Skip to main content

தென்னக இரயில்வே பொதுமேலாளர் சென்ற சிறப்பு இரயிலை மறித்த மக்கள்! 

Published on 14/12/2021 | Edited on 14/12/2021

 

People who block the special train that went to the General Manager of Southern Railway!

 

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே சுரங்கப்பாதை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், மேம்பாலம் அமைத்துத் தர வலியுறுத்தியும் திங்கட்கிழமை (13.12.2021) தென்னக இரயில்வே பொது மேலாளர் ஆய்வுக்குச் சென்ற சிறப்பு இரயிலை மறித்து பொதுமக்கள் மனு கொடுக்கச் சென்றதால் சுமார் 1 மணி நேரம் இரயில் பாதையில் பரபரப்பு ஏற்பட்டது.

 

மணப்பாறையை அடுத்த கத்திக்காரன்பட்டியில் தற்போதுள்ள இரயில்வே கேட்டின் (எல்.சி.270) பயன்பாட்டைக் குறைக்கும் விதமாக சுரங்கப்பாதை அமைப்பதற்கு இரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுத்ததாக கூறப்படுகிறது. ஆனால், ஏற்கனவே மணப்பாறை, சின்னசமுத்திரம் ஆகிய பகுதிகளில் அமைக்கப்பட்டிருக்கும் இரயில்வே சுரங்கப்பாதைகள் மக்கள் பயன்பட்டிற்கு இல்லாமல் தண்ணீர் தேங்கி நின்று ஆபத்தை விளைவிக்கும் விதமாக இருப்பதால் தங்களது பகுதியில், சுரங்கப்பாதை அமைப்பதை தவிர்த்து, மேம்பாலம் அமைத்துத் தர வலியுறுத்தி கத்திக்காரன்பட்டி பொதுமக்கள் பாராளுமன்ற உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர், மாவட்ட ஆட்சியர், மதுரை இரயில்வே கோட்டப் பொறியாளர் ஆகியோரிடம் மனு அளித்துள்ளனர். 

 

இந்நிலையில், வருவாய்த்துறையினர் சம்பந்தப்பட்ட இரயில்வே கேட் பகுதியில் ஆய்வு மேற்கொண்டதால் தங்களது பகுதிக்கு சுரங்கப்பாதை வருவதாக அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர். அதனைத்தொடர்ந்து, திங்கட்கிழமை மணப்பாறை பகுதிக்கு ஆய்விற்காக தென்னக இரயில்வே பொது மேலாளர் ஜான் தாமஸ் வந்த சிறப்பு ஆய்வு இரயிலை தடுத்து நிறுத்தி மனு அளிக்க அப்பகுதி பொதுமக்கள் திட்டமிட்டு, சம்பந்தப்பட்ட இரயில் கேட்டில் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. 

 

தகவலறிந்து நிகழ்விடத்துக்குச் சென்ற திண்டுக்கல் இரயில்வே போலீசார் பொதுமக்களை சமரசம் செய்தும் தண்டவாளத்தைவிட்டு பொதுமக்கள் விலகவில்லை. இரயில் பாதையிலேயே அமர்ந்துகொண்டனர். இதனால் பொது மேலாளர் வந்த சிறப்பு ஆய்வு இரயில் மணப்பாறையிலேயே சிறிது நேரம் நிறுத்தப்பட்டது. அதனைத்தொடர்ந்து வருவாய் வட்டாட்சியர் த. சேக்கிழார் தலைமையிலான வருவாய்த்துறையினரும், காவல் ஆய்வாளர் சு. கருணாகரன் தலைமையிலான மணப்பாறை போலீசாரும் நிகழ்விடத்துக்குச் சென்று வருவாய்த்துறையினரின் அறிக்கையில், அப்பகுதிக்கு சுரங்கப்பாதை அமைக்க உகந்தது அல்ல என்றுதான் அறிக்கை அளிக்கப்பட்டிருப்பதாகவும், இரயில்வே நிர்வாகத்தின் அறிக்கையிலும் அப்பகுதிக்கு சுரங்கப்பாதை அமைக்கவில்லை என்றும் இருப்பதாக கூறியதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்