திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்றுவதைக் கைவிடக்கோரி இளைஞர் ஒருவர் மலைக்குன்றின் மீது ஏறி தற்கொலை செய்து கொள்ளபோவதாக மிரட்டும் வீடியோ வெளியாகியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே உள்ள தும்பேரி கிராம ஊராட்சியில் உள்ள அண்ணா நகர் என்ற பகுதியில் உள்ளது வீராணம் மலையடிவாரம். இங்கு சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் இருக்கும் நிலையில் அப்பகுதியில் வனத்துறைக்குச் சொந்தமான இடத்தை ஆக்கிரமிப்பு செய்ததாக புகார் எழுந்தது. வனத்துறைக்கு சொந்தமான இடத்தில் உள்ள 19 வீடுகள் காலி செய்யப்பட வேண்டும் என வனத்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டு இருந்தது. ஆனால் தாங்கள் 21 வருடங்களாக இந்த இடத்தில் வசிப்பதால் இடத்தை காலி செய்ய மாட்டோம் என மக்கள் சார்பில் போராட்டம் நடத்தப்பட்டு வந்தது. இந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த இளைஞர் கல்லூரி மாணவர் சிவராஜ் என்பவர் அருகில் இருக்கும் மலைக்குன்றின் மீது ஏறி அதிகாரிகள் வந்து தங்களுக்கு தீர்வு காணாவிட்டால் தற்கொலை செய்துள்ளதாக மிரட்டல் விடுத்தார். சம்பவ இடத்திற்குச் சென்ற தீயணைப்புத் துறையினர் மற்றும் வருவாய் துறையினர், உறவினர்கள் பேச்சுவார்த்தை நடத்தி ஒரு மணி நேரத்தில் போராட்டத்திற்குப் பின் இளைஞரை மீட்டு கீழே கொண்டு வந்தனர்.