Skip to main content

கன்னியாகுமரி வந்தடைந்தார் பிரதமர் மோடி!

Published on 30/05/2024 | Edited on 30/05/2024
Prime Minister Modi arrived in Kanyakumari

இந்தியாவில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக அறிவிக்கப்பட்ட நிலையில் அதில் 6 கட்ட தேர்தல்கள் நடைபெற்று முடிந்துள்ளது. அதே சமயம் இறுதி மற்றும் 7 ஆம் கட்டத் தேர்தல் ஜூன் 1 ஆம் தேதி  நடைபெற உள்ளது. இதனை எதிர்கொண்டு அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வந்தனர். இதனையடுத்து இன்று மாலை 5 மணியுடன் இறுதிக்கட்ட தேர்தல் பரப்புரையும் முடிந்துள்ளது. மேலும் ஜூன் நான்காம் தேதி தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.

இத்தகைய சூழலில் தான் பிரதமர் மோடி இன்று (30.05.2024) கன்னியாகுமரி வர உள்ளதாகத் தகவல் வெளியாகி இருந்தது. இந்தப் பயணத்திட்டத்தின்படி பிரதமர் மோடி டெல்லியில் இருந்து விமானம் மூலம் திருவனந்தபுரம் வருகிறார். அங்கிருந்து கன்னியாகுமரி வருகை புரிகிறார். அதன்பின்னர் கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் தியான மண்டபத்தில் தியானம் செய்கிறார். ஜூன் 1 ஆம் தேதி தியானம் முடிந்து அன்று மாலை திருவனந்தபுரம் சென்று அங்கிருந்து டெல்லி செல்வதாகக் கூறப்பட்டது.

இந்நிலையில் 3 நாள் பயணமாகப் பிரதமர் மோடி டெல்லியில் இருந்து விமானம் மூலம் கேரள மாநிலம் திருவனந்தபுரம் வருகை புரிந்தார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரிக்கு புறப்பட்டு வந்தார். கன்னியாகுமரி விருந்தினர் மாளிகையில் சிறிது நேரம் ஓய்வெடுக்கும் மோடி அதன் பின்னர் பகவதி அம்மன் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்ய உள்ளார். இதனால் பகவதி அம்மன் கோவில் பிரசாதம் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல் விவேகானந்தர் பாறையில் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வருகைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இன்று மாலை 6 மணியில் இருந்து பிரதமர் மோடி விவேகானந்தர் மண்டபத்தில் தியானம் செய்யவுள்ளதாக கூறப்படுகிறது. அதே சமயம் பிரதமர் மோடியின் வருகை காரணமாக கன்னியாகுமரியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. முன்னதாக பாஜக மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு பிரதமர் மோடியின் நிகழ்ச்சியில் பங்கேற்க அனுமதி மறுக்கப்பட்டது. பிரதமரின் நிகழ்ச்சியில் பங்கேற்க அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் அங்கிருந்து பொன்.ராதாகிருஷ்ணன்  திரும்பிச் சென்றது குறிப்பிடத்தக்கது. 

சார்ந்த செய்திகள்