விழுப்புரத்தில் அ.தி.மு.க மகளிர் அணி, இளைஞர் இளம்பெண்கள் பாசறை அணி மற்றும் தகவல் தொழில் நுட்ப அணி ஆகிய நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
அதில், பேசிய அமைச்சர் சண்முகம் தமிழகத்தில் யார் வேண்டுமானாலும் எம்.ஜி.ஆர் ஆகிவிட முடியாது. தற்போது நடிகர்கள் எனச் சொல்லிக்கொண்டு அரசியலுக்கு வருகின்றனர். அரசியல் கட்சியை யார் வேண்டுமானாலும் துவக்கலாம். ஆனால், முதலில் கொள்கையைக் கூறுங்கள். இந்த நாட்டிற்கு என்ன செய்தீர்கள்? ஒருவர் இந்த ஊரை, நாட்டை மாற்றப் போவதாகக் கூறுகிறார். உங்களை முதலில் நீங்கள் மாற்றிக் கொள்ளுங்கள். சமீபத்தில் பெய்த பெருமழை காரணமாக மக்கள் பெரிதும் சிரமப்பட்டனர். அரசு நிர்வாகம் அவர்களது துயரைத் துடைத்தது. அப்போதெல்லாம் இவர்கள் எங்கே சென்றார்கள். நீங்கள் சார்ந்துள்ள திரைப்படத் துறையில் உள்ள பிரச்சனைகளைத் தீர்க்க அக்கறை செலுத்துங்கள். கரோனா காலத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எந்த நடிகர்கள் ஓடிவந்து உதவி செய்தனர். திரையில் மட்டுமே தங்களை நல்லவர்கள் போல் காட்டிக் கொள்கின்றனர். ஆனால், இந்தி பட வில்லன் நடிகர் ஒருவர் கரோனா பாதித்த மக்களுக்கு பல உதவிகளைச் செய்திருக்கிறார்.
உழைப்பவர்களுக்கு அங்கீகாரம் அளித்து, பதவி கொடுத்து, அழகு பார்க்கும் ஒரே இயக்கம் அதிமுகதான். இது, திமுகவில் நடக்காது. மேலும், தமிழகத்தில் சமூக நீதியை தி.மு.க பாதுகாத்து வருகிறது. அதைச் சிலர் மூலம் உடைத்தெறிய பார்க்கிறார்கள். அது ஒருபோதும் நடக்காது. தடைகளை உடைத்தெறிந்து பிளவுபட்ட இயக்கத்தை ஒன்றிணைத்து, ஆட்சியைத் தக்க வைத்து, மிகச் சிறப்பான முறையில் முதல்வர் பழனிசாமி ஆட்சி செய்து வருகிறார். அதிமுகவின் சாதனை திட்டங்களை, சமூக வலைதளங்கள் மூலம் மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும். அதே நேரத்தில், தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் செய்யும் பொய்ப் பிரச்சாரத்தை மக்களிடம் கொண்டு சென்று, உரிய விளக்கமளிக்க வேண்டும். இவ்வாறு அமைச்சர் சண்முகம் பேசியுள்ளார்.