Skip to main content

திருந்தி வாழ நினைப்பவரைச் சீண்டும் எஸ்.ஐ.! 

Published on 18/08/2023 | Edited on 18/08/2023

 

Person complaint to commissioner on SI

 

வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வாரந்தோறும் மக்கள் குறை தீர்வு முகாம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்துக்கு காட்பாடி அடுத்த தண்டல கிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன் என்பவர் மாவட்ட எஸ்.பி. மணிவண்ணனிடம் ஒரு மனு அளித்தார். இந்த நிகழ்வின் போது வெங்கடேசனுடன் அவரது அண்ணன் மணிகண்டன் என்பவரும் உடன் இருந்தார். 

 

வெங்கடேசன் கொடுத்த மனுவில், என்னுடைய அண்ணன் மணிகண்டன் மற்றும் அவரது மனைவி ஆகியோர் காது மற்றும் வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளிகள். வேலை இல்லாத காரணத்தால் இவர்கள் கள்ளத்தனமாக மது விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார்கள். எனது அண்ணன் கள்ளத்தனமாக மது விற்பனை செய்வதை ஒப்புக்கொண்ட பிறகும் அவரை விருதம்பட்டு காவல் நிலைய உதவி ஆய்வாளர் கடுமையாக தாக்கியுள்ளார். அதனை தட்டிக்கேட்ட என்னையும் தாக்கினார் என்று குறிப்பிட்டிருந்தார். 

 

இந்த மனுவை பார்த்த மாவட்ட எஸ்.பி. மணிவண்ணன், விருதம்பட்டு காவல் நிலை உதவி ஆய்வாளருக்கு செல்போன் மூலம் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது, “கள்ளத்தனமாக மது விற்பனை செய்து வந்த வெங்கடேசன் மற்றும் மணிகண்டனை தாக்கினீர்களா? இதுபோன்று திருந்தி வாழ வருபவர்களை தாக்கி பாவங்களை சம்பாதித்து கொள்ளாதீர்கள். உங்கள் வீரத்தை அவர்களிடம் தான் காட்டுவீர்களா?” என உதவி ஆய்வாளரை கடிந்துகொண்டார். மேலும், இனி அது மாதிரி நடந்து கொள்ளக் கூடாது  என உதவி ஆய்வாளருக்கு எச்சரிக்கை விடுத்தார்.

 

மேலும், வெங்கடேசன் “மதுவிற்பனையை விட்டுவிட்டால் வேறு வழியில்லை. அதனால் மாற்றுத்திறனாளியான எனது சகோதரர்க்கு ஏதேனும் ஒரு வேலை வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்” என எஸ்.பி.யிடம் கோரிக்கைவைத்தார்.

 

“ஒரு மாத காலம் கள்ளத்தனமாக மது விற்பனை செய்வதை விட்டுவிடவேண்டும், மதுவிற்கவில்லை என்பது உறுதியானால் மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்து சுய தொழில் தொடங்க உதவி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்” என நம்பிக்கை தெரிவித்து அனுப்பிவைத்தார்.

 

 

சார்ந்த செய்திகள்