Skip to main content

அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு காவல்துறை மீண்டும் சம்மன்

Published on 27/12/2023 | Edited on 27/12/2023
Police summon enforcement officials again

திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் துணை சூப்பிரண்டாக இருக்கக்கூடிய டாக்டர் சுரேஷ்பாபுவின் சொத்துக் குவிப்பு வழக்கை விசாரிக்காமல் இருக்க ரூ. 20 லட்சம் லஞ்சம் பெற முயன்றபோது, கடந்த டிசம்பர் 1 ஆம் தேதி லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரால் மதுரை மண்டல அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி கைது செய்யப்பட்டார். அதன்பின் திண்டுக்கல் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டு மதுரை மத்திய சிறைக்கு மாற்றினார்கள்.

அதே சமயம் அங்கித் திவாரி, தான் பெற்ற லஞ்சப் பணத்தை தன்னுடன் பணியாற்றும் மேலும் சில அதிகாரிகளுக்கு வழங்கியதாகத் தெரிவித்திருந்தார். எனவே லஞ்சப் பணத்தில் வேறு யாருக்கேனும் பங்கு உள்ளதா என்பது குறித்து விசாரணை நடத்த லஞ்ச ஒழிப்புத்துறையினர் முடிவு செய்து திண்டுக்கல் மாவட்ட குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் அங்கித் திவாரியை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிகோரி மூன்று நாட்கள் காவலில் எடுத்து விசாரித்தனர்.

அதனைத் தொடர்ந்து அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி தரப்பில் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு கடந்த 19 ஆம் தேதி  நீதிபதி சிவஞானம் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்பொழுது தமிழ்நாடு அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் முகமது ஜின்னா ஆஜராகி பல்வேறு அதிர்ச்சி தகவலை வெளியிட்டார். கைது செய்யப்பட்ட அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட மடிக்கணினியில் 75 அதிகாரிகளின் பட்டியலில் உள்ளது. அவர்கள் மீது வழக்குகள் உள்ளது. எனவே இவருக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என கடும் எதிர்ப்பு தெரிவித்தார். அதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி ஜாமீன் மனு மீதான தீர்ப்பு கடந்த 20 ஆம் தேதி வழங்கப்படும் என தீர்ப்பை ஒத்தி வைத்திருந்தார். இதனையடுத்து அங்கித் திவாரியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவு பிறப்பித்திருந்தார்.

இதனையடுத்து, மதுரை மண்டல அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி மீது அமலாக்கத்துறை தனியாக வழக்குப்பதிவு செய்துள்ளது. இதன் மூலம் அவர் மீதான குற்றச்சாட்டு குறித்து துறை ரீதியாக விசாரணை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி  அளித்த புகாரின் பேரில் அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது மதுரை தல்லாகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர். அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி பற்றி அமலாக்கத்துறை அலுவலகத்தில் சோதனை செய்த போது, லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்ததாக அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 

மேலும், அனுமதியின்றி ஆவணங்களை எடுத்துச் சென்றதாக காவல் ஆணையரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் புகார் அளித்திருந்தனர். இதனையடுத்து, அவர்கள் அளித்த புகார் தொடர்பாக ஆதாரங்களை தருமாறு அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு போலீசார்  சம்மன் அனுப்பியிருந்தனர். இதனிடையே, தல்லாகுளம் காவல் நிலையத்தில் நேற்று (26-12-23) புகார் தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு இரண்டாவது முறையாக சம்மன் அனுப்பியிருந்தனர். ஆனால், அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று விசாரணைக்கு ஆஜராகவில்லை என்று கூறப்படுகிறது. அதனால், டிஜிபி உத்தரவுப்படி அமலாக்கத்துறை அதிகாரிகள் ஆஜராகுமாறு மூன்றாவது முறையாக மீண்டும் போலீஸ் சம்மன் அனுப்பியுள்ளது. 

சார்ந்த செய்திகள்

Next Story

‘சுகர் வருவதற்காகவே ஸ்வீட் சாப்பிடுகிறார்” - கெஜ்ரிவால் மீது அமலாக்கத்துறை குற்றச்சாட்டு

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Kejriwal accused by the enforcement department to eats sweets just to get sugar

டெல்லி மதுபானக் கொள்கை வழக்கு தொடர்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 9 முறை அமலாக்கத்துறை சார்பில் சம்மன் அனுப்பியும், அவர் ஆஜராகாமல் தவிர்த்து வந்தார். இது தொடர்பாக அவர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு கடந்த மார்ச் மாதம் 21 ஆம் தேதி(21.03.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு இடைக்காலத் தடை விதிக்க முடியாதென உயர்நீதிமன்றம் தெரிவித்திருந்தது. மேலும் முன் ஜாமீன் வழங்கவும் டெல்லி உயர் நீதிமன்றம் மறுத்திருந்தது. இதனையடுத்து அரவிந்த் கெஜ்ரிவால் அன்றைய தினமே (21.03.2024) அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார்.

இதனையடுத்து அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஏப்ரல் 15 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதற்கிடையே தன்னுடைய கைது நடவடிக்கையை ‘சட்டவிரோத கைது’ என அறிவிக்கக் கோரியும், ஜாமீன் கோரியும் கெஜ்ரிவால் தரப்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் கெஜ்ரிவால் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து கடந்த 9 ஆம் தேதி (09.04.2024) உத்தரவிட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் தன்னைக் கைது செய்ததை எதிர்த்து தாக்கல் செய்த மனுவை நிராகரித்த டெல்லி உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து அரவிந்த் கெஜ்ரிவால் உச்ச நீதிமன்றத்தில் கடந்த 10 ஆம் தேதி (10.04.2024) மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து, இந்த வழக்கு நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா மற்றும் தீபாங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வில் கடந்த 15ஆம் தேதி விசாரனைக்கு வந்தது. அப்போது அரவிந்த் கெஜ்ரிவால் தரப்பு வாதாடுகையில், “தன்னை தேர்தல் பிரச்சாரத்தில் இருந்து தடுப்பதற்காகவே இந்தக் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டது. இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், “இந்த வழக்கில் அமலாக்கத்துறை பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பிக்கப்படுகிறது. வரும் 24 ஆம் தேதிக்குள் அமலாக்கத்துறை இது குறித்து பதிலளிக்க வேண்டும். இதனையடுத்து அரவிந்த் கெஜ்ரிவால் தரப்பு வாதங்களை முன் வைக்கலாம்” என நீதிபதிகள் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து வழக்கு விசாரணையை ஏப்ரல் 19 ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

இதனிடையே, அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கல் செய்த ஜாமீன் மனு டெல்லி உயர்நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. கடந்த முறை அவர் அளித்த ஜாமீன் மனு விசாரணைக்கு வந்த போது, ‘தான் சர்க்கரை நோயால் அவதிப்படுகிறேன் என்றும், தனது ரத்த அளவுகளை மருத்துவரைக் கொண்டு தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்றும்’ கோரிக்கை விடுக்கப்பட்டது.

இந்த நிலையில், அரவிந்த் கெஜ்ரிவாலின் ஜாமீன் மனு இன்று (18-04-24) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஜோகப் ஹொசெயின், “சர்க்கரை நோய் அதிகம் உள்ளதாகக் கூறும் அரவிந்த் கெஜ்ரிவால், சிறையில் மாம்பழம் சாப்பிடுவது, இனிப்புகள் சாப்பிடுவது, சர்க்கரையுடன் டீ சாப்பிடுவது உள்ளிட்டவைகளை வேண்டுமென்றே சாப்பிட்டு தனது சர்க்கரை அளவை அதிகரிக்கிறார். இரத்த சர்க்கரை அளவு ஏற்ற இறக்கங்களைக் காரணம் காட்டி மருத்துவக் காரணங்களுக்காக ஜாமீன் பெறுவதற்கான ஒரு களமாக இதைப் பயன்படுத்த கெஜ்ரிவால் விரும்புகிறார்” என்று வாதாடினார்.

இதையடுத்து, அரவிந்த் கெஜ்ரிவால் தரப்பு வழக்கறிஞர் விவேக் ஜெயின், ‘அமலாக்கத்துறை வைக்கும் இந்தக் குற்றச்சாட்டுகள் ஊடகங்களில் இது போன்றத் தகவல் பரவ வேண்டும் என்பதற்காகவே இதைச் சுமத்துகிறது. மருத்துவர்கள் பரிந்துரையின் பேரிலேயே அவர் உணவுகளை எடுத்து வருகிறார்’ என்று கூறினார்.

Next Story

தேர்தல் வருவதால் கைது செய்யாமல் இருக்க முடியுமா? - அமலாக்கத்துறை

Published on 03/04/2024 | Edited on 03/04/2024
Arvind Kejriwal case, ed question whether it is possible not to arrest as elections are coming up

டெல்லி மதுபானக் கொள்கை வழக்கு தொடர்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 9 முறை அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியும், அவர் ஆஜராகாமல் தவிர்த்து வந்தார். இது தொடர்பாக அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு கடந்த 21 ஆம் தேதி (21.03.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு இடைக்காலத் தடை விதிக்க முடியாதென உயர்நீதிமன்றம் தெரிவித்திருந்தது. மேலும் முன் ஜாமீன் வழங்கவும் டெல்லி உயர் நீதிமன்றம் மறுத்திருந்தது.

இதனையடுத்து அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டிற்கு அன்றைய தினமே (21.03.2024) 12 பேர் கொண்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் வருகை தந்து அரவிந்த கெஜ்ரிவாலிடம் விசாரணையும், அவரது வீட்டில் சோதனையும் மேற்கொண்டனர். அதன் பின்னர் அமலாக்கத்துறையால் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டார். மேலும் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஏப்ரல் 15 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து திகார் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.

இதனிடையே அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்தும் உடனடியாக தன்னை விடுவிக்க கோரியும் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை இன்று நீதிமன்றத்தில் வந்த போது, தேர்தல் நேரத்தில் தேர்தல் பணிகளை மேற்கொள்ளாதவாறு தன் மீது கைது நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக அமலாக்கத்துறை மீது அரவிந்த் கெஜ்ரிவால் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது.

இதையடுத்து, மதுபானக் கொள்கை முறைகேட்டில் அரவிந்த் கெஜ்ரிவால் தான் முக்கிய குற்றவாளி; குற்றச் செயலில் முதன்மையாக இருப்பது அவர்தான். தேர்தல் வருவதால் கைது செய்யாமல் இருக்க முடியுமா? அரசியலில் இருப்பவர் தேர்தலுக்கு இரண்டு நாட்கள் முன்பு ஒரு கொலை செய்தால் அவரை கைது செய்யாமல் இருக்க முடியுமா? என அமலாக்கத்துறை கேள்வி எழுப்பியது.

இந்த முறைகேடு வழக்கில் எங்களிடம் போதுமான ஆதாரங்கள் உள்ளன. அதன் அடிப்படையிலேயே கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் எங்களிடம் போதுமான அளவிற்கு வருமான வரித்துறை தரவுகளும் இருக்கின்றது என அமலாக்கத்துறை தரப்பில் இருந்து வாதிடப்பட்டது. இப்படியாக இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தார்.