Skip to main content

மேயர் வீட்டை முற்றுகையிட்ட பொதுமக்கள்

Published on 08/12/2023 | Edited on 08/12/2023
people besieged the house of Chennai Mayor Priya Rajan

தமிழ்நாட்டில் ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக வரலாறு காணாத மழைப்பொழிவு ஏற்பட்டது. இதன் காரணமாகச் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிகக் கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கிடவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அந்த வகையில் தேசிய மற்றும் மாநிலப் பேரிடர் மீட்புக் குழுவினர், காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைகளைச் சார்ந்த மீட்புக் குழுவினர் இப்பணிகளில் பெருமளவில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். படகுகள் மற்றும் வாகனங்கள் மூலமாக நீர் சூழ்ந்த பகுதிகளிலிருந்து பொதுமக்கள் பத்திரமாக மீட்கப்பட்டு வருகின்றனர். மேலும் அவர்களுக்குத் தேவையான உதவிகளும் வழங்கப்பட்டு வருகின்றன. இதனிடையே சென்னையில் ஏற்பட்ட வெள்ளம் தொடர்பாக சிலர் தமிழக அரசை விமர்சித்து வருகின்றனர். மேலும் வடசென்னை உள்ளிட்ட பல இடங்களில் தண்ணீர் சூழ்ந்துள்ளதோடு, மின்சாரம் மற்றும் உணவு இல்லாமல் தவித்து வருவதாகவும் சமூக வலைத்தளங்களில் பல பதிவுகள் வெளியாகி வருகிறது.

இந்த நிலையில் தொடர்ந்து மூன்று நாட்களாக மின்சாரம் மற்றும் குடிநீர் இல்லை என்று கூறி சென்னை மேயர் பிரியா ராஜன் இல்லத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டுள்ளனர். சென்னை பெரம்பூர் திருவிக நகர் தொகுதிக்குட்பட்ட கிருஷ்ணன் தாஸ் சாலையில் மேயர் பிரியா ராஜன் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் 71 வது வார்டு கிருஷ்ணன் தாஸ் சாலை, திருவள்ளுவர் தெரு, மங்களபுரம் உள்ளிட்ட பகுதி மக்கள் சேர்ந்து மேயர் பிரியா ராஜனின் வீட்டை முற்றுகையிட்டுள்ளனர். தொடர்ந்து மூன்று நாளாக மின்சாரம், குடிநீர் இல்லை, வெள்ளம் வெளியேறாமல் கழிவுநீர் சூழ்ந்திருக்கிறது என்ற பல கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் செய்தனர்.

இதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். மேலும், தண்ணீரை வெளியேற்றுவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. அதனால் தான் மின்சாரம் தடைசெய்யப்பட்டிருகிறது. இன்று மாலைக்குள் மின்சாரம் வர ஏற்பாடு செய்திருக்கிறேன். உங்கள் அனைவருக்கும் மின்சாரம், பால் உள்ளிட்டவைகள் விநியோகம் செய்ய ஏற்பாடு செய்திருக்கிறேன் என்றார். அப்போது ஒரு பெண்மணி, “நாங்கள் இன்னும் சாகலமா, நீங்க  பால் ஊத்துவதற்கு..” என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

சார்ந்த செய்திகள்