Skip to main content

நெல்லை கொடூரம்; பட்டியலின இளைஞர்கள் மீது சிறுநீர் கழிப்பு சித்ரவதை

Published on 02/11/2023 | Edited on 03/11/2023

 

அக்.30 அன்று இரவு ஏழு மணிக்கு நெல்லை தச்சநல்லூரை ஒட்டியுள்ள மணிமூர்த்தீஸ்வரத்தைச் சேர்ந்த இளைஞர்களான மனோஜ் அவரது நண்பர் மாரியப்பன் இருவரும் இயற்கை உபாதையைக் கழித்துவிட்டு அருகிலுள்ள ஆற்றில் குளித்துவிட்டு வருவதற்காகச் சென்றிருக்கிறார்கள்.

 

நெல்லையின் ஸ்ரீபுரத்திலுள்ள தனியார் கேபிள் டி.வி. ஒன்றில் பணிபுரிகிற மனோஜ் மணிமூர்த்தீஸ்வரத்திலுள்ள தன் மாமா வீட்டில் தங்கியபடி கேபிள் வேலைக்குப் போய் வந்திருக்கிறார். பைக்கில் சென்ற இருவரும் ஆற்றுப் படுகை பக்கமுள்ள சுடலை கோயிலில் பைக்கை நிறுத்திவிட்டு இயற்கை உபாதையை கழித்துவிட்டு இருவரும் பைக் பக்கம் வரும்போது அந்தப் பக்கமாய் மது அருந்திக் கொண்டிருந்த நான்கு வாலிபர்கள் இவர்களைப் பார்த்ததும், கடுப்பானார்கள். ''என்னலேய்... நாங்க சரக்கடிக்கிறப்ப தைரியமா இந்தப் பக்கம் வாறீக'' என்று அதட்டலாய் பேசியவர்கள், அவர்களிடம் நீங்க என்ன ஜாதி என்று கேட்டு மிரட்டியிருக்கிறார்கள். அவர்கள் பட்டியலின சமூகம் சார்ந்த இளைஞர்கள் என்று தெரிந்ததும் நான்கு பேரும் இரண்டு பேரைக் கொடூரமாகத் தாக்கியிருக்கிறார்கள்.

 

வலி பொறுக்கமாட்டாதவர்கள் கதறிய போது மிரட்டியவர்கள் அவர்களை தாங்கள் வைத்திருந்த கத்தியைக் காட்டி கொலை செய்துவிடுவோம் என்று மிரட்டியிருக்கிறார்கள். அவர்களில் ஒருவன் மனோஜின் சட்டைப் பையைத் துளாவியவன், 'என்னலேய் பணமில்லாம வந்துருக்கீக' என வெறியானவர்கள் பக்கத்தில் கிடந்த கம்பை எடுத்து மனோஜையும் மாரியப்பனையும் முதுகு, நெற்றிப்பொட்டு, உடம்பு முழுக்க தாக்கியதில் அவர்கள் இருவரின் உடல் முழுக்கக் காயங்கள். இதில் மாரியப்பனின் இடது தோள்பட்டையில் கடுமையான அடி விழுந்திருக்கிறது. மனோஜை கம்பால் தாக்கியதில் அவரின் வலது கண்ணில் காயம். உடல் முழுக்க இருவருக்கும் வீக்கம்.

 

அதன்பிறகு அந்த போதைக் கும்பல், மனோஜையும் மாரியப்பனையும் நிர்வாணப்படுத்தி சற்றும் கூட ஈவு இரக்கம் காட்டாமல் போதை வெறியில் இருவரின் முகத்தின் மீதும் சிறுநீர் கழித்து பஞ்சமாபாதகத்தை நடத்தியவர்கள், அவர்களின் செல்போனைப் பிடுங்கி உடனடியாக 'அஞ்சாயிரம் பணம் குடுங்கல' என்றதுடன் மனோஜின் கனரா வங்கி ஏ.டி.எம். கார்டையும் பிடுங்கிக் கொண்டார்கள்.

 

இந்த நேரத்தில் போதைக் கும்பல் நான்கு பேரின் நண்பர்கள் இரண்டு பேர் பைக்கில் அங்கு வர, அவர்களும் தங்கள் பங்கிற்கு அப்பாவிகளான மனோஜையும், மாரியப்பனையும் தாக்கியிருக்கிறார்கள். ''பணம் கொடுக்கலைன்னா ரெண்டு பேரும் உசுரோட இந்த எடத்தவிட்டுப் போவமுடியாதுலேய். எவனயாவது ஜி-பே'ல பணம் போடச் சொல்லுல' என அடியும் மிரட்டலுமாய் கத்தியிருக்கிறார்கள். இதனால் பயந்து போன மாரியப்பன் செல்லில் தன் ஓனர் ராஜாவைத் தொடர்பு கொண்டு அழுதவர் நடந்தவற்றைச் சொல்லி ஐந்தாயிரம் பணம் மனோஜின் அக்கவுண்ட்டில் போடச் சொல்ல, அவரும் போட்டிருக்கிறார்.

 

கடைசியாய் அந்த கும்பலின் 2 பேர் பைக்கில் சென்று அவர்களின் ஏ.டி.எம். கார்டைக் கொண்டு பணம் எடுத்து வந்திருக்கிறார்கள். ஆனாலும் சித்ரவதை நள்ளிரவு வரை நீடித்திருக்கிறது. போனவர்கள் பணத்துடன் வந்த பிறகு, ஒடுங்கிக் கொண்டிருந்த மனோஜிடமும், மாரியப்பனிடமும், 'நடந்தத வெளிய சொன்னீக கத்தியால குத்தி குடல வவுந்துறோம்ல' என மிரட்டியிருக்கிறார்கள்.

 

இதற்கிடையே சமயம் பார்த்து கும்பலிடமிருந்து நிர்வாண நிலையில் தப்பித்த மனோஜும் மாரியப்பனும் அரை நிர்வாணத்தில் ஊருக்கு வந்து உறவினர்களிடம் சொல்லி அழ, அரண்டு பதறிய ஊர்மக்கள் படுகாயமடைந்த அவர்கள் இருவரையும் பாளை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்திருக்கிறார்கள். விடிந்ததும் விஷயம் வெடிகுண்டாய் வெடித்து நகரில் பிரளயத்தைக் கிளப்பியிருக்கிறது. அரக்கப் பறக்க அரசு மருத்துவமனை வந்த தச்சநல்லூர் போலீசார் சிகிச்சையில் இருந்தவர்களிடம் விசாரித்து புகாரைப் பெற்றவர்கள், வெறி கொண்ட கும்பலின் மீது வன்கொடுமை, வழிப்பறி, ஆயுதங்களால் தாக்குதல், அவமானப்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியவர்கள், ஆறு பேரைத் தங்களின் கஷ்டடிக்குள் கொண்டு வந்திருக்கிறார்கள்.

 

நாங்க உடல் உபாதையப் போக்கிட்டு குளிக்கப் போவ எங்க பைக் பக்கம் வந்த உடனேயே அந்தக் கும்பல் எங்கள சுத்திட்டாக. ஜாதியக் கேட்டுத் தெரிஞ்சதும் ரெண்டு பேர் கைகளையும் முறுக்கிக்கிட்டு எங்கள திமிறவுடாம கம்பால அடிச்சி கத்தியால கீறுனாக. கஞ்சாவோட மதுவையும் சேத்து அடிச்சிருக்காங்க. போதை, வெறி ஆறு பேர்ட்ட இருந்து எங்களால தப்பிக்க முடியாத நெலம. உடம்பெல்லாம் வீக்கம்' என வேதனைப்பட்டனர். சிகிச்சையிலிருந்த மனோஜும், மாரியப்பனும்.

 

நிகழ்வையறிந்து பதறிப்போன நெல்லை மாவட்ட சி.பி.எம்.மின் மாவட்ட செ.வான ஸ்ரீராம், மருத்துவமனை சென்று அவர்களின் நிலையைக் கண்டு அதிர்ந்தவர் நம்மிடம். ''ரெண்டு பேரும் வேலை முடிஞ்சி ஆத்துல குளிப்பதற்காகச் சென்றவர்களை ஜாதியைக் கேட்டு, பட்டியலினத்தைச் சேர்ந்தவங்கன்'னு சொன்னதும், சாதிவெறியில் அடிச்சி நிர்வாணப்படுத்தி தாக்கியதுமில்லாம, அவங்க முகத்தில் சிறுநீர் கழிச்சவங்க, கண்ணத் தொறங்கடான்னு சொல்லியும் சிறுநீர் கழிச்சி கொடூரப்படுத்திருக்காங்க. அவங்க கண்ணு ரெண்டும் வீங்கி இருக்கு. இது ஒரு மோசமான சம்பவம். மனித சமூகம் ஏற்றுக் கொள்ளாதது. தமிழ் சமூகத்திற்கே வெட்கக் கேடானது. இப்படிப்பட்ட குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை தரப்பட வேண்டும்'' என்றார் அழுத்தமான குரலில்.

 

இதனிடையே பட்டியலின இளைஞர்கள் மீது சிறுநீர் கழித்து கொடூரத் தக்குதல் நடத்தியதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாகக் கண்டித்து நெல்லை ரயில்வே நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியது. மனித சமூகத்தின் விஷ ஒட்டுண்ணியான போதையும் வன்மமும் வேரறுக்கப்பட வேண்டிய வைரஸ்கள்.

 

இந்த சம்பவத்தை ஜீரணிக்க முடியாத அதிர்ச்சியில் இருக்கிறது நெல்லை.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பொது இடத்தில் இளம்பெண் மீது தாக்குதல்; வைரலான வீடியோ காட்சி

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Viral video footage of Incident on girl in public place at chennai

சென்னை கோயம்பேடு பகுதியில், பூந்தமல்லி மார்க்கமாக செல்லும் மேம்பாலத்தில், நேற்று (26-04-24) ஒரு இளைஞரும், ஒரு இளம்பெண்ணும் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, அவர்கள் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இவர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதம் ஒரு கட்டத்தில் முற்றியதால் ஆத்திரமடைந்த அந்த இளைஞர், தன்னுடைய வாகனத்தை நிறுத்தி, தன்னுடன் வந்த அந்த பெண்ணை சரமாரியாகத் தாக்கியுள்ளார். மேலும், தான் அணிந்திருந்த ஹெல்மெட்டை வைத்து அந்த பெண்ணை தாக்கியதாகக் கூறப்படுகிறது. 

இதனைப் பார்த்த அங்கிருந்த சிலர், அந்த இளைஞரை தடுத்து நிறுத்தியுள்ளனர். இந்த தாக்குதலில், அந்த இளம்பெண் சம்பவ இடத்திலேயே கீழே விழுந்து மயக்கமடைந்துள்ளார். சிறிது நேரம் கழித்து, அந்த இளைஞர், இளம்பெண்ணை மீட்டு உடனடியாக மீட்டு இருசக்கர வாகனத்தில் அமரவைத்து உடனடியாக அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளார். இதனை அங்கிருந்த சிலர் தங்கள் செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பொது இடத்தில் இளம்பெண் ஒருவரை கையாலும், ஹெல்மெட்டாலும் கொடூரமாக தாக்கிய இளைஞர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வழக்கறிஞர் ஜோசப் என்பவர் ஆன்லைன் மூலம் சென்னை காவல்துறைக்கு புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக அந்த இளைஞர் யார் என்பது குறித்து இருசக்கர வாகன எண்ணை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். பொது இடத்தில் இளம்பெண் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட ஆயுதங்கள்; ரோபோக்களைக் கொண்டு சோதனை

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 seized at home; Testing with robots

மேற்கு வங்கத்தில் வீடு ஒன்றிலிருந்து ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் தற்போது அந்தப் பகுதியில் ரோபோக்களைக் கொண்டு ஆயுதங்களை பறிமுதல் செய்ய பாதுகாப்புப் படையினர் அதிகப்படியாக குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் 18-வது மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில் சந்தோஷ்காளி விவகாரம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மேற்கு வங்கத்தில் சந்தோஷ்காளி பகுதியில் ஆயுதங்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக சிபிஐ போலீசாருக்கு தகவல் வந்தது. தேர்தல் வன்முறையில் பயன்படுத்துவதற்காக ஆயுதங்கள் குவிக்கப்பட்டுள்ளதாக சந்தேகம் எழுந்த நிலையில் சிபிஐ  போலீசார் சந்தோஷ்காளி பகுதியில் சோதனை நடத்த முடிவு செய்தனர்.

அதனைத் தொடர்ந்து வீடு ஒன்றில் துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் மேலும் அங்கு அதிகப்படியான ஆயுதங்கள் இருக்க வாய்ப்பு இருப்பதாக சிபிஐக்கு சந்தேகம் எழுந்தது. மனிதர்களால் ஆய்வு செய்தால் குண்டு வெடிப்பு உள்ளிட்ட அசம்பாவிதங்கள் நடைபெறலாம் என்ற யூகத்தின் அடிப்படையில் தேசிய பாதுகாப்புப் படையினர் வரவழைக்கப்பட்டனர். தேசிய பாதுகாப்புப் படையின் சார்பாக ரோபோ கருவிகள் மூலமாக வெடிகுண்டு மற்றும் ஆயுதங்கள் அங்கிருந்து பறிமுதல் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் அதிகப்படியாக பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் மட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே அங்கு திரிணாமுல் காங்கிரஸ் முன்னாள் நிர்வாகி ஷாஜகான் என்பவர் சந்தோஷ்காளி பகுதியில் ஆதரவாளர்களைத் திரட்டி ஆயுதங்களை வைத்து வன்முறையில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.