்ச அளவில் நிவாரண நிதி வழங்கியுள்ளதாக பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், அதிக வெப்பம் காரணமாக அதிமுக சார்பில் மாவட்டந்தோறும் பல இடங்களில் நீர் மோர் பந்தலை வைக்குமாறு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அதிமுகவினருக்கு கோரிக்கை விடுத்திருந்தார். அந்த வகையில், சேலம் மாவட்டத்தில் அதிமுக சார்பில் 4 இடங்களில் நீர் மோர் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. இதனை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்து செய்தியாளர்களைச் சந்தித்துp பேசினார்.

அப்போது அவர், “தமிழ்நாடு அரசு கேட்ட நிதியை மத்திய அரசு தரவில்லை. அதிமுக ஆட்சியிலும் மத்திய அரசு நிதி கொடுக்கவில்லை. எப்போதும் கேட்கப்படும் நிதியை விட குறைந்த அளவு நிதியையே மத்திய அரசு அளிக்கும். மத்தியில் காங்கிரஸ் கட்சி ஆண்ட போதிலும் நிதியைக் குறைத்து தான் வழங்கினார்கள். திமுக மத்தியில் அதிகாரத்தில் இருந்தபோதே கூட கேட்ட நிவாரணம் கிடைக்கவில்லை. குடிமராமத்து திட்டம் அரசியல் காழ்ப்புணர்ச்சியால் திமுக ஆட்சியில் நிறுத்தப்பட்டது. அதிமுக ஆட்சியில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டிலிருந்த 14 ஆயிரம் ஏரிகளில் 6,000 தூர்வாரப்பட்டன. தமிழகத்தில் போதைப்பொருளால் சமுதாயம் மிக மோசமான அழிவுக்குச் சென்று கொண்டிருக்கிறது ” எனத் தெரிவித்துள்ளார். 

Next Story

மீன்வளப் பல்கலைக்கழகம்; ஜெயலலிதாவின் பெயரை நிராகரித்த குடியரசுத்தலைவர்

Published on 23/03/2024 | Edited on 23/03/2024
President rejects Jayalalitha name for Fisheries University

நாகை மீன்வளப் பல்கலைக்கழகத்திற்கு முன்னால் முதல்வர் ஜெ.ஜெயலலிதா பெயரை வைக்க வேண்டும் என்ற கோரிக்கையை குடியரசு தலைவர் நிராகரித்து விட்டார்.

நாகப்பட்டினத்தில் உள்ள மீன்வளப் பல்கலைக்கழகம் கடந்த 2012 ஆம் ஆண்டு அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவின் அதிமுக ஆட்சியின் போது நாகப்பட்டினத்தில் துவங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து கடந்த 2016 ஆம் ஆண்டு ஜெயலலிதா மறைந்த பிறகு நாகப்பட்டினத்தில் உள்ள மீன்வள பல்கலைக்கழகத்திற்கு அவரது பெயரை வைக்க வேண்டும் என்று  சட்ட மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி ஆளுநரின் ஓப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் 4 ஆண்டுக்கும் மேல் ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் கிடப்பில் வைத்திருந்தார்.

இந்த நிலையில் கடந்த ஆண்டு கிடப்பில் போடப்பட்ட 10 மசோதாக்களுடன் ஜெயலலிதா பெயர்மாற்றம் தொடர்பான மசோதவையும் திருப்பி அனுப்பியிருந்தார். இதையடுத்து தமிழக அரசு மீண்டும் பல்கலைக்கழகத்திற்கு ஜெயலலிதாவின் பெயர் வைக்க வேண்டும் என்று சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி, மீண்டும் ஆளுநருக்கு அனுப்பி வைத்தது. இந்த மசோதாவை ஆளுநர் குடியரசு தலைவருக்கு அனுப்பி வைத்திருந்தார்.

இந்த நிலையில் நாகப்பட்டினம் மீன்வளப் பல்கலைகழகத்திற்கு ஜெயலலிதா பெயர் மாற்றம் தொடர்பான பரிந்துரையை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நிராகரிப்பதாக அறிவித்துள்ளார்.