Skip to main content

''நீட், ஜிஎஸ்டி, கச்சதீவு... பிரதமருக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன்''-மு.க.ஸ்டாலின் பேச்சு!

Published on 26/05/2022 | Edited on 26/05/2022
dmk

 

பிரதமர் மோடி 31,500 கோடி ரூபாயில் 11 திட்டங்களை தொடங்கி வைக்க இருக்கும் நிகழ்ச்சி நேரு உள்விளையாட்டு அரங்கில்  தற்பொழுது தமிழ்த்தாய் வாழ்த்துடன் துவங்கியது. பிரதமர் மோடி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, மத்திய அமைச்சர் எல்.முருகன் ஆகியோர் ஒரே மேடையில் இடம்பெற்றனர்.

 

l murugan

 

நிகழ்வில் வரவேற்புரை ஆற்றிய மத்திய அமைச்சர் எல்.முருகன்,'' வரலாற்றில் தமிழகத்தினுடைய உள்கட்டமைப்புக்கு இன்று முக்கியமான நாள். 31 ஆயிரம் கோடி ரூபாய்க்கான நலத்திட்டங்களைத் துவக்கி வைக்கும் பிரதமர் மோடிக்கு நன்றி. சாமானிய மக்களுடைய ஆளுநர் ஆர்.என்.ரவியை வரவேற்கிறேன். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினையும் வரவேற்கிறேன். விழாவில் கலந்து கொண்டுள்ள தமிழக அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் எனது வரவேற்பை தெரிவித்துக் கொள்கிறேன்''என்றார்.  

 

mk

 

அதனைத்தொடர்ந்து பேசிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ''திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு தமிழகத்தில் பிரதமர் பங்கேற்கும் முதல் நிகழ்வு இது. தமிழக வளர்ச்சிக்கான திட்டங்களை துவக்கி வைக்க வந்திருக்கும் பிரதமருக்கு நன்றி. சமூகநீதி, சமத்துவம், பெண்கள் முன்னேற்றம் என பல அம்சங்களை உள்ளடக்கியது தமிழக வளர்ச்சி. அனைவரையும் உள்ளடக்கிய இந்த வளர்ச்சியைத்தான் திராவிடம் மாடல் என்று குறிப்பிடுகிறோம். இந்தியாவின் வளர்ச்சியில் தமிழகத்தின் பங்களிப்பு முக்கியமானது. ஜி.எஸ்.டி இழப்பீடு காலத்தை இரண்டு ஆண்டு காலத்திற்கு நீட்டிக்க வேண்டும். வரியை பகிர்ந்தளிப்பதே உண்மையான கூட்டாட்சி. ஒன்றிய, மாநில அரசுகள் இணைந்து நிறைவேற்றும் திட்டங்களில் சமமாக நிதி சுமையை ஏற்க வேண்டும்.

 

இந்திக்கு இணையாக தமிழை அலுவல் மொழியாகவும், வழக்காடு மொழியாகவும் அறிவிக்க வேண்டும். தமிழக மீனவர்களின் முக்கிய பிரச்சனைக்கு தீர்வுகாணும் வகையில் கச்சத்தீவை மீட்டெடுத்து தமிழக மீனவர்கள் பாரம்பரிய மீன்பிடி உரிமையை நிலைநாட்ட, உரிய நடவடிக்கை எடுக்க இதுவே தகுந்த தருணம் என பிரதமருக்கு நினைவுபடுத்த கடமைப்பட்டிருக்கிறேன். தமிழ்நாட்டுக்கு வரவேண்டிய ஜி.எஸ்.டி இழப்பீடு தொகை 14 ஆயிரத்து 6 கோடி ரூபாயை விரைந்து வழங்கிட வேண்டும் என கோரிக்கை வைக்கிறேன். நீட் தேர்வுக்கு தமிழக அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. நீட் விலக்கு சட்ட மசோதாவுக்கு மத்திய அரசு அனுமதி அளிக்க வேண்டும் என தமிழ்நாட்டு மக்கள் சார்பில் கேட்டுக்கொள்கிறேன். இந்த கோரிக்கைகளில் உள்ள நியாயத்தை பிரதமர் உணருவார் என உளமார நம்புகிறேன்'' என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்