Skip to main content

சிதம்பரம் அருகே பெட்ரோல் பங்க் ஊழியரை வெட்டி பணப்பையை பறித்த குற்றவாளிகள் கைது

Published on 27/12/2018 | Edited on 27/12/2018
p

 

கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை அருகே பால்வாத்துண்ணான் கிராமத்தை சேர்ந்த  சிவசங்கர் ( 30). இவர் புதுச்சத்திரத்தில் உள்ள பெட்ரோல் ‘பங்க்’கில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.

 

இவர்  புதன் இரவு வாகனங்களுக்கு பெட்ரோல் போடும் வேலையில் ஈடுபட்டு இருந்தார். இதன் மூலம் வசூலான பணத்தை பையில் வைத்திருந்தார். இரவு 9.15 மணி அளவில் மோட்டார் சைக்கிளில் 3 பேர் வந்தனர். அவர்கள் சிவசங்கரிடம் தாங்கள் வந்த மோட்டார் சைக்கிளுக்கு பெட்ரோல் நிரப்புமாறு கூறினர்.

 

p

 

அதன்பேரில் சிவசங்கரும் அவர்கள் வந்த மோட்டார் சைக்கிள் டேங்கில் முழுமையாக பெட்ரோல் நிரப்பினார். இதையடுத்து பணம் கேட்டதற்கு, அவர்கள் 3 பேரும் பணம் இல்லை என்று கூறி, அவர் வைத்திருந்த பணப்பையை பறித்தனர். ஆனால் சிவசங்கர் பணப்பையை விடவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளால் திடீரென சிவசங்கரை தலையில் சரமாரியாக வெட்டினர். இதை தடுத்த அவரது கையை வெட்டிவிட்டு அவரிடம் இருந்த பணப்பையை பறித்த 3 பேரும், மோட்டார் சைக்கிளில் அங்கிருந்து கண் இமைக்கும் நேரத்தில் தப்பிச்சென்று விட்டனர்.
 

இதற்கிடையில் பலத்த காயமடைந்த சிவசங்கரை சக ஊழியர்கள் மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

 

p


இதனைறிந்து அதிர்ச்சி அடைந்த மாவட்ட காவல்கண்காணிப்பாளர் சரவணன் உத்திரவின் பேரில்  சிதம்பரம் துணை போலீஸ் சூப்பிரண்டு பாண்டியன் மற்றும் புதுச்சத்திரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு  செய்து இரவு முழுவதும் தேடி வந்தனர். இதனிடையே குற்றவாளிகள் பரங்கிப்பேட்டை அருகே உள்ள சின்னூர் என்ற கிராமத்தில் தங்கியிருப்பதை அறிந்த காவல்துறையினர் குற்றவாளிகளை இரவோடு இரவாக கைது செய்துள்ளனர்.

 

காவல்துறையினர் விசாரணையில் விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் நாவல்குளம் பகுதியை சேர்ந்த மணி(எ) குரு(24), புதுச்சேரி கரிக்கலாம்பாக்கம் தேவா(23) என்று தெரியவந்துள்ளது. இதில் முக்கிய குற்றவாளி கரிக்கலாம்பாக்கம் சுரேஷ் தப்பியுள்ளார். இவரை காவல்துறையினர் தேடி வருகிறார்கள். கைது செய்யப்பட்ட குற்றவாளிகளிடம் கத்தி, இருசக்கரவாகனம், பணப்பை உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்துள்ளனர். இவர்கள் இரவில் இதுபோன்று சிதம்பரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வழிபறி உள்ளிட்ட குற்றசம்பவங்களில் ஈடுபட்டுள்ளனர் என்று தெரியவந்துள்ளது. மேலும் அதே இரவில் சிதம்பரம் புறவழிச்சாலையில் லாரியின் உரிமையாளரை கத்தியால் தலையில் வெட்டிவிட்டு லாரியின் கண்ணாடிகளை உடைத்து அவரிடம் இருந்த தங்கசங்கிலி, பணம் ஆகியவற்றை பறித்து சென்றுள்ளனர் என்றும் தெரியவந்துள்ளது.
 

சார்ந்த செய்திகள்