
ஆசை ஆசையாக கார் வாங்குவதற்கு இருசக்கர வாகனத்தில் சென்ற நபர் மரத்தில் மோதி தூக்கி வீசப்பட்டுஉயிரிழந்த சம்பவம் சங்கரன்கோவில் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
தென்காசி மாவட்டம் புளியங்குடி அய்யாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன்(44). சொந்த பயன்பாட்டிற்காக மணிகண்டன் கார் வாங்கலாம் என பல நாட்களாக திட்டமிட்டிருந்த நிலையில் இரு சக்கர வாகனத்தில் சங்கரன்கோவிலில் உள்ள பிரபல கார் நிறுவனத்திற்கு சென்று காருக்கான கொட்டேஷன் வாங்கிக்கொண்டு இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்பொழுது அவர் பயணித்த இரு சக்கர வாகனம் திடீரென எதிர்பாராத விதமாக சாலையோரத்தில் இருந்த மரத்தின் மீது மோதியது.
இதில் இருசக்கர வாகனத்துடன் நிலைத்தடுமாறி தூக்கி வீசப்பட்ட மணிகண்டன் ஹேம்லெட் அணிந்திருந்த நிலையிலும் ஹெல்மெட் கழன்று சென்றதால் தலையில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். சம்பவம் அறிந்து அங்கு வந்த சங்கரன்கோவில் தாலுகா காவல்துறையினர் மணிகண்டனின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். தொடர்ந்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அந்த பகுதியில் இருந்த சிசிடிவி கேமராவில் இந்த விபத்து சம்பவத்தின் காட்சிகள் பதிவாகி இருக்கிறது. ஆசை ஆசையாக கார் வாங்க சென்ற நபர் விபத்தில் உயிரிழந்த சம்பவம் சங்கரன்கோவில் பகுதியில் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.