Skip to main content

பிஎஸ்டி நிறுவனம் கருப்பு பட்டியலில் இல்லை - தமிழ்நாடு அரசு

Published on 21/06/2023 | Edited on 21/06/2023

 

PST company not blacklisted - Tamil Nadu Govt

 

தமிழ்நாட்டில் நிதிநுட்பத்துறை மற்றும் நிதித்துறை வளர்ச்சிக்கு ஏதுவாகவும் மேம்பட்ட நிறுவனங்களின் முதலீடுகளை பெருமளவில் ஈர்த்திடும் வகையில் நிதிநுட்ப நகரம் மற்றும் நிதிநுட்ப கோபுரம் திட்டங்களை தமிழ்நாடு தொழிற்வளர்ச்சி நிறுவனம் (டிட்கோ) செயல்படுத்த உள்ளது. ரூ. 116 கோடி நிதியில் 56 ஏக்கர் பரப்பளவில் இந்த நிதிநுட்ப நகரம் அமைக்கப்பட உள்ளது. இத்திட்டத்திற்கான அடிக்கல் நாட்டுவிழா கடந்த 17 ஆம் தேதி நடந்தது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இத்திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார்.

 

இந்நிலையில் அதிமுக ஆட்சிக்காலத்தில் சென்னை கே.பி.பார்க்கில் தரம் குறைந்த குடியிருப்புகளைக் கட்டியதாக குற்றம் சாட்டப்பட்ட பி.எஸ்.டி நிறுவனத்துக்கு இந்த நிதிநுட்ப நகரம் கட்டுவதற்கான ஒப்பந்தப் புள்ளி கிடைத்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த குடியிருப்புக் கட்டடம் தரமின்றி இருந்ததாக திமுக அரசே குற்றம் சாட்டி சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் ஒன்றையும் நிறைவேற்றி இருந்தது. 

 

இந்நிலையில் தமிழ்நாடு அரசு இது குறித்து விளக்கம் ஒன்றை அளித்துள்ளது. அதில், “தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சியை பன்மடங்கு பெருக்கி படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க தமிழ்நாடு அரசு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பல்வேறு சீரிய முயற்சிகளை எடுத்து வருகிறது. அதில் ஒரு பகுதியாக, சென்னை நந்தம்பாக்கத்தில் நிதி தொழில்நுட்ப நகரம் ஒன்று அமைக்க முடிவு செய்யப்பட்டு நடவடிக்கைகள் தொடங்கப்பட்டன. இத்திட்டத்தின் 2 பணிகளுக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி முதல்வர் தலைமையில் அண்மையில் நடந்தது. தமிழ்நாட்டினை அடுத்தகட்ட வளர்ச்சிக்கு எடுத்துச்செல்லும் இத்திட்டம் குறித்து சில சமூக ஊடகங்களில் வெளியான செய்திகள் குறித்து பின்வரும் விளக்கம் அளிக்கப்படுகிறது.

 

முதல் திட்டமானது, 56.48 ஏக்கர் நிலப்பரப்பில், நில மேம்பாடு மற்றும் அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்ளுவதற்கான திட்டம். இதில், நில மேம்பாடு, உட்புற சாலைகள், மழைநீர் வடிகால் வசதிகள், வெள்ளத் தடுப்புச்சுவர், குடிநீர் மற்றும் மறுசுழற்சி நீர் வழங்கல், கழிவுநீர் சுத்திகரிப்பு வசதிகள், பாதுகாப்பு வசதிகள் போன்ற அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகள் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படும். மின்னணு ஒப்பந்தப்புள்ளி தேர்வின் அடிப்படையில், துறை மதிப்பைவிட 16.34% குறைவாக அதாவது, ரூ.82.87 கோடி மதிப்பீட்டில் நிதிநுட்ப நகர திட்டத்திற்கான கட்டமைப்பு பணிகளை மேற்கொள்வதற்கான பணி ஆணை பிஎஸ்டி நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

 

இரண்டாவது திட்டமானது, 5.60 லட்சம் சதுர அடியில், நிதிநுட்ப கோபுரத்திற்கான கட்டுமான பணிகளை மேற்கொள்வதற்கான திட்டம். இதற்கான பணி ஆணை ரூ.151.55 கோடி மதிப்பீட்டில் மின்னணு ஒப்பந்தப்புள்ளி தேர்வின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டுள்ள யுஆர்சி கன்ஷ்ட்ரக்ஸன் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

 

நிதிநுட்ப நகர திட்டத்திற்கான அடிப்படை கட்டமைப்பு பணிகளுக்கான மின்னணு ஒப்பந்தப்புள்ளி 1.1.2023 அன்று கோரப்பட்டதில், நான்கு ஒப்பந்தப்புள்ளிகள் பெறப்பட்டன. ஒப்பந்தப்புள்ளிகளின் ஆய்வின்போது, ஒப்பந்ததாரர் பிஎஸ்டி இன்ஜினியரிங் கன்ஷ்ட்ரக்ஸன் நிறுவனம் சில ஆண்டுகளுக்கு முன் கட்டிய கே.பி.பார்க் (முதல்நிலை-1) 864 டி டபிள்யு எஸ் குடியிருப்புகள் திட்டத்தில் கட்டுமானத்தின் தரம் குறித்து தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்திடம் சில புகார்கள் வந்த விவரமும் அதன் அடிப்படையில் ஒப்பந்ததாரரின் பதிவை ஏன் தற்காலிக நிறுத்தம், ரத்து செய்யக்கூடாது எனக் காரணம் கேட்கும் குறிப்பாணை வழங்கப்பட்டதும் டிட்கோவின் கவனத்திற்கு வந்தது.

 

பிறகு இந்த விவகாரம் குறித்து பிஎஸ்டி இன்ஜினியரிங் கன்ஷ்ட்ரக்ஸன் நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தை நாடியது. சென்னை உயர் நீதிமன்றம் தனது 2.12.2021 தேதியிட்ட ஆணையின் மூலம் மேற்கூறிய தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் நடவடிக்கைக்கு இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்துள்ளது எனவும் அறிய வந்தது.

 

தமிழ்நாடு ஒப்பந்தப்புள்ளி வெளிப்படைத்தன்மை சட்டம் மற்றும் விதிகளின்படி, ஒப்பந்தப்புள்ளி சமர்ப்பிக்கும் நிறுவனம் கருப்பு பட்டியலில் இருப்பது கண்டறியப்பட்டால் மட்டுமே, அந்நிறுவனம் தகுதி நீக்கம் செய்யப்படும். பிஎஸ்டி நிறுவனம் கருப்பு பட்டியலில் இல்லாத நிலையில், பிஎஸ்டி நிறுவனமும் மற்றும் மற்ற இரு நிறுவனங்களும் சமர்ப்பித்த ஒப்பந்தப்புள்ளிகள் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. மூன்று ஒப்பந்ததாரர்களின் விலைப்புள்ளிகள் திறக்கப்பட்டதில், துறையின் மதிப்பைவிட 16.34% குறைவாக, அதாவது ரூ.82.87 கோடி மதிப்பீட்டில் பணிகளை மேற்கொள்ள குறைந்த விலைப்புள்ளி சமர்ப்பித்த பிஎஸ்டி நிறுவனத்திற்கு பணி ஆணை வழங்கப்பட்டது.

 

இத்திட்டங்களுக்கான ஒப்பந்தப்புள்ளி தேர்வு முறைகள் அனைத்தும், ஆன்லைன் நடைமுறை மூலம் மேற்கொள்ளப்பட்டது. மேலும், இந்த தேர்வு முறையின் முடிவுகள், பொதுமக்கள் பார்வையிடும் வகையில், tntenders.gov.in என்ற இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. ஒப்பந்தப்புள்ளி ஏல முறை தேர்வுகள் அனைத்தும் நியாயமான, ஒளிவுமறைவற்ற மற்றும் வெளிப்படையான முறையில் “ஒப்பந்தப்புள்ளி வெளிப்படைத்தன்மை சட்டம் மற்றும் விதிகளின்” அடிப்படையில் மட்டுமே நடந்தது. மேற்கூறிய இரண்டு பணி ஆணைகளும், துறை மதிப்பீடுகளை விட குறைவான மதிப்பீட்டில் வழங்கியதால், டிட்கோ நிறுவனத்திற்கு ரூ.36.15 கோடி அளவுக்கு சேமிப்பு ஏற்பட்டுள்ளது. இதுவே இந்த ஏலமுறைகள், முழுமையான பங்கேற்பு, வெளிப்படையான போட்டித் தன்மையுடன் நடந்துள்ளது என்பதற்கு சான்றாகும்.

 

2021க்கு பிறகு, இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில், பிஎஸ்டி இன்ஜினியரிங் கன்ஷ்ட்ரக்ஸன் நிறுவனத்திற்கு பணிகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், தூத்துக்குடி துறைமுகத்திற்கு 6 வழி தேசிய நெடுஞ்சாலை ரூ.130.20 கோடி திட்ட மதிப்பில் இபிசி முறையில் அமைப்பதற்கான பணி ஆணையை 31.3.2023 அன்று இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் இந்நிறுவனத்திற்கு வழங்கியுள்ளதும் குறிப்பிடத்தக்கது. கே.பி. பார்க் (முதல்நிலை-1) 864 இடபிள்யுஎஸ் குடியிருப்புகள் கட்டுவதில் கண்டறியப்பட்டுள்ள குறைபாடுகள் குறித்த சட்டப்பூர்வ நடவடிக்கைகளை தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. மேலும், குறைபாடுகள் நிரூபிக்கப்பட்டால் ஒப்பந்தப்புள்ளி வெளிப்படைத்தன்மை சட்டம் மற்றும் விதிகளின்படியும் மற்றும் ஒப்பந்தப் பணியின் நிபந்தனைகளின்படியும் சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு எதிராக தண்டனை வழங்கப்படும் வகையிலான நடவடிக்கைகள் எடுக்கப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்