Skip to main content

விருதுநகரில் ஆர்த்தெழுந்த அரசியல் கட்சிகள்! ஆர்ப்பாட்டம், ஸ்டேட் வங்கி முற்றுகை, ரயில் மறியல்!

Published on 04/04/2018 | Edited on 04/04/2018
protest


சிவகாசியில் திருச்சுழி திமுக சட்டமன்ற உறுப்பினர் தங்கம் தென்னரசு தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அவர், “காவிரி மேலாண்மை வாரியத்திற்காக திமுக செய்த சாதனைகளை மறைத்துவிட்டு, பொறுப்பில் உள்ள ஆளும் கட்சியினர், திமுக மீது புழுதிவாரி தூற்றுகிறார்கள். காவிரி மேலாண்மை நடுவர் நீதிமன்றத்தைக் கொண்டுவந்ததே திமுகதான். நடுவர் நீதிமன்றத்தின் இடைக்கால தீர்ப்பை வாங்கியதும் திமுகதான். ஆளும் கட்சியினர் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கத் தவறியதால்தான், திமுக உள்ளிட்ட கட்சிகள் போராட்டம் நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது.” என்றார். சிவகாசியில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக, காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் என அனைத்துக் கட்சிகளையும் சேர்ந்த 400-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
 

protest


ராஜபாளையத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் லிங்கம் தலைமையில், ரயில் மறியல் போராட்டம் அறிவிக்கப்பட்டு, நூற்றுக்கும் மேற்பட்டோர், ராஜபாளையம் ரயில் நிலையம் முன்பாக குவிந்தனர். ரயில் நிலையத்திற்குள் நுழைய முற்பட்டவர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. ஆனாலும், தடையை மீறி உள்ளே சென்று, மதுரை – செங்கோட்டை பயணிகள் ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கோஷமிட்டனர். இந்தக் களேபரத்தால், அந்தப் பயணிகள் ரயில் 20 நிமிடங்கள் தாமதமாகக் கிளம்பியது. போராட்டத்தில் ஈடுபட்டவர்களை ராஜபாளையம் திமுக சட்டமன்ற உறுப்பினர் வாழ்த்திப் பேச, 200-க்கும் மேற்பட்டவர்களைக் காவல்துறையினர் கைது செய்தனர்.
 

protest


ஸ்ரீவில்லிபுத்தூரில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கத் தவறிய மத்திய அரசைக் கண்டித்து, நாம் தமிழர் கட்சி சார்பில் ஸ்டேட் வங்கியை முற்றுகையிடும் போராட்டம் அறிவிக்கப்பட்டு, 50-க்கும் மேற்பட்டோர் அங்கு திரண்டனர். அப்போது காவல்துறையினர் தடுத்ததால், வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஆனாலும், முற்றுகையிடுவதில் முனைப்பு காட்டியதால், தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அடுத்து, மத்திய, மாநில அரசோடு, காவல்துறையயும் கண்டித்துக் கோஷங்கள் எழுப்பிய நாம் தமிழர் கட்சியினர் கைது செய்யப்பட்டனர்.

சார்ந்த செய்திகள்