வடகாடு வடக்குப்பட்டி அரசு பள்ளியில் மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்க வேண்டும் என்பதற்காக பள்ளியில் முதல் மதிப்பெண் பெறும் மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள்கள் வழங்கப்பட்டது.
மாணவர்கள் குறைவாக உள்ள அரசு பள்ளிகளை மூடப்படும் என்ற நிலையில் உள்ளதால் கடந்த சில ஆண்டுகளாக அரசுப்பள்ளிகளில் மாணவர்களை சேர்க்க அந்தந்த கிராம பொதுமக்கள், பெற்றோர்கள், இளைஞர்கள் கிராமங்கள் தோறும் வீடு வீடாகச் சென்று வழிப்புணர்வு ஏற்படுத்தி உள்ளனர். மேலும் அந்தந்த பகுதி அரசு பள்ளிகளுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வாங்கிக் கொடுப்பதுடன் ஆசிரியர் பற்றாக்குறை உள்ள அரசுப் பள்ளிகளுக்கு பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் மூலம் ஆசிரியர்களை நியமித்துள்ளனர். மேலும் கொத்தமங்கலம் சிதம்பரவிடுதியில் அரசு பள்ளியில் மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்க வேன் வசதி, இலவச சைக்கிள் போன்ற வசதிகளை செய்து கொடுத்து உற்சாகப்படுத்தினார்கள். இதே போல தமிழகம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளில் மாணவர்களை சேர்க்க இளைஞர்களின் பங்கு அதிகரித்துள்ளது.
அதே போல புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு ஊராட்சி வடக்குப்பட்டி அரசு நடுநிலைப் பள்ளியில் மாணவர்களின் சேர்க்கையை அதிகரிக்க வேண்டும் என்பதற்காக இளைஞர்கள் விழிப்புணர்வ ஏற்படுத்தி இருந்த நிலையில் அதே ஊரைச் சேர்ந்த முன்னாள் மாணவியும் மருத்துவருமான ராஜேஸ்வரி கடந்த கல்வி ஆண்டில் 8-ம் வகுப்பு தேர்வில் சிறப்பிடம் பெற்ற புவனேஸ்வரன் உள்ளிட்ட மாணவர்களுக்கு பாராட்டு இலவச சைக்கிள் மற்றும் பரிசுகளை வழங்கினார்.
விழாவிற்கு பள்ளித் தலைமை ஆசிரியர் சந்திரன் தலைமை வகித்தார். பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் தலைவர் ரவிச்சந்திரன், கிராமக் கல்விக் குழுத் தலைவர் ராதிகா ஆகியோர் முன்னிலை வகித்தனர். அரசுப் பள்ளிகளில் மாணவர்களை சேர்க்கையை அதிகரிக்க இளைஞர்களும், பெற்றோர்களும் அதிகமான பரிசுகளை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவதால் அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை அதித்துள்ளதாக இளைஞர்கள் கூறுகின்றனர். மேலும் இந்த ஆண்டு மாணவர்கள் சேர்க்கைக்கு ஏற்ப ஆசிரியர்களை உடனே நியமிக்க வேண்டும் என்றும் கூறினார்கள்.