விருதுநகர் மாவட்டத்தின் சிவகாசி முனீஸ்வரன் காலனியைச் சேர்ந்தவர் அந்தோணி பிச்சை (70). இவரின் மனைவி ஜெயலட்சுமி (65). இருவரும் நெல்லை மாவட்டத்தின் உவரிக்கு வந்துள்ளனர். கடந்த மூன்று நாட்களுக்கு முன்பே வந்தவர்கள் அங்குள்ள உவரி ஆலயத்தில் பிரார்த்தனை செய்து விட்டு இரண்டு நாட்கள் தங்கியிருக்கிறார்கள். அந்தப் பகுதியில் கிடைத்த உணவை முதியவர்கள் சாப்பிட்டு வந்துள்ளனர்.
நேற்றைய தினம் ஆலயத்தில் பிரார்த்தனை செய்து விட்டு இரவு 7 மணியளவில் திரும்பி வருகிற வழியில் உவரி பஸ் நிறுத்தத்திற்குச் சென்றுள்ளனர். பின்னர் அந்தோணி பிச்சை, தான் வைத்திருந்த கத்தியால் திடீரென மனைவி ஜெயலட்சுமியின் கழுத்தை அறுத்துள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே ஜெயலட்சுமி துடி துடித்து இறந்தார். இதனை உறுதி செய்து கொண்ட அந்தோணி பிச்சை, அதே கத்தியால் தனது கழுத்தையும் அறுத்துக் கொண்டார். இதனை வழியில் சென்றவர்கள் பார்த்துப் பதறியவாறு அலறினர். போலீசுக்கு உடனடியாகத் தகவலும் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த உவரி போலீசார் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த அந்தோணி பிச்சையை மீட்டு நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து ஜெயலட்சுமியின் உடலைக் கைப்பற்றி உடற் கூறு ஆய்விற்காக அனுப்பிவைத்தனர்.
இதையடுத்து அந்தோணி பிச்சையிடம் போலீசார் நடத்திய விசாரணையில் தனது முகவரியை எழுதிக் கொடுத்த அந்தோணி பிச்சை, தனக்கு இரண்டு மகள்கள், ஒரு மகன் அவர்களுக்கு திருமணமாகி விட்டது. வயதான தங்கனை அவர்கள் கவனிக்காததால் இந்த முடிவை எடுத்ததாக கூறியுள்ளார். அதனையடுத்து வழக்குப் பதிவு செய்த போலீசார் முதியவரின் மகன் மற்றும் சிவகாசி காவல்துறை போலீசாருடன் தொடர்பு கொண்டு மேலும் விவரங்களை சேகரித்து வருவதாக சொல்லப்படுகிறது.
வயதான மனைவியைக் கழுத்தறுத்துக் கொன்று விட்டு முதியவர், கணவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம், பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.