Skip to main content

புதுக்கோட்டை வெடி விபத்து; முதல்வர் நிவாரணம் அறிவிப்பு 

Published on 06/08/2023 | Edited on 06/08/2023

 

Pudukottai factory incident Chief Minister relief announcement

 

புதுக்கோட்டை மாவட்டம் வெள்ளனூர் அடுத்துள்ள பூங்கொடி கிராமத்தில் நாட்டு வெடி பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்று செயல்பட்டு வந்துள்ளது. புதுக்கோட்டையைச் சேர்ந்த வைரமணி என்பவர் இந்த ஆலையை நடத்தி வந்துள்ளார். கடந்த 30 ஆம் தேதி ஐந்து பேர் பணிபுரிந்து கொண்டிருந்தபோது தொழிற்சாலையின் மேலே சென்றுகொண்டிருந்த உயர் மின்னழுத்தக் கம்பியில் இருந்து கிளம்பிய தீப்பொறியானது அடுக்கி வைக்கப்பட்டிருந்த நாட்டு வெடி பொருட்கள் மீது பட்டுள்ளது. இதனால் ஏற்பட்ட வெடி விபத்தில் தொழிற்சாலை தரை மட்டமானது.

 

அப்போது தொழிற்சாலையின் உள்ளே இருந்த ஐந்து பேரும் உடல் கருகிய நிலையில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தனர். இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுவினர்  உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த ஐந்து பேரையும் மீட்டுப் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்து இருந்தனர். இந்த விபத்தில் சிக்கிய வீரமுத்து, திருமலை மற்றும் சுரேஷ் ஆகியோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தனர்.

 

இந்நிலையில் தமிழக முதல்வர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “புதுக்கோட்டை மாவட்டம், வெள்ளனூர் வட்டம், பூங்குடி கிராமத்தில் இயங்கி வந்த தனியாருக்குச் சொந்தமான வெடிமருந்து தொழிற்சாலையில் கடந்த 30 ஆம் தேதி ஏற்பட்ட வெடி விபத்தில் காயமடைந்து புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஐந்து நபர்களில் கோவில்பட்டியைச் சேர்ந்த கருப்பையா என்பவரது மகன் வீரமுத்து (வயது 31) என்பவர் கடந்த 3 ஆம் தேதியும், ஆறுமுகம் என்பவரது மகன் திருமலை (வயது 30) என்பவர் கடந்த 3 ஆம் தேதியும் வெள்ளனூரைச் சேர்ந்த பழனி என்பவரது மகன் சுரேஷ் (வயது 35) என்பவர் இன்றும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.

 

Pudukottai factory incident Chief Minister relief announcement

 

மேலும் இவ்விபத்தில் படுகாயமடைந்து புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் வைரமணி மற்றும் குமார் ஆகிய இருவருக்கும் சிறப்பு சிகிச்சை அளிக்கவும் அறிவுறுத்தியுள்ளேன். உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு அவர்களது குடும்பத்தினருக்கு தலா மூன்று இலட்சம் ரூபாயும், படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் இருவருக்கும் தலா ஒரு இலட்சம் ரூபாயும், முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்” எனத் தெரிவித்துள்ளார்.

 


 

சார்ந்த செய்திகள்