Skip to main content

தண்ணீர், நிலம், சுத்தமான காற்று மற்றும்  விவசாயிகளுக்காக போராடினால்,  குரல் கொடுத்தால் அவர்களை  மாவோயிஸ்ட், நக்சல் என தமிழக  அரசு சொல்லுமா?

Published on 20/06/2018 | Edited on 20/06/2018

பியூஸ்மனுஷ் கைது சம்பவத்தில்  அரசு, காவல் துறை இரண்டுமே சட்டவிரோத செயல்களில் ஈடுபடுகின்றன எனவும், உண்மையை அரசுக்கு எடுத்து உணர்த்தினால் கைது செய்வது என்பது சரியான நடவடிக்கை அல்ல என பியூஸ் மனுஸ் சகோதரி  ஊர்வசி் லுனியா குற்றம்சாட்டியுள்ளார்.

 

piyush manush


 

 

 

கோவை பிரஸ் கிளப்பில்  சமூக ஆர்வலர் பியூஸ் மனுஸ் சகோதரி ஊர்வசி் லுனியா செய்தியாளர்களை  சந்தித்தார். அப்போது நேற்று முன்தினம் இரவு  பியூஸ்மனுஷ் கைது செய்யப்பட்டது குறித்து குடும்பத்தினருக்கு  காவல் துறையினர் முறையான தகவல் எதுவும் தெரிவிக்கவில்லை எனவும், பியூஸ்மனுசை கடத்தி சென்றது போல அவரை அழைத்து சென்று கைது செய்துள்ளனர் எனவும் தெரிவித்தார். மேலும் கைது செய்யப்பட்ட பின்னர் வழக்கறிஞர்கள்  அவரை சந்திக்கவும்  காவல் துறை அனுமதிக்கவில்லை எனவும், பியூஸ் மனுஷ் செல்போனை இதுவரை காவல் துறையினரே  வைத்துள்ளனர் எனவும், செல்போனை தங்களிடம் போலீசார் கொடுக்க மறுப்பதாகவும் ஊர்வசி லுனியா தெரிவித்தார். சேலம் - சென்னை சாலை குறித்து தனது கருத்தை பியூஸ் செல்கின்றார் எனவும், அவர் மக்களை தூண்டிவிடவில்லை எனவும் தெரிவித்த அவர், தண்ணீர், நிலம், சுத்தமான காற்று மற்றும்  விவசாயிகளுக்காக போராடினால்,  குரல் கொடுத்தால் அவர்களை  மாவோயிஸ்ட், நக்சல் என தமிழக  அரசு சொல்லுமா? எனவும் கேள்வி எழுப்பினார்.

 

 

 

8 வழிச்சாலை குறித்து முழுமையாக ஆய்வுகள் செய்யப்படவில்லை எனவும் இதுகுறித்து கேள்வி எழுப்பியதால்  பியூஸ் மனுஷ் கைது செய்யப்பட்டு இருக்கின்றார் எனவும் தெரிவித்த அவர், பியூஸ் மனுஷ் மீது போலியான குற்றச்சாட்டுகளை முன் வைத்து அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய காவல் துறை முயல்கின்றது எனவும் தெரிவித்தார். அதிகாரத்தில்  இருப்பவர்களை பாதுகாப்பது மட்டும் காவல் துறையின் பணியா எனவும் கேள்வி எழுப்பிய அவர், மக்களுக்கு அவர்களின் உரிமைகளை சொல்லிக்கொடுப்பது, அறியாமையை போக்குவது இது போராட்டத்தை தூண்டும் செயலா எனவும் கேள்வி எழுப்பினார். பியூஸ் மனுஷ் கைது சம்பவத்தில் அரசு, காவல் துறை இரண்டுமே சட்டவிரோத செயல்களில் ஈடுபடுகின்றன என தெரிவித்த அவர், உண்மையை அரசுக்கு எடுத்து உணர்த்தினால் கைது செய்வது என்பது சரியான நடவடிக்கை அல்ல எனவும் தெரிவித்தார். செய்தியாளர் சந்திப்பில் அவருடன் தந்தை பெரியார் திராவிட கழக பொதுச் செயலாளர் கு.ராமகிருஷ்ணன், தீண்டாமை ஒழிப்பு  முன்னணி செயலாளர் சிவஞானம், சமூக ஆர்வலர் சிவா ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது தமிழகம் தழுவிய அளவில் அனைத்து சுற்றுசுழல் ஆர்வலர்களையும் ஒருங்கிணைந்து போராட்டம் நடத்த உள்ளதாகவும், சேலம் சென்னை சாலையால் 5 மாவட்ட விவசாய நிலங்கள் பாதிக்கப்படுகின்றன எனவும் அவர்கள் தெரிவித்தனர்.

 

 

 

 

 

சார்ந்த செய்திகள்