Skip to main content

பொங்கல் தொகுப்பு; ஆழ்வார்பேட்டையில் துவக்கி வைத்த முதலமைச்சர்

Published on 10/01/2024 | Edited on 10/01/2024

 

தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை அனைத்துத் தரப்பு மக்களும் சிறப்பாகக் கொண்டாடும் வகையில் 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு கரும்பு ஆகியவை பொங்கல் பரிசுத் தொகுப்பாக வழங்கப்படும் என்று கடந்த 2 ஆம் தேதி (02.01.2024) தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது. அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்த 5 ஆம் தேதி (05.01.2024) பரிசுத் தொகுப்புடன் மத்திய, மாநில அரசு ஊழியர்கள், வருமான வரி செலுத்துவோர், பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரிவோர், சர்க்கரை அட்டைதாரர்கள், பொருளில்லா அட்டைதாரர்கள் தவிர்த்து ஏனைய குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் 1,000 ரூபாய் பொங்கல் பரிசாக நியாய விலைக் கடைகளில் பொங்கல் திருநாளுக்கு முன்னதாக ரொக்கமாக வழங்கப்படும் என அறிவித்திருந்தார்.

மேலும், பொங்கல் திருநாளை முன்னிட்டு வழங்கப்படவுள்ள இலவச வேட்டி மற்றும் சேலை பொங்கல் பரிசுத் தொகுப்புடன் சேர்த்து வழங்கப்படும் என அறிவித்திருந்தார். அதன்படி, தகுதியான குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கிடும் வகையில், கடந்த 7ம் தேதி முதல் வீடு வீடாக டோக்கன் விநியோகம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இதனையடுத்து வரும் 13 ஆம் தேதி (13.1.2024) வரை பொங்கல் பரிசுத் தொகுப்பு குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும். அதே சமயம் விடுபட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு வரும் 14 ஆம் தேதி (14.1.2024) வழங்கிடவும், பொங்கல் திருநாளுக்கு முன்னதாகத் தகுதியான அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் வழங்கும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.

அதே சமயம் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசாக ரூ. 1000 வழங்க வேண்டும் எனப் பொதுமக்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் எனப் பல்வேறு தரப்பினரும் அரசுக்குக் கோரிக்கை விடுத்திருந்தனர். இந்நிலையில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.1000 பொங்கல் பரிசாக வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார்.

அதன்படி சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள நியாய விலைக் கடையில் இன்று காலை ரூ. 1000 ரொக்கத்துடன் பொங்கல் பரிசுத் தொகுப்பை வழங்கி திட்டத்தை துவக்கி வைத்தார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின். இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் சேகர் பாபு, சக்கரபாணி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். 

சார்ந்த செய்திகள்