ஈரோடு மாவட்டம் கோபி பேருந்து நிலையத்திலிருந்து நாள்தோறும் கோவை, திருப்பூர், மதுரை, தேனி, ராமேஸ்வரம், சேலம், ஈரோடு, திருச்சி, சத்தியமங்கலம், மைசூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு இயக்கப்படும் 300க்கும் மேற்பட்ட பேருந்துகள் கோபி பஸ் நிலையம் வந்து செல்கின்றன. குறிப்பாக திருப்பூர், ஈரோடு, கோவை போன்ற பகுதிகளுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பேருந்தில் செல்வதால் கோபி பேருந்து நிலையம் காலை முதல் இரவு வரை பயணிகள் நிறைந்து பரபரப்பாகவே இருக்கும்.
இதனால் நகராட்சி சார்பில் பயணிகள் அமர்வதற்கு இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் பஸ் நிலையத்தில் உள்ள கடை உரிமையாளர்கள் அவர்களுக்கு அனுமதிக்கப்பட்ட அளவைவிட வெளியே கடைகளை வைத்தும், பயணிகள் அமர்வதற்கும் நிற்பதற்கும் இடமில்லாத வகையில் பொருட்களை வைத்து நடைபாதையை ஆக்கிரமித்து இருந்தனர்.
இதுகுறித்து பயணிகள் நகராட்சி அலுவலகத்தில் புகாரளித்தனர். இதனைத் தொடர்ந்து நகராட்சி ஆணையாளர் சசிகலா உத்தரவின் பேரில், நகராட்சி துப்புரவு ஆய்வாளர் செந்தில்குமார் தலைமையில் சுகாதாரப் பணியாளர்கள், பஸ் நிலையத்தில் 15 கடை உரிமையாளர்களிடம் நடைபாதையை ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த பொருட்களைப் பறிமுதல் செய்தனர். அப்போது கடை உரிமையாளர்கள், நகராட்சி பணியாளர்களிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. பின்னர் ஆக்கிரமிப்பு பொருட்கள் அகற்றப்பட்டன.