Skip to main content

"எவ்விதப் பயனையும் தராத வெற்றுச்சடங்காகப் போய்விடும்" - அரசின் அறிவிப்பை விமர்சித்த சீமான்

Published on 07/08/2021 | Edited on 07/08/2021

 

 

'Provide paid leave!' naam tamilar party seeman statement

 

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று (07/08/2021) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, "அண்மையில் கொண்டுவரப்பட்ட நடைமுறையின்படி, காவலர்கள் வாரத்தில் ஒருநாள் விடுப்பு எடுப்பதற்கு மிகைநேரப்பணி ஊதியம் பிடித்தம் செய்யப்படுகிறது எனும் செய்தியறிந்து அதிர்ச்சியுற்றேன். ஓய்வின்றித் தொடர் காவல் பணியில் ஈடுபடும் காவலர்களது உடற்சோர்வு, மனஅழுத்தத்தைப் போக்கவும், குடும்பத்தோடு செலவிட அவர்களுக்கு நேரத்தை வழங்கும் விதமாகவும் காவலர்களுக்கு வாரத்தில் ஒருநாள் கட்டாய விடுப்பு வழங்க வேண்டுமெனத் தொடர்ச்சியாக நாங்கள் முன்வைத்த கோரிக்கை முழக்கத்திற்குச் செயல்வடிவம் கொடுத்திருக்கிறார்களென நம்பி, அரசுக்கு வாழ்த்தும், நன்றியும் தெரிவித்தவேளையில், அவ்விடுப்பு எடுப்பதற்கு ஊதியப்பிடித்தம் செய்யப்படும் செய்தி பெரும் ஏமாற்றத்தைத் தருகிறது.

 

எவ்வித நேரக் கட்டுப்பாடுமின்றி இரவு, பகலாகக் காவல் பணியாற்றிவரும் காவலர்களுக்கு ஊதியத்தோடு கூடிய ஒருநாள் விடுப்பு வழங்குவதுதான் அவர்களை இளைப்பாற்றும் தகுந்த நடவடிக்கையாகும். அதனை விடுத்து, மிகைநேரப்பணி ஊதியத்தை (ETR) துறப்பதாக இருந்தால் மட்டும் விடுப்பு எடுத்துக்கொள்ளுங்கள் என நிபந்தனையோடு அறிவிப்புச் செய்வது எவ்விதத்திலும் காவலர்களுக்கு நன்மை பயக்காது; இன்றைய பொருளாதாரச் சூழலில் ஊதியத்தை இழந்து விடுப்பு எடுப்பதை எந்தக் காவலரும் ஏற்க மாட்டார்கள். ஊதியத்தை இழந்து விடுப்பு எடுத்துக்கொள்வது ஏற்கனவே நடைமுறையிலிருக்கையில், இப்போது கொண்டுவரப்பட்டிருக்கும் நடைமுறையும் அதிலிருந்து மாறுபடவில்லையெனும்போது ஒருநாள் விடுப்பு அறிவிப்பு காவலர்களுக்கு எவ்விதப் பயனையும் தராத வெற்றுச்சடங்காகப் போய்விடும்.

 

ஆகவே, காவலர்களின் உடல்நலனையும், மனநலனையும் மனதில்கொண்டு காவலர்களுக்கு விடுப்பு எடுப்பதற்கு மிகைநேரப்பணி ஊதியத்தைப் பிடித்தம் செய்கிற முறையைக் கைவிட்டு, ஊதியத்துடன் கூடிய விடுப்பை வழங்க வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறேன்." இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்