Skip to main content

முதியவரிடம் லஞ்சம் வாங்கிய விஏஓ கைது; லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி

Published on 20/04/2023 | Edited on 20/04/2023

 

perambalur kalathur vao and village assistant bribe issue due to patta name transfer 

 

பெரம்பலூர் மாவட்டம் து.களத்தூர் கிராமத்தைச் சேர்ந்த முதியவர் சின்னதுரை (வயது 70). இவரது வீடு நத்தம் கூட்டுப்பட்டாவில் இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் தனக்கு வயதாகிவிட்ட காரணத்தால் அந்த வீட்டை தனது மகன் லோகநாதன் பெயரில் மாற்றம் செய்து கொடுத்து அந்த இடத்தையும் வீட்டையும் உட்பிரிவு செய்து தனி பட்டாவாக தனது மகன் லோகநாதன் பெயருக்கு மாற்றம் செய்து தரக்கோரி முறைப்படி இணையதளத்தில் விண்ணப்பித்துள்ளார். இவரது மனு களத்தூர் கிராம நிர்வாக அலுவலர் தீனதயாளனிடம் (வயது 33) சென்றது. அவர் சின்னதுரை மனுவை சர்வே துறைக்கு பரிந்துரை செய்து அளவீடு செய்து தனி பட்டாவாக மாற்றம் செய்வதற்கு காலதாமதம் செய்து வந்துள்ளார்.

 

இதை அறிந்த சின்னதுரை கிராம நிர்வாக அலுவலரை நேரில் சந்தித்து பட்டா மாற்றம் செய்வதற்கு ஏற்பாடு செய்யுமாறு கேட்டுள்ளார். அதற்கு கிராம நிர்வாக அலுவலர் நீங்கள் மனு அனுப்பினால் உடனே நாங்கள் பட்டா மாற்றம் செய்து கொடுத்து விடுவோமா என்ன. பட்டா மாற்றம் செய்ய வேண்டுமானால் லஞ்சமாக 20,000 ரூபாய் பணம் கொடுத்தால் தான் பட்டா மாற்றம் செய்வதற்கு ஏற்பாடு செய்யப்படும் என்று கறாராக பேரம் பேசியுள்ளார்.

 

இதையடுத்து சின்னதுரை பெரம்பலூர் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் இது குறித்து புகார் அளித்துள்ளார். அவரது புகார் மீது வழக்குப் பதிவு செய்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் ஆலோசனையின் படி 20 ஆயிரம் ரூபாய் லஞ்சப் பணத்துடன் கிராம நிர்வாக அலுவலர் தீனதயாளனை சென்று சந்தித்து அவரிடம் அந்த பணத்தை கொடுத்துள்ளார் சின்னதுரை. கிராம நிர்வாக அலுவலருடன் கிராம உதவியாளர் ஈஸ்வரியும் (வயது 30) இதற்கு உடந்தையாக இருந்து லஞ்சப் பணத்தை பெற்றுள்ளனர். அப்போது அப்பகுதியில் மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி ஹேமசித்ரா தலைமையிலான போலீசார் லஞ்சப் பணத்தை கிராம நிர்வாக அலுவலர் தீனதயாளன் மற்றும் கிராம உதவியாளர் ஈஸ்வரி இருவரும் எண்ணிப் பார்க்கும் போது கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.

 

இதனைத் தொடர்ந்து துறையூரில் உள்ள கிராம நிர்வாக அலுவலர் வீட்டிலும் நத்தக்காடு கிராமத்தில் உள்ள கிராம உதவியாளர் வீட்டிலும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தினர். சில தினங்களுக்கு முன்பு உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள், ‘தாலுகா அலுவலகத்தில் பட்டா மாற்றம் செய்து தர முறையாக மனு கொடுக்கும் பொதுமக்களுக்கு பட்டா மாற்றம் செய்து தராமல், லஞ்சம் கொடுத்தால்தான் பட்டா மாற்றம் செய்கிறார்கள். நீதிமன்ற உத்தரவை கூட மதிப்பது இல்லை’ என்று ஒரு வழக்கு விசாரணையின் போது வேதனையுடன் குறிப்பிட்டிருந்தனர். இந்த நிலையில் தான் பட்டா மாற்றம் செய்ய பெரம்பலூர் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு உட்பட்ட கிராம நிர்வாக அலுவலர் தீனதயாளன், கிராம உதவியாளர் ஈஸ்வரி ஆகிய இருவரும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்