Skip to main content

புதுக்கோட்டை மாவட்டத்தில்  கஜா புயலால் பாதிக்கப்பட்ட வங்கி வாடிக்கையாளார்கள் கடன் தவணைத் தொகை செலுத்துவதற்கு கால அவகாசம்... -மாவட்ட ஆட்சியர்

Published on 02/01/2019 | Edited on 02/01/2019

 

கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள் தாங்கள் வங்கிகளில் வாங்கியுள்ள கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். கல்விக்கடன் ரத்து செய்ய வேண்டும் சுயஉதவிக்குழு கடன்களுக்கு கால நீடிப்பு செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி புயலால் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் விவசாயிகள், மகளிர் சுயஉதவிக்குழு பெண்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். 


இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் கணேஷ் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார் அந்த அறிக்கையில்.. 


புதுக்கோட்டை மாவட்டத்தில் கஜா புயலால் பாதிப்படைந்த விவசாயிகளின் கடன்களுக்கு பயிர் சேதத்தின் அடிப்படையில் ஒருவருட காலம் அசல் மற்றும் வட்டியை செலுத்துவதற்கு கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், கடனை திருப்பி செலுத்துவதற்கு ஒருவருடம் முதல் நான்கு வருடம் வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.


இச்சலுகையானது வருவாய்துறையின் அன்னவாரி சான்றிதழ் பயிர் சேதத்திற்கேற்ப வழங்கப்படும். மேலும், பயிர் சேதம் 33 சதவீதம் முதல் 50 சதவீதம் வரையிலும் மற்றும் 50 சதவீதத்திற்கு மேலும் இருக்க வேண்டும். 
இதர மத்திய கால விவசாய கடன்,  தொழில் மற்றும் வர்த்தகம் சார்ந்த கடன்,  சுய உதவிக்குழு கடன், வீட்டுக் கடன் மற்றும் கால்நடை வளர்ப்பு கடன் ஆகியவற்றிற்கு ஒருவருட காலம் அசல் மற்றும் வட்டியை செலுத்துவதற்கு கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.


வாடிக்கையாளர்கள் தங்களது பகுதிகளில் உள்ள பொதுத்துறை நிறுவன வங்கி, தனியார் வங்கி, இக்விடாஸ் வங்கி, பின்கர் வங்கி போன்ற வங்கி கிளைகளை அணுகி விண்ணப்பத்தை சமர்ப்பித்து இச்சலுகையை பெற்றுக்கொள்ளலாம். மேலும், விண்ணப்பத்தை சமர்பிக்க கடைசி தேதி 09.03.2019 புயல் பாதிப்பிற்கு பிறகு வரக்கூடிய கடன் தவணைகளுக்கு மட்டுமே இந்த சலுகை பொருந்தும். இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் சு.கணேஷ் தெரிவித்துள்ளார்.


இந்த அறிவிப்பு குறித்து விவசாயிகள் கூறும் போது... மாவட்ட ஆட்சியரின் இந்த அறிவிப்பு தற்காலிக நிவாரணமாக இருந்தாலும் அழிந்த விவசாயத்தை மீட்டெடுக்க இன்னும் 5 ஆண்டுகள் ஆகும். அதுவரை அனைத்து வட்டிகளும் ஒன்றாக சேர்க்கப்பட்டு மொத்தமாக சுமையாக ஏறப் போகிறது. அதனால் விவசாய கடன், கல்விக் கடன், சுயஉதவிக்குழு கடன்களை தள்ளுபடி செய்தால் மட்டுமே விவசாயிகளால் நிம்மதியாக அடுத்தகட்டமாக விவசாயத்தை கவனிக்க முடியும் என்றனர். 

 

 

சார்ந்த செய்திகள்