Skip to main content

'ஒலிம்பிக்கில் பங்கேற்கும் தமிழக தடகள வீரர்களுக்கு ஊக்கத் தொகை'- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

Published on 06/07/2021 | Edited on 06/07/2021

 

OLYMPIC GAMES PARTICIPATE SPORTS PLAYERS TN CHIEF MINISTER FUND ANNOUNCED

ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கும் தமிழகத்தைச் சேர்ந்த தடகள வீரர்களுக்கு ரூபாய் 5 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

 

இது தொடர்பாக தமிழக அரசு இன்று (06/07/2021) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "தமிழகத்தில் இளைஞர்களுக்கு விளையாட்டில் ஆர்வத்தைப் பெருக்கவும், தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளில் பங்கு கொள்ளவும் அரசு தேவையான பயிற்சிகளையும், ஊக்கத்தொகைகளையும் தொடங்கி வழங்கி வருகிறது. 

 

அந்த வகையில், ஜப்பான் டோக்கியோவில் 23/07/2021 முதல் 08/08/2021 வரை நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டிகளில் தடகள விளையாட்டில் 4*400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் ஆண்கள் பிரிவில் பங்கேற்க உள்ள தமிழகத்தைச் சேர்ந்த எஸ்.ஆரோக்கிய ராஜிவ் மற்றும் நாகநாதன் பாண்டி மற்றும் 4*400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் கலப்பு பிரிவில் சுபா வெங்கடேசன், தனலட்சுமி சேகர் மற்றும் ரேவதி வீரமணி என மொத்தம் 5 தடகள வீரர்களுக்கு அரசின் சிறப்பு ஊக்கத்தொகையாக தலா ரூபாய் 5 லட்சம் வீதம் ரூபாய் 25 லட்சம் வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். 

 

இவ்வீரர்களில், எஸ்.ஆரோக்கிய ராஜிவ் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உயர்மட்ட விளையாட்டு வீரர்களுக்கான ஊக்கத்தொகை வழங்கும் திட்டம், சுபா வெங்கடேசன் சர்வதேச அளவிலான போட்டிகளில் பதக்கங்கள் வெல்வதற்கு ஊக்குவிக்கும் திட்டம் ஆகிய உயரிய திட்டங்களின் கீழ் பயிற்சி பெற்றவர்களாவர். 

 

ஏற்கனவே, ஜப்பான், டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் கலந்துக் கொள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழகத்தைச் சேர்ந்த 6 வீரர்களுக்கு தலா ரூபாய் 5 லட்சம் வீதம் மொத்தம் ரூபாய் 30 லட்சம் அரசின் ஊக்கத்தொகையினைக் கடந்த 26/06/2021 அன்றும், மேலும் ஒலிம்பிக் போட்டிகளில் கலந்துக் கொள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட சி.ஏ.பவானி தேவிக்கு ரூபாய் 5 லட்சம் சிறப்பு ஊக்கத்தொகையினை 20/06/2021அன்றும் தமிழக முதலமைச்சரால் வழங்கப்பட்டது". இவ்வாறு அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்