Skip to main content

'யாருக்கெல்லாம் உரிமைத் தொகை பெறத் தகுதியில்லை' - தமிழக அரசு விளக்கம்

Published on 07/07/2023 | Edited on 07/07/2023

 

 'No one is eligible for entitlement' - Tamil Government explanation

 

மகளிர் உரிமைத் தொகை திட்டம் குறித்து மாவட்ட ஆட்சியர்கள் கூட்டத்தில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று உரையாற்றினார். கூட்டத்தில் பேசிய முதல்வர், ''மகளிர் நலனையும் அவர்களின் மேம்பாட்டையும் கருத்தில் கொண்டு செயல்படுத்திக் காட்டிய கலைஞரின் அளப்பரிய பணிகளை நினைவு கூறும் வகையில், அவரது நூற்றாண்டு விழாவிற்கு மேலும் மேலும் பெருமை சேர்க்கும் விதத்தில் இந்த மகத்தான மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு 'கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம்' எனப் பெயர் சூட்டுவது பொருத்தமாக இருக்கும் எனக் கருதி நமது அரசு இந்த திட்டத்திற்கு அறிஞர் கலைஞர் பெயரை சூட்டி மகிழ்ந்திருக்கிறது என்பதை நான் இந்த நேரத்தில் அறிவிப்பதில் பெருமை அடைகிறேன். வரும் செப்டம்பர் 15 ஆம் தேதி முதல் குடும்பத் தலைவிக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

 

திட்டத்தை முறையாகச் செயல்படுத்துவதற்காக 2023 - 2024 ஆம் ஆண்டு வரவு செலவு அறிக்கையில் 7000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. மகளிர் உரிமைத் தொகை பெறுவதற்கான விண்ணப்பங்களைக் கொடுக்க நியாய விலைக் கடைகளில் சிறப்பு முகாம் நடத்தி வழங்க வேண்டும். குடும்ப அட்டை, ஆதார் அட்டை இல்லாவிட்டாலும் அதைப் பெற்றுத் தந்து உரிமைத் தொகை கிடைக்க உதவ வேண்டும். மகளிர் உரிமைத் தொகைக்கு சுமார் ஒன்றரை கோடி பேர் விண்ணப்பிப்பார்கள் என எதிர்பார்க்கிறோம். கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை எவ்வித புகாருக்கும் உள்ளாகாமல் செயல்படுத்திக் காட்ட வேண்டும்'' என்றார்.

 

இந்நிலையில் இந்தத் திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிப்பது எப்படி? யார் யாருக்கு இந்த உரிமைத் தொகை கொடுக்கப்படும் என்பது தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன. குடும்ப அட்டை உள்ளவர்கள் ரேஷன் கடைகளில் நடைபெறும் முகாமில் 21 வயது நிரம்பிய பெண்கள் விண்ணப்பிக்கலாம். குடும்ப அட்டையில் இடம் பெற்றுள்ள அனைவரும் ஒரு குடும்பமாக கருதப்படுவர். அந்த குடும்ப அட்டையில் ஒருவர் குடும்பத் தலைவியாக எடுத்துக்கொள்ளப்பட்டு கலைஞர் உரிமைத் தொகை திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்.

 

 'No one is eligible for entitlement' - Tamil Government explanation

 

ரூபாய் இரண்டரை லட்சத்திற்கு மேல் ஆண்டு வருமானம் ஈட்டும் குடும்பங்களுக்கு இந்த திட்டத்தில் இடமில்லை. மத்திய மற்றும் மாநில அரசு நிறுவனங்களில் பணிபுரியக் கூடிய பெண்கள், சொந்த பயன்பாட்டிற்கு கார், ஜீப், டிராக்டர், கனரக வாகனம் போன்ற நான்கு சக்கர வாகனம் வைத்துள்ளவர்கள்; ஆண்டுக்கு 50 லட்சத்திற்கும் மேல் விற்பனை செய்து சரக்கு மற்றும் சேவை வரி செலுத்தும் தொழில் நிறுவன உரிமையாளர்கள்; ஏற்கனவே முதியோர் ஓய்வூதியம், விதவை ஓய்வூதியம், அமைப்பு சாரா தொழிலாளர் நலவாரிய ஓய்வூதியம் போன்ற சமூக பாதுகாப்புத் திட்ட ஓய்வூதியங்கள் மற்றும் அரசிடமிருந்து பென்ஷன் பெறும் குடும்பங்கள் இந்த திட்டத்தின் கீழ் பயன் பெறத் தகுதியற்றவர்கள்.

 

மாற்றுத் திறனாளிகள் நலத்துறையால் வழங்கப்படும் கடும் உடல் குறைபாடு உடைய மாற்றுத் திறனாளிகளுக்கான பராமரிப்பு உதவித்தொகை பெறும் உறுப்பினர்களைக் கொண்ட குடும்பங்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவை. இந்த வகைப்பாட்டின் அடிப்படையில் திட்டத்தின் பிற தகுதிகளைப் பூர்த்தி செய்து எந்தவித தகுதியின்மை வகைப்பாட்டிலும் வரவில்லை எனில் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருமணமாகாத தனித்த பெண்கள், கைம்பெண்கள், திருநங்கைகள் குடும்பத் தலைவிகளாகக் கருதப்படுவார். பொருளாதாரத் தகுதிகளாக ஆண்டுக்கு வருமானம் இரண்டரை லட்சத்திற்கு கீழ் இருக்க வேண்டும். ஆண்டுக்கு 3600 யூனிட்டிற்கும் குறைவாக மின்சாரம் பயன்படுத்துபவர்களாக இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்