Governor RN Ravi says Dr Balaji incident is strongly condemnable 

சென்னை கிண்டியில் செயல்பட்டு வரும் கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையின் புற்றுநோய் துறையில் மருத்துவர் பாலாஜி பணியாற்றி வருகிறார். இத்தகைய சூழலில் தான் இன்று (13.11.2024) காலை அடையாளம் தெரியாத நபர் ஒருவர் கத்தியால் குத்தியுள்ளார். இந்த கத்திக்குத்தில் காயமடைந்த பாலாஜி மீட்கப்பட்டு அதே மருத்துவமனையில் சிகிச்சைக்காகத் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவர் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

Advertisment

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், சென்னை பெருங்களத்தூரைச் சேர்ந்த விக்னேஸ்வரன் என்பவரின் தாயாருக்கு சம்பவம் நடைபெற்ற மருத்துவமனையில் கடந்த நான்கு மாத காலமாகப் புற்றுநோய் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அப்போது அவருக்கு சரியாக சிகிச்சை அளிக்கவில்லை என விக்னேஸ்வரனும் அவருடன் வந்த மற்றொரு நபரும் மருத்துவர் பாலாஜியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது மருத்துவர் பாலாஜி அந்த நபர்களிடம் அலட்சியமாகப் பதில் அளித்ததால் ஆத்திரமடைந்து மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மருத்துவரைக் குத்தியதாக விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

Advertisment

மேலும் இது குறித்து அவரிடம் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அரசு மருத்துவமனைக்குள் புகுந்து, மருத்துவரை இளைஞர் ஒருவர் கத்தியால் குத்திய சம்பவம் தமிழகத்திலேயே அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. அதே சமயம் மருத்துவர் பாலாஜி மீதான தாக்குதலைக் கண்டித்து அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் போராட்டம் நடத்தினர். போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவர்கள் சங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்த அரசு அழைப்பு விடுத்திருந்த நிலையில் அமைச்சர் மா.சுப்ரமணியன் தலைமையில் இந்த பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கம் உள்ளிட்ட சங்கங்கள் இந்த பேச்சுவார்த்தையில் பங்கேற்றனர்.

Governor RN Ravi says Dr Balaji incident is strongly condemnable 

இந்நிலையில் மருத்துவர் பாலாஜி தாக்கப்பட்ட சம்பவத்திற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார். இது தொடர்பாக ஆளுநர் மாளிகையின் எக்ஸ் சமூகவலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “டாக்டர் பாலாஜி ஜெகநாதன் மீதான தாக்குதல் அதிர்ச்சியளிப்பதுடன் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. மருத்துவர்களுக்கு எதிரான எந்தவொரு வன்முறையும் முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. மருத்துவர்கள் மற்றும் சுகாதாரத்துறையினரின் பாதுகாப்பை, குறிப்பாக மருத்துவமனைகளில் உறுதிப்படுத்த அவசர மற்றும் உடனடி நடவடிக்கைகள் அவசியம். மருத்துவர் பாலாஜி விரைவாக உடல்நலம் பெற வேண்டிக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

Advertisment