Skip to main content

வெள்ளாமையை அழிக்கும் வெள்ளாடுகள் வேண்டாம்... கிராம கட்டுப்பாடு!

Published on 29/06/2021 | Edited on 29/06/2021

 

pudukkottai district village peoples goats


கிராமத்தில் உள்ள மரங்களை, வெள்ளாமையைத் தின்று அழிக்கும் வெள்ளாடுகள் வேண்டாம் என்று ஒரு கிராமமே முடிவெடுத்துள்ளது.

 

புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் ஒன்றியம் முனசந்தை கிராமம், சுமார் 500 குடும்பங்கள் வாழும் முழு விவசாய கிராமம். கிணற்றுப் பாசனத்தில் நெல், காய்கறிகள் விவசாயம் நிறைந்த அழகிய பசுமையான கிராமம். இந்தக் கிராமத்தில் சில வருடங்களுக்கு முன்புவரை வீட்டுக்கு வீடு வளர்த்த வெள்ளாடுகளால் பயிர்கள், மரக்கன்றுகள் அழிக்கப்படுவதாக ஊர் கூடி எடுத்த முடிவுதான் வெள்ளாடுகள் வேண்டாம் என்பது. கிராமங்களில் தங்கள் வருமானத்திற்காக வீட்டுக்கு 2 ஆடுகளையாவது வளர்ப்பது வழக்கம் என்றாலும், பயிர் பச்சைகளை மேய்ந்துவிடுவதால் வெள்ளாடுகள் வளர்ப்பதை நிறுத்திக்கொண்டு, பால் மாடுகள் வளர்க்கத் தொடங்கியதால் தற்போது விவசாயம் செழித்து வளர்கிறது.

 

இதுகுறித்து முன்னாள் எல்லை பாதுகாப்பு வீரரும், உழவர் மன்ற அமைப்பாளருமான வேலாயுதம் கூறும்போது, "எங்க ஊர்ல வீட்டுக்கு வீடு வெள்ளாடுகள் வளர்ப்போம். நான் சர்வீஸ் முடிந்து ஊருக்கு வந்து வேறு வேலைக்குப் போக வேண்டாம், இயற்கை விவசாயம் செய்வோம். பாரம்பரிய நெல் நடுவோம் என்று முடிவெடுத்தேன். கிணறு வெட்டி விவசாயம் தொடங்கித் தொடர்ந்து ஊரெல்லாம் மரக்கன்று பட்டு வளர்க்க உள்ளூர் பிரமுகர்கள், இளைஞர்களை அழைத்தபோது முன்வந்தார்கள்.

 

கிராமத்தில் எல்லையிலிருந்து சாலை ஓரம் தொடங்கி கல்லறை தோட்டம்வரை மரக்கன்றுகளை நட்டு வளரும்போது வெள்ளாடுகள் மேய்ந்துவிடுகின்றன. இதனால் வெள்ளாடுகள் வளர்ப்பதைத் தவிர்த்தால் கிராமம் பசுமையாகும் என்று கிராமம் கூடி முடிவெடுத்தோம். அதாவது 2017ஆம் ஆண்டு கிராமம் முடிவெடுத்தது அப்போது அரசாங்கமே வெள்ளாடுகளைக் கொடுத்தது. அதனால் அதற்காக சில மாதங்கள் தளர்வு கொடுத்தோம். 

 

அந்த ஆடுகளை வளர்த்து விற்றதோடு முற்றிலும் வெள்ளாடுகளைத் தவிர்ப்போம். வெள்ளாடுகள் வளர்த்த சாதாரண குடும்பத்திற்கும் வருமானத்திற்காக பால் மாடுகளை வளர்த்தால் பால் விற்பதோடு வயலுக்கு நல்ல எரு கிடைக்கும் என்று முடிவெடுத்து வீட்டுக்கு வீடு பால் மாடுகளை வளர்க்கத் தொடங்கினோம். ஒருநாளைக்கு குறைந்தது 600 லிட்டர் பால் கறந்து பண்ணையில் ஊற்றி வருமானம் ஈட்டுகிறோம்.

pudukkottai district village peoples goats

 

வெள்ளாடுகள் வளர்ப்பதை நிறுத்திய பிறகு மரக்கன்றுகள் வளர்ந்து நிற்கின்றன. இயற்கை உரத்தோடு பயிர்களும் செழித்து வளர்கின்றன. கல்லறை தோட்டத்தில் 100 வகையான கன்றுகளை நட்டு குருங்காடு வைத்து வளர்க்கிறோம்" என்றார்.

 

அவர் சொன்னது போலவே 30 கிணறு வெட்டி மின்மோட்டார் வைத்து தண்ணீர் இறைத்து விவசாயம் செய்கிறார்கள் விவசாயிகள். மரங்களும் நிறைய வளர்ந்திருக்கிறது.

 

 

சார்ந்த செய்திகள்